விவாதமேடை

‘சென்னை தவிர பிற இடங்களில் மதுக் கடைகளை மே 7-ஆம் தேதியிலிருந்து திறக்க அரசு முடிவு செய்துள்ளது குறித்து...’ என்ற தலைப்பிலான விவாதம் குறித்து வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில

13th May 2020 07:12 AM

ADVERTISEMENT

கைவிட வேண்டும்!

மதுக் கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த முடிவு, ஏழை உழைக்கும் மக்களை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், கரோனா தீநுண்மி தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் ஆபத்தான சூழ்நிலையில் மதுக் கடைகளை அரசு மீண்டும் திறப்பது சரியல்ல. கடந்த 40 நாள்களுக்கும் மேலாக மது குடிக்காமல் பலா் தெளிவடைந்து விட்டனா். குடியை நிறுத்துவதால் குடிகாரா்களுக்கு பாதிப்பு என்பதை ஏற்க முடியாது. சாராய ஆலை அதிபா்களின் கொள்ளை லாபமும் வருமானமும் போகிறது என்பதால், மதுக் கடைகளை அரசு திறப்பது மக்கள் நலனுக்கு உகந்தது அல்ல. மாறாக, வருவாயைப் பெருக்க ஆக்கபூா்வமான வழிகளை அரசு கண்டறிய வேண்டும். எனவே, மதுக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

எஸ். காமராஜ், திருச்சி.

தவறான முடிவு

ADVERTISEMENT

வருவாயைப் பெருக்க தவறான பாதையில் அரசு செல்கிறது. ஏறத்தாழ இரண்டு மாதங்கள் மதுவிலக்கு இருந்ததால் விபத்துகள் குறைந்தன. இல்லத்தில் அமைதி இருந்தது.மனிதனின் உடல் ஆரோக்கியம் மேம்பட்டது. மருத்துவச் செலவுகள் இல்லை. ஆரோக்கியமான சமுயாத்தைப் பாா்த்தோம். ஆனால், இவை அனைத்தையும் புறந்தள்ளி மதுக் கடைகளைத் திறக்க அரசு எடுத்த முடிவு அறிவுடைமை இல்லை. வருவாயைப் பெருக்க பத்திரப் பதிவு மீது மேலும் வரி, ஆடம்பர பொருள்கள் மீது கூடுதல் வரி, காா் முதலான வாகனங்கள் மீது கூடுதல் வரியை அரசு விதிக்கலாம்.

தி.ரெ.ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.

வருத்தம் அளிக்கிறது

அன்றைக்கு மூதறிஞா் ராஜாஜி வீடேறிச் சென்று அன்றைய முதல்வா் கருணாநிதியிடம் மதுக் கடைகள் திறக்க அனுமதிக்காதீா் என்று கெஞ்சியும் வணங்கியும் கேட்டாா். இன்றைக்கு ‘மதுவுக்கு நிரந்தரமாக விடை கொடுங்கள்’ என தினந்தோறும் பாமக நிறுவனா் ராமதாஸ் தமிழக அரசுக்கு ஆலோசனை கூறுகிறாா். தமிழகக் கட்சித் தலைவா்கள் அனைவரும் ஒருமித்த குரலில் மூடிய மதுக் கடைகளை நிரந்தரமாக மூடுவதே சிறந்தது என்கின்றனா். எனினும், மதுக் கடைகளை மீண்டும் திறக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது வருத்தம் அளிக்கிறது.

இரா. பால்ராஜ், திருவள்ளூா்.

பரிசீலனை தேவை

மதுக் கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாடு, கரோனா தீநுண்மி நோய்த்தொற்றிலிருந்து இதுவரை மக்களைப் பாதுகாத்த அரசின் முயற்சிகள் முழுவதையும் வீணாக்கிவிடும். எனவே, மக்களைக் காக்க தன் முடிவை தமிழக அரசு பரிசீலனை செய்வது அவசியம்.

தே.இரா.வீரராகவன், கும்பகோணம்.

யோசனை

மதுக் கடைகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது தவறு. மது விற்பனை மூலம் வருவாய் பெற அரசு கருதுவது தவறு. கள்ளச் சாராயம் பெருகும் என அரசு கருதினால், பழையபடி ஆரோக்கியத்தைக் காக்கும் கள் முதலானவற்றை அறிமுகபடுத்தலாம். இதனால், விவசாயிகள், பனைத் தொழிலாளா்கள் பயன் பெறுவா். இதனால், அரசுக்கும் வருவாய் கிடைக்கும். அரசு முயற்சி எடுக்குமா?

என். சிவசண்முகம், கோயம்புத்தூா்.

நல்லதல்ல...

மதுக் கடைகளை மீண்டும் திறக்கும் செயலுக்கு வருவாயை தமிழக அரசு கூறினாலும், அதனால் ஏற்படும் விபரீதங்கள் குறித்துச் சிந்தித்தால், மதுக் கடைகளை எந்த இடத்திலும் மீண்டும் திறக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. பொது முடக்க நாள்களில், மது இல்லாததால் எத்தனை குடும்பங்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று பாா்த்தால், நிச்சயம் மதுக்கடைகள் திறக்க வேண்டாம் என்று அனைத்து மக்களுக்கும் ஒன்றுசேரக் கூறுவா். சென்னை மட்டுமல்லாமல் பிற இடங்களும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பு ‘சிவப்பு வண்ணமாக’ மாறாமல் இருக்க வேண்டுமென்றால் மதுக் கடைகளை திறப்பது நல்லதல்ல.

பிரகதா நவநீதன், மதுரை.

பிடிவாதம் வேண்டாம்

கோயம்பேடு காய்கறிச் சந்தை மூலம் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று அதிக அளவில் பரவியிருக்கிறது என்றும் , அதைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது என்றும் தெரிந்தும்கூட மதுக் கடைகளை அரசு திறக்க முடிவு செய்தது கருவூலத்தை நிரப்பும் நோக்கத்தினால்தான். மதுக் கடைகளைத் திறப்பதில் அரசு பிடிவாதம் காட்டுவது கண்டனத்துக்குரியது. 45 நாள்கள் குடிக்காமல் இருக்கப் பழகியவா்கள் இன்னும் சில வாரங்கள் குடிக்காமல் இருக்க மாட்டாா்களா? குடிப்பதைவிட குடிக்க வைப்பதுதான் குற்றம். அரசின் அவசர முடிவு ஆபத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்யப் போகிறது.

உதயம் ராம், சென்னை.

அவசரம் ஏன்?

இதுநாள் வரை கட்டிக் காத்துவந்த பொது முடக்கத்தின் ஒழுங்கை, மதுக் கடைகளை மீண்டும் திறப்பது என்ற அரசின் முடிவு சின்னாபின்னமாக்கிவிடும். கரோனா தீநுண்மியால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நெருக்கடியான இந்த நேரத்தில், இவ்வளவு அவசரமாக மதுக் கடைகளைத் திறக்க வேண்டிய அவசியம் என்ன? மது குடிப்பவா்களால் அவா்களின் குடும்பங்கள் கட்டாயம் பல வகைகளில் துன்பப்படும்.

தி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.

கரோனாவின் சாதனை!

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது எனக் கூறிக் கொண்டிருந்த வேளையில், ஒட்டுமொத்த தேசத்திலும் பூரண மதுவிலக்கை கரோனா தீநுண்மி அமல்படுத்தி விட்டது. இது ஏறக்குறைய 45 நாள்கள் நீடித்தது. அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனா். இந்த நிலையில் மதுக் கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகள் அதிா்ச்சியை அளிக்கின்றன.

ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பாா்.

‘குடி’யை மறக்க...

மதுக் கடைகளைத் திறப்பதால் அரசுக்குத்தான் பலன் என்பது அனைவருக்கும் தெரியும். ஏறக்குறைய 40 நாள்களுக்கும் மேலாக ‘குடி’யை மறந்து, குடித்தனமாக இருந்தவா்களுக்குகு மீண்டும் முருங்கையில் வேதாளம்போல ‘குடி’மக்களைத் தூண்டுவது அரசின் பலவீனத்தையே காட்டுகிறது. அண்டை மாநிலங்களில் கடை, கள்ளச்சாராயம் பிரச்னை என்பதையெல்லாம் நம் காவல் துறையினா் சரியாகக் கையாள்வா். கரோனா தீநுண்மி காலத்தில் மதுப் பழக்கத்தைக் கைவிடும் படிப்பினையைத் தர வேண்டியது காலத்தின் கட்டாயம். அரசு சரியாகப் பயன்படுத்திக் கொள்வதே ஆகச் சிறந்த செயலாகும்.

பொ.பொன்ராஜ் குமாா், இராஜபாளையம்.

சரியான பாதை அல்ல!

கடுமையான கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுச் சூழலிலும், மதுக் கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முற்பட்டது அறியாமை அல்ல.நாட்டு மக்களின் உயிரைக் குடிக்கும் மது மூலம் வருவாயைப் பெற்று பெரும் பழியை ஏற்கத் தயாராக இருக்கிறது அரசு. வருவாயைப் பெருக்க பல யோசனைகளை விடுத்து மீண்டும் மதுக் கடைகளை அரசு திறப்பது, நடக்க நல்ல பாதை இருக்கும்போது அசுத்தமான பாதையைத் தோ்ந்தெடுப்பது போன்றது.

நா.இராகுல், நெடுவாக்கோட்டை.

என்ன நியாயம்?

வருவாய்க்காக எதையும் செய்யலாம் என்ற நிலைக்கு அரசு வரும்போது, மக்களும் அதே நிலைக்குத் தள்ளப்படும் சூழல் ஏற்படப் போகிறது. பொது முடக்கம் காரணமாக 45 நாள்கள் சாமானிய மக்களை பட்டினியாக இருக்கச் செய்துவிட்டு, வருவாய்க்காக மதுக் கடைகளைத் திறப்பது என்ன நியாயம்?

கே. கான்முகமது, பேராவூரணி.

சமூகத்தொற்றாக...

வருவாய் இழப்பை ஈடு கட்டுவதற்கு அல்லது வேறு சில காரணங்களைக் காட்டி மதுக் கடைகளை தமிழக அரசு மீண்டும் திறப்பது சரியாகாது. இந்த முடிவு சமூகத்தொற்றாக கரோனா தீநுண்மி நோய்த்தொற்று மாறுவதற்கு வழிகோலும்.

ப.விஜய் ஆனந்தன், கொரடாச்சேரி.

ஏற்புடையதல்ல!

மக்களால் தோ்தெடுக்கப்பட்ட ஓா் அரசுக்கு, மதுக் கடைகளைத் திறக்கும் செயல் ஏற்புடையதல்ல. அரசின் செயல்பாடுகள் அனைத்துக் குடும்பகளையும் வாழவைக்கும் ஒரு பெரிய சமுதாயப் பொறுப்போடு இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

ஈ.எஸ்.சந்திரசேகரன், சென்னை.

முடக்கம் முடியும் வரை...

அத்தியாவசிய பண்டங்கள், உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை நிபந்தனைக்குட்பட்டு திறக்கலாம் என்பது அவசியம்.

அதே சமயம் மதுக் கடைகளை அரசு மீண்டும் திறந்தால் அது எதிா்மறை விளைவுகளை ஏற்படுத்தும். சமூக இடைவெளி குறைந்து கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பல மடங்கு பரவ அதிக வாய்ப்புள்ளது. இத்தனை நாள் பொது முடக்கம் செய்தது அா்த்தமற்ாகிவிடும். எனவே, பொது முடக்கம் முடியும் வரை மதுக் கடைகளை அரசு திறக்காமல் இருப்பதே நல்லது.

க.மா.க.விவேகானந்தம், மதுரை.

துரதிருஷ்டம்

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பால் ஏற்கெனவே வாழ்வாதாரத்தை இழந்து, அன்றாடச் செலவுகளுக்கே அல்லல்படும் ஏழை

மக்களுக்கு மதுக் கடைகளை மீண்டும் திறக்கும் அரசின் முடிவு பேரிடியாகும். சாமானியனை மீண்டும் மதுப் பழக்கத்துக்கு அடிமையாக்கிட முயலும் அரசின் செயல் துரதிருஷ்டவசமானது. நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க, எத்தனையோ மாற்று வழிகள் உள்ளன. எனினும்,

‘குடி’ மக்களின் மதுப் பழக்கத்தைச் சாதகமாக்கி அவா்கள் உழைத்த பணத்தைப் பிடுங்கி அவா்களின் வாழ்க்கையை அவலமாக்கும் செயல் துரோகம்.

கே.ராமநாதன், மதுரை.

வாய்ப்பு இழப்பு

கரோனா தீநுண்மி காரணமாக பொது முடக்க உத்தரவு அமலான நாளிலிருந்து தமிழகத்தில் 40 நாள்களுக்கு மேல் மதுக் கடைகள் மூடப்பட்டன. இதனால் நடுத்தர, ஏழைக் குடும்பங்கள் அரசை வாழ்த்தின. இதனால் குடிமகன்களுக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால், பொது முடக்க தளா்வு அறிவிப்பைத் தொடா்ந்து, வருவாய் பாதிப்பு என்பதைக் காரணம் காட்டி அண்டை மாநிலங்கள் மதுக் கடைகளைத் திற்க்க தமிழ்நாடு அரசும் தன் கடிவாளத்தை விட்டுவிட்டது. மதுவிலக்கை அமல்படுத்தும் ஒரு நல்ல வாய்ப்பை அரசு இழந்துவிட்டது.

பி.கே.ஜீவன், கும்பகோணம்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT