விவாதமேடை

"லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கில் போட வேண்டும் என்கிற யோசனை ஏற்கத்தக்கதா? விலக்கத்தக்கதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

பாவச்செயல்

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கில் போட வேண்டும் என்கிற யோசனை விலக்கத்தக்கது. லஞ்சம் வாங்குவது மன்னிக்க முடியாத குற்றமாகவே இருப்பினும், அதற்காக தூக்கிலிட்டு ஓர் உயிரை கொல்வது  என்பது பாவச்செயல். மேலும், அவர்களின் குடும்பத்தினர் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை, கடுமையான தண்டனைகள் மூலம் திருத்த முயற்சிப்பதே ஏற்புடையதாகும். தூக்கு தண்டனை வழங்குவது தவறு.

வ. ரகுநாத், மதுரை.

முன்மாதிரி நாடு

இந்த யோசனை ஏற்கத்தக்கதே. இதனை உடனே சட்டமாக்க வேண்டும். சட்டம் 
ஆக்கப்பட்டால் உலக நாடுகளுக்கு முன்மாதிரி நாடாக இந்தியா திகழும். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தி அவர்களிடம் லஞ்சம் கொடுத்தவர்களின் பெயர்பட்டியலைப் பெற்று அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும். லஞ்சம் பெற்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி. 

நோய்த்தொற்று

நம் நாட்டில் லஞ்சமும், ஊழலும் அனைத்துத் துறைகளிலும் பரவி விட்டது. அரசியல்வாதிகள் தொடங்கி அதிகாரிகள் வரை எல்லாரிடத்திலும் பரவலாக உள்ள இந்த நோய்த்தொற்றை முறியடிக்க கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். லஞ்சத்திற்கு எதிரான இயக்கங்கள் தொடங்கப்பட வேண்டும். ஆயினும்,ஜனநாயக நாட்டில் தண்டனை என்ற பெயரில் ஒருவரைத் தூக்கிலிடுவது உகந்ததாக இருக்காது.  

மா. பழனி, தருமபுரி.

குறுக்கு வழி

அரசு அலுவலகங்களில் லஞ்சம் என்பது இப்போது தவிர்க முடியாதது. அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு அவர்கள் மட்டும் காரணமல்ல. தங்கள் காரியம் விரைவில் முடிய வேண்டும் என்பதற்காக பொதுமக்கள்தான் குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து அதிகாரிகளை ஊக்குவிக்கின்றனர். லஞ்சம் வாங்குபவர்களை கண்டுபிடித்து, அவர்களைப் பணி நீக்கம் செய்யலாம். பொதுமக்களும் லஞ்சம் தராமலிருக்க வேண்டும்.   

கு. அருணாசலம், தென்காசி. 

சமூக நிலை

லஞ்சம் வாங்க மறுத்து நேர்மையான முறையில் பணியாற்றும் அதிகாரிகள் இன்றைய நிலையில் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் அல்லது படுகொலை செய்யயப்படுவார்கள். அந்த அளவுக்கு இன்று சமூக நிலை உள்ளது. கடைநிலை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை லஞ்ச நோய் பரவியுள்ளது. லஞ்சம் வாங்குவோரைத் தூக்கில் போட ஆரம்பித்தால் ஒரு சில அதிகாரிகள்தான் மிஞ்சுவர். இப்போது உள்ள சட்டங்களை வைத்தே   லஞ்சத்தை ஒழிக்கலாம்.

கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.

அச்சம்

இப்போது இருக்கும் சட்ட நடைமுறைகளால் லஞ்சம் வாங்கும் பெரும்பாலான உயர் அதிகாரிகள் தப்பி விடுகின்றனர். கீழ்நிலையில் உள்ள ஒரு சிலர் மட்டுமே சிக்கிக் கொள்கின்றனர். பணி இடமாற்றம் ஒரு தண்டனை அல்ல. உடனடி பதவி நீக்கம், ஓய்வூதிய நிறுத்தம் போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் லஞ்சம் வாங்குபவர்களுக்கு அச்சம் வரும். லஞ்சத்தை ஒழிக்க இது ஒன்றுதான் வழி.

கே. விஸ்வநாதன், கோயமுத்தூர். 

மன்னிக்க இயலாத குற்றம்

நம் நாடு ஜனநாயக நாடு. மிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. அதுவும், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு கொடுக்கப்பட்டு பல நேரம் ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகிறது. லஞ்சம் வாங்குவது மன்னிக்க இயலாத குற்றமே. லஞ்சம் வாங்குபவருக்கு உடனடி வேலை நீக்கம் மற்றும் பணிக்கொடை நிறுத்தம் போன்ற தண்டனைகளை வழங்கலாம். தூக்கு தண்டனை தேவையில்லை.   

ப. தாணப்பன், தச்சநல்லூர்.

புறக்கணிக்க வேண்டும்

இறைவன் படைத்த உயிரை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்கலாம். ஆனால் அது தூக்கு தண்டனையாக இருக்கக் கூடாது. லஞ்சம் வாங்குபவர்களை சமூகம் புறக்கணிக்க வேண்டும். அவர்களுக்கு அரசாங்கத்தின் எந்த சலுகையும் கிடைக்காது என்று அறிவித்து, ஒட்டுமொத்தமாக அவர்கள் குடும்பத்தை ஒதுக்கி வைத்தால் அதுவே பெரிய தண்டனையாகும்.  

தி. பச்சமுத்து, கிருஷ்ணகிரி.

பாடம்

இந்த யோசனை சரியே. அரசு அதிகாரிகளுக்கு தற்போது வழங்கப்படும் ஊதியமும் அதிகம்; ஓய்வூதியமும் அதிகம். அப்படியிருக்க அவர்கள் லஞ்சம் வாங்குவது மிகமிகத் தவறு. அது தேசத்திற்கு செய்யும் துரோகமாகும். தேசத்திற்கு துரோகம் செய்பவர்களை தூக்கில் போடுவதுதான் அவர்களுக்கு சரியான தண்டனை. அது மற்றவர்களுக்கு ஒரு பாடமாகவும் அமையும். பயிர் நன்கு வளர வேண்டுமானால் களைகளை நீக்கித்தான் ஆக வேண்டும்.

கே. அனந்த நாராயணன், கன்னியாகுமரி. 

ஆணிவேர்

லஞ்சம் என்பது கடுமையான குற்றம் என்பதில் இரு வேறு கருத்தில்லை. பல குற்றங்களின் ஆணிவேர் லஞ்சம். ஆனால், மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகெங்கும் நிலவும் சூழலில், லஞ்சம் பெற்றால் மரண தண்டனை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. லஞ்சம் ஒழிய சமுதாய மாற்றம் ஏற்பட வேண்டும். தனி மனித ஒழுக்கம் மூலமே சமுதாய மாற்றம் சாத்தியமாகும்.    

க. ரவீந்திரன்,  ஈரோடு. 

தீர்வல்ல

இந்த யோசனை நிச்சயமாக விலக்கத்தக்கது. லஞ்சம் வாங்குவது தவறுதான். லஞ்சம் வாங்குபவரை பணி நீக்கம் செய்யலாம். அவரைத் தூக்கில் போட்டால் அவருடைய குடும்பத்தின் நிலை என்ன ஆகும் என்பதை யோசிக்க வேண்டும். லஞ்சம் வாங்குபவர்களுக்கு வேறு ஏதாவது கடுமையான தண்டனை கொடுக்கலாமே தவிர தூக்கில் போடுவது தவறு. எந்தக் குற்றத்துக்கும் தூக்கு தண்டனை தீர்வல்ல.

உஷா முத்துராமன்,  மதுரை.

முட்டுக்கட்டை


இந்த யோசனை சரியே. நாட்டு முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது லஞ்சமும் ஊழலும்தான். லஞ்சம் வாங்குபவர்களைத் தண்டிக்க தற்போது கடுமையான சட்டங்கள் இருந்தும் அவை பலனளிப்பதில்லை. நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதால் வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டு நீர்த்துப் போகும் நிலையே உள்ளது. இந்த நிலையில் தூக்கு தண்டனை ஒன்றே லஞ்சத்தை ஒழிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

மு.அ.ஆ. செல்வராசு, வல்லம்.    

குற்றவாளிகள் 

லஞ்சம் வாங்குவது குற்றம் என்றால் கொடுப்பதும் குற்றமல்லவா? இருவரும் குற்றவாளிகள்தான். குற்றம் நடந்து உண்மை என்றால் விரைவில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு உடனே வழங்கப்பட வேண்டும். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் சொத்துகளை அரசு கைப்பற்ற வேண்டும். தூக்கு தண்டனை குற்றவாளியின் உயிரைத்தான் போக்கும். அவன் தன் வாழ்நாள் முழுதும் தான் செய்த தவற்றை எண்ணி வருந்த வேண்டும். எனவே, தூக்கு தண்டனை வேண்டாம்.       

ச. கண்ணபிரான், திருநெல்வேலி.  

தடுக்க முடியாது

நம் நாட்டில் லஞ்சம் கொடுத்தும் லஞ்சம் வாங்கியும் பழகி விட்டார்கள். இனி இதை முழுமையாகத் தடுக்க முடியாது. ஓரளவு கட்டுப்படுத்தலாம். லஞ்சம் வாங்குபவர்கள் அவர் பெறும் தொகையை பல அதிகாரிகளுக்கும் தர வேண்டியிருக்கிறது. இதில் கீழ் நிலையில் இருப்பவர் மட்டுமே மாட்டிக் கொள்கிறார். ஆகவே, லஞ்சத்தை ஒழிப்பது என்பது தூக்கு தண்டனையால் மட்டும் முடியாது. தனி நபரின் மனமாற்றம் மூலமே சாத்தியப்படும். 

ந. சண்முகம், திருவண்ணாமலை. 

மக்கள்தொகை

லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்அனைவருக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்றால், நாட்டின் மக்கள்தொகையே பாதியாகக் குறைந்துவிடும். லஞ்சம் வாங்கும் அதிகாரியை பணி நீக்கம் செய்வதோடு, அவருடைய வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வருமான வரி நிரந்தர கணக்கு எண் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். அப்போதுதான் மற்றவர்களும் திருந்த வாய்ப்பாக இருக்கும்.   

க. கமலகண்ணன், சென்னை. 

சாதாரண விஷயம்

இந்த யோசனை ஏற்கதக்கதே. ஏனெனில், லஞ்சம் வாங்காமல், நேர்மையாகப் பணியாற்றுபவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சமூகத்தில் அனைவருமே ஏளனம் செய்யும் அளவுக்கு லஞ்சம் என்பது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. கரோனா தீநுண்மியைவிட லஞ்சம் கொடுமையான நோய்த்தொற்றாகப் பரவியிருக்கிறது. லஞ்சத்தை முழுமையாக அழிக்க வேண்டுமென்றால் இப்படியொரு சட்டம் வந்தால் மட்டுமே முடியும். 

நரேசு தமிழன், சேலம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT