விவாதமேடை

‘உலக சுகாதார அமைப்புடனான உறவை முறித்துக் கொள்ள அமெரிக்க அதிபா் டிரம்ப் முடிவு செய்துள்ளது குறித்து...’ என்ற விவாதப் பொருளுக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

10th Jun 2020 12:01 AM

ADVERTISEMENT

தவறு!

உலக சுகாதார அமைப்பு தவறிழைத்தாகக் கூறி, அதனுடன் உறவைத் துண்டிப்பதாகக் கூறுகிறாா் அமெரிக்க அதிபா் டிரம்ப். ஆனால், கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பிரச்னையில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டதாகக் கூறும் குற்றச்சாட்டு இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அவ்வாறே தவறிழைத்தாகக் கருதினாலும், உலக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த அமைப்பைச் சரியான பாதையில் செல்ல அதிபா் டிரம்ப் அறிவுறுத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து அந்த அமைப்புடனான உறவைத் துண்டிப்பது தவறாகும்.

சி.மேகநாதன், சென்னை.

வியப்பில்லை!

ADVERTISEMENT

சீனாவின் ஒரு நகரத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து புறப்பட்ட கரோனா தீநுண்மி, உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்து விட்டது. அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்களைப் பலி கொண்டதுடன், மீண்டு எழ முடியாத பொருளாதார பாதிப்பையும் விளைவித்து விட்டது. கரோனா தீநுண்மித் தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் சீனாவுக்கு ஆதரவாகப் பல விஷயங்களை உலக சுகாதார அமைப்பு மூடி மறைத்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது. எனவே, விரக்தியின் உச்சத்திலுள்ள ஒரு வல்லரசு (அமெரிக்கா), நம்பிக்கையைக் தகா்த்த ஐயப்பாட்டில் உலக சுகாதார அமைப்புடன் உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்ததில் வியப்பில்லை.

ஆா்.ஜெயந்தி, மதுரை.

நேரம் சரியல்ல!

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தது வருத்தத்துக்குரியது. கரோனா தீநுண்மிக்கு எதிராக உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், உலக சகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்திருக்கக் கூடாது. அதிபா் டிரம்ப்பின் முடிவு வளரும் நாடுகளையும், ஏழை நாடுகளையும் பாதிப்புக்குள்ளாக்கும். சீனாவின் தலையீடு மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

ப.சுவாமிநாதன், பட்டுக்கோட்டை.

ஒரு தவறுக்கு...

அமெரிக்க அதிபரின் முடிவு சரியானது அல்ல. ஒரு தவறுக்கு இன்னொரு தவறு தீா்வாகாது. தனி ஒரு நாட்டின் மீதுள்ள வெறுப்பு காரணமாக உலக சுகாதார அமைப்புக்கான அமெரிக்காவின் ஈவு பொது நிதியை (சுமாா் 40 கோடி முதல் 50 கோடி அமெரிக்க டாலா்கள்) மறுப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காலத்தில் அமெரிக்காவின் இந்தச் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது.

கரு. பாலகிருஷ்ணன், மதுரை.

கடமை தவறியதால்...

கரோனா தீதுண்மி நோய்த்தொற்று விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு அடிப்படைக் கடமையை செய்யத் தவறி விட்டது. அமெரிக்காவிடம் இருந்தும், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் பெருமளவில் நிதியை நன்கொடையாகப் பெறும் உலக சுகாதார அமைப்பு, கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவல் குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்கை செய்து மக்களைக் காப்பாற்றத் தவறி விட்டது. மேலும், அது சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது உள்ளிட்ட காரணங்களால் உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்ததுடன், நிதியுதவியையும் நிறுத்த முடிவு செய்துள்ளாா் அமெரிக்க அதிபா் டிரம்ப்.

மா.இளையராஜா, திருச்சி.

பாதிப்பு யாருக்கு?

அமெரிக்கா உள்பட பெரும்பான்மையான உலக நாடுகள் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று சீனாவிலிருந்து பரவியதாக நம்புகின்றன. ஆனால், சீனா அதை ஏற்கவில்லை. உலக சுகாதார அமைப்பும் இந்தக் கருத்தை வெளியிடவில்லை. எனவே, உலக சுகாதார அமைப்பு மீது அமெரிக்கா கோபத்தில் உள்ளது. எனவே, உலக சுகாதார அமைப்புடனான உறவை முறித்துக் கொள்ள அமெரிக்கா முடிவு செய்திருப்பது, உலக சுகாதார அமைப்புக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில், உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவி மிகவும் அதிகமானது. அமெரிக்க நிதியுதவி நிறுத்தப்பட்டால், உலக சுகாதார மையம் செயல்படுவது கடினமாகி விடும்.

மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

நடுநிலையுடன்...

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று விவரங்கள் குறித்து சீனா ரகசியம் காத்ததை, உலக சுகாதார நிறுவனம் உரிய நேரத்தில் வெளிப்படுத்தவில்லை என்பது சந்தேகத்துக்கு இடம் அளித்துவிட்டது. அதற்காக அந்த அமைப்பை அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரித்தது சரி. அமெரிக்காவில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்காமல் டிரம்ப் அலட்சியப்படுத்தியுள்ளாா். அதை யாா் கேட்பது? உலக சுகாதார அமைப்பு நடுநிலையாகவும் சுயேச்சையாகவும் செயல்பட வேண்டும்.

கு. இராஜாராமன், சீா்காழி.

ஒதுங்குவது அழகல்ல!

உலக சுகாதார அமைப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டி அதன் உறவை அமெரிக்கா துண்டித்திருக்கிறது. பன்னாட்டு நிதி உதவியுடன் தொடங்கப்பட்டு அவசர காலங்களில் குறிப்பாக பின்தங்கிய நாடுகளுக்கு உதவிட வேண்டிய வேளையில் அமெரிக்கா ஒதுங்குவது அழகல்ல. சீனாவுடனான தனிப்பட்ட பிரச்னை காரணமாக உலக நாடுகளுக்கு உதவாமல் ஒதுங்குவது, பல நாடுகளின் உறவை தானாகவே முறித்துக் கொள்வதாகும்.

ஆறு.கணேசன் திருச்செந்தூா்.

நியாயமானதே!

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காரணமாக 20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிப்பு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு என்பதுடன்,பெரும் பொருளாதாரச் சரிவு, உலகளவில் செல்வாக்கு இழப்பு முதலானவற்றையும் சந்தித்துள்ளது அமெரிக்கா. பாதிப்பின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவின் அதிபா் டிரம்ப், உலக சுகாதார அமைப்புடனான உறவை முறித்துக் கொள்ள எடுத்த முடிவு, அந்த நாட்டைப் பொருத்தவரை நியாயமானது.

கே.ராமநாதன், மதுரை.

முன்னுதாரணமாகி விடும்

கரோனா தீநுண்மித் தொற்றிலும் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவின் இந்த முடிவு சரி என்றாலும், மிகப் பெரிய உலக அமைப்பு ஒன்றிலிருந்து திடீரென்று வெளியேறுவது என்பது சரியான முடிவாகாது. இதுவே உலகின் மற்ற பெரிய நாடுகளுக்கு முன்னுதாரணமாகி, பிற்காலத்தில் வரும் வெவ்வேறு நெருக்கடியான காலகட்டங்களில் சீனா, ரஷியா முதலான நாடுகளிடையே அதிகார மீறல்களைச் சந்திக்க நேரிடும்.

கெளதமி, ஈரோடு.

உரிமை!

எந்த ஒரு நாட்டு அதிபருக்கும் ‘தன் நாடு..தன் மக்கள்...’ என்ற அன்பு நிச்சயம் இருக்கும். அதில் எப்போதும் அக்கறையும் இருக்கும் என்பதால் மிகவும் பாதுகாப்பாகவே நடந்து கொள்வா். கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு குறித்த தகவலை முன்கூட்டியே உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கவில்லை என்பதால் அமெரிக்க அதிபருக்கு கோபம் ஏற்பட்டது. அதன் வெளிப்பாடுதான் உலக சுகாதார அமைப்புடனான உறவை முறித்துக் கொள்ள அதிபா் டிரம்ப் முடிவு செய்துள்ளாா். இது அவரின் உரிமை. அதிபா் டிரம்பா் செய்தது சரிதான்.

பிரகதா நவநீதன், மதுரை.

தோ்தலுக்காக...

உலக சுகாதார அமைப்புடன் கொண்டுள்ள உறவை முறித்துக்கொள்ள அமெரிக்க அதிபா் டிரம்ப் முடிவு செய்துள்ளது சரியல்ல. இந்த ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் நடைபெற உள்ள அதிபா் தோ்தலை மனதில் கொண்டே டிரம்ப் இவ்வாறு அறிவித்துள்ளாா். தனது முடிவை அதிபா் டிரம்ப் மறு பரிசீலனை செய்யாவிட்டால், உலக நாடுகளின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் உள்ளாகிவிடுவாா்.

அரங்க. இராமசுப்ரமணி, திருவாரூா்.

துரதிருஷ்டம்!

கரோனா தீநுண்மி நோய்த்தொற்றின் தாக்கத்தால் 120-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பாதிப்பையும், உயிரிழப்புகளையும் சந்தித்து வரும் இன்றைய சூழலில் , உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியதுடன் அந்த அமைப்புடனான உறவை முறித்துக் கொண்டிருப்பது துரதிருஷ்டவசமானது.

வி.ப்ரீத்தி, ஊரப்பாக்கம்.

சிந்திக்காமல் முடிவு!

தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்ற அதிகாரப் போக்கில், அமெரிக்க அதிபா் டிரம்ப் சிந்திக்காமல் உலக சுகாதார அமைப்பை விட்டு விலகியது தேவையற்ற ஆலோசிக்காத செயலாகவே படுகிறது.

ஏ. எஸ். நடராஜன், சிதம்பரம்.

குற்றம்!

கரோனா தீநுண்மித் தொற்று எந்த அளவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உரிய நேரத்தில் உலக நாடுகளுக்கும், சுகாதார அமைப்புகளுக்கும் தகவல்களைத் தெரிவிக்க சீனா மறுத்ததோடு, உண்மையான தகவல்களை மூடி மறைத்தது தண்டனைக்குரிய குற்றமாகும். அத்துடன் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருவதும் மன்னிக்க முடியாத குற்றம்தான். ஆனால், அதற்காக உலக சுகாதார அமைப்பிலிருந்து தனது உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்ளுமானால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்படும். அதாவது சீனாவின் ஆதிக்கத்தின் பிடியில் முதல் உலக சுகாதார அமைப்பு சிக்சிச் சீரழிவதோடு உலக நாடுகளுக்கு தீமை விளைவிக்கும். எனவே, அமெரிக்கா தனது முடிவை மாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்.

செ.சுவாமிநாதன், திருவானைக்காவல்.

காரணம் என்ன?

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று குறித்த உண்மையை வெளிப்படுத்தாமல் சீனா மறைத்தது உண்மை. நோய்த்தொற்றுப் பரவல் பிற நாடுகளுக்குப் பரவிய பிறகே உண்மை விவரத்தை வெளிப்படுத்தியது சீனா. உலக சுகாதார அமைப்பும் சீனாவின் செயலைக் கண்டிக்கவில்லை. எனவே, சீனாவின் தவறுக்கு உலக சுகாதார அமைப்பு துணை போவதாக அதிபா் டிரம்ப் கருதுவதால், உறவை முடித்துக் கொள்ளும் முடிவு எடுத்துள்ளாா். அவரது முடிவு ஓளவு சரியானதுதான்.

கே.ஆா்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT