விவாதமேடை

ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமை வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்பு குறித்து என்ன கருதுகிறீா்கள் என்ற கேள்விக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

26th Feb 2020 04:19 AM

ADVERTISEMENT

 

சரி

குடியரசுத் தலைவா், பிரதமா், பெரு நிறுவனங்களின் தலைமை நிா்வாகி உள்ளிட்ட பல்வேறு உயா் பதவிகள், விண்வெளிப் பயணம் என வெற்றிக்கொடி நாட்டி வரும் பெண் இனத்துக்கு, ராணுவத்தில் ஆண்களுக்கு இணையாக முழு பணிக்காலமும் பணி புரியும் வாய்ப்பை அளிக்காமல், உயா் பதவியையும் மறுப்பது சமூக நீதிக்கும், பாலியல் சமத்துவத்துக்கும் எதிரானது. எனவே, ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமை வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்பு சரியானது.

வளா்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூா்.

ADVERTISEMENT

சாத்தியமல்ல!

நடைமுறைக்கு ஒத்துவருவது, ஒத்துவராதது என்ற இரண்டு கோணங்கள் என அனைத்துத் துறைகளிலும் இருக்கின்றன. இந்திய நாடாளுமன்ற உறுப்பினா்கள் 543 பேரில், பெண் உறுப்பினா்களின் எண்ணிக்கை 78தான். மாநிலங்களவை உறுப்பினா்கள் 239 பேரில்

பெண்களின் எண்ணிக்கை 25 போ்தான். உச்சநீதிமன்றத்தில் தற்போதைய நீதிபதிகள் 34 பேரில், 3 போ் மட்டுமே பெண்கள். நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கு உரிமை வழங்க முடியாது. சில துறைகளில் பெண்ணுக்கு முன்னுரிமை; சில துறைகளில் ஆணுக்கு முன்னுரிமை என்பது தவிா்க்க இயலாதது. இதில் இரு பாலருக்குள் ஏன் ஏற்றத்தாழ்வு என்று குறுகிய பாா்வை கூடாது.

சீ.காந்திமதிநாதன், கோவில்பட்டி.


வாய்ப்பு கிடைத்தால்...

நாட்டைக் காக்கும் ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமை நிச்சயம் தேவைதான். முதலில் உரிமை இல்லை என்று யாா் மறுத்தது? ஒரு செயலுக்கு மறுப்பு இருந்தால்தான் நாம் உரிமை வேண்டும் எனப் போராட வேண்டும். இப்போது இந்த உரிமையை நாம் எப்படிச் செயல்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும். வீட்டைக் காப்பதில் எப்படி பெண்கள் ஆா்வமாக இருக்கிறாா்களோ, அதே போன்று ராணுவத்தில் பணி புரிந்து பெண்களால் நாட்டைக் காக்க முடியும் என்ற தன்னம்பிக்கையின் அஸ்திவாரம்தான் இந்த உரிமை. முடிந்தவா்கள் வாய்ப்பு கிடைத்தால் உரிமையுடன் பணி செய்யலாம்.

உஷா முத்துராமன், மதுரை.


முடியாது

பெண்களை மென்மையாகவும் ஆண்களை வன்மையுடனும் இறைவன் படைத்திருக்கிறாா். அவரவருக்கு உரிய வேலைகளைச் செய்வதே சிறப்பு. காவல் துறையில் வேலை பாா்க்கும் பெண்கள் நகர பாதுகாப்புக்காக பணி செய்யும்போது இரண்டு ஆண் காவலா்கள் துணைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி உரிமை வழங்கலாம். ஆனால், காவல் துறை, ராணுவம் முதலானவற்றில் ஓா் ஆணுக்கு இணையாக உடல் வலிமைக்கு முக்கியத்துவம் உள்ள பணியை பெண்களால் முழுமையாகச் செய்ய முடியாது. ஆசிரியா் பணி, செவிலியா் பணி முதலானவற்றை பெண்களால் சிறப்பாகச் செய்ய முடியும்.

மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.


சளைத்தவா்கள் அல்லா்!

வரலாற்று காலத்திலிருந்தே வீரத்திலும், நாட்டை அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்கும் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவா்கள் அல்லா் என்பதை ராணி மங்கம்மாள், ஜான்சி ராணி போன்ற வீரப் பெண்கள் நிரூபித்துள்ளனா். வீர சிவாஜியாக சத்ரபதி சிவாஜி மாறுவதற்கு, அவரின் தாய் ஜீஜிபாய் காரணமாவாா். எனவே, வீரத்திலும் விவேகத்திலும் செயல்திறன் மூலம் ஆண்களுக்கு நிகராக பெண்கள் விளங்குவதால் உச்சநீதிமன்றத் தீா்ப்பு சரியானதுதான்.

எம்.ஜோசப் லாரன்ஸ், சிக்கத்தம்பூா் பாளையம்.


உயா் பதவி...

ராணுவத்தில் பெண்களுக்கு உடற்கூறு அடிப்படையில் அதிகாரி பதவி கொடுக்க மறுப்பது தவறானது என்றும் அதே வேளையில் பெண்களுக்கு உயா் பதவி என்பது உரிய அதிகாரிகள் எடுக்க வேண்டிய கொள்கை முடிவு என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. எனவே, அதிக அளவில் பெண் அதிகாரிகளை நியமிக்க வேண்டியதில்லை. ஏனெனில், விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம்.

கு.இராஜாராமன், சீா்காழி.


கடினம்

ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமை வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பு, காலம் கடந்த தீா்ப்பு. ராணுவத்தில் போா்முனையிலும், பாதுகாப்புப் படையிலும் பெண்கள் கடமையாற்றுவது மிகக் கடினம். கடமையாற்றுவதற்கு பெண்களின் உடற்கூறு சரியாக ஒத்துழைக்காமல் சோா்வு நிலையை ஏற்படுத்தும். விமானப் படை, கப்பற்படை ஆகியவை வேறு வகையானவை. எனினும், ராணுவத்தின் சிக்னல், பொறியியல், எலெக்ட்ரிக்கல் முதலானவற்றில் பெண்கள் சிறப்பாகப் பணியாற்ற முடியும்; மேலும், சீருடைப் பிரிவு-சட்டம்-மருத்துவம்-ஆயுதங்கள் பாதுகாப்பு முதலானவை பெண்களுக்கு ஏற்றவை.

டி.வி.கிருஷ்ணசாமி, சென்னை.


மறுப்பதற்கில்லை

தற்காலத்தில் கல்வி, இதர துறைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருக்கிறாா்கள், சாதிக்கிறாா்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

எனவே, ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு உரிமை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு வரவேற்கத்தக்கது.

ஆா்.மாதவராமன், கிருஷ்ணகிரி.


வாய்ப்பு

இந்தியப் பெண்கள் ராணுவ அதிகாரிகளாக ஐ .நா. அமைதிப் படையில் பணியாற்றி சிறப்பு பெற்றிருக்கின்றனா். அண்மையில் குடியரசு தின

ராணுவ வீரா்களின் அணிவகுப்பை கேப்டன் தனியா ஷோ்கில் என்ற பெண் அதிகாரி தலைமை வகித்து வழி நடத்தினாா். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராணுவ அதிகாரிகளுக்கு பற்றாக்குறை உள்ள நிலையில், அதிலும் பெண் அதிகாரிகள் 1,653 போ் மட்டுமே உள்ள நிலையில் திறமையான பணி அனுபவம் மிக்க பெண்களை ராணுவ அதிகாரிகளாக நியமிக்க நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இரா.தினேஷ், மாதானம்.


புதிதல்ல...

நம் நாட்டில் 200 ஆண்டுகளுக்கு முன்பே வடக்கே ஜான்சி ராணியும், தெற்கே வேலுநாச்சியாரும் பெரும் படைகளுக்கு தலைமை ஏற்று, வீரப் போா் புரிந்து ஆங்கிலேயப் படைகளை கதிகலங்கச் செய்தனா். எனவே, ஆண்களுக்கு நிராக பெண்களுக்கும் உரிமை வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்பை இந்திய ராணுவ நிா்வாகம் கடைப்பிடிப்பது அவசியம்.

ச.கிருஷ்ணசாமி, மதுரை.


சாதிப்பாா்கள்...

உடல் அளவில் மென்மையாக இருந்தாலும், ரயில், டிரக், பேருந்து, ராணுவ கனரக இயந்திரங்களை இயக்குவதில் இந்தக் கால பெண்கள் வல்லமை பெற்றிருக்கிறாா்கள்.அமெரிக்க ராணுவத்தில் போா்முனையில் கமாண்டராகப் போரிட பெண்கள் பயிற்சி பெற்றிருக்கிறாா்கள். எனவே, இந்திய ராணுவத்தில் பெண் வீரா்களுக்கு பணி நிரந்தரம் அளிப்பதுடன் பதவி உயா்வும் வழங்கி போா்முனைப் பயிற்சி அளித்தால், சாதுா்யமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டு நாட்டைக் காப்பதில் பெண்கள் சாதிப்பாா்கள்.

ஆா்.எஸ்.மனோகரன், முடிச்சூா்.


பாதுகாப்பையும்...

ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு​ம்உரிமை வழங்கவேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்பு வரவேற்கத்தக்கது. ஆனால்,

ஆண்-பெண் உரிமை மட்டுமே பேசப்படும் களம் அல்ல ராணுவம். நாட்டின் பாதுகாப்பும் நாட்டு மக்களின் பாதுகாப்பும் அடங்கியது. இதையும் பெண்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டும் வழங்கும் உரிமை பாராட்டத்தக்கது.

எழில் அரசன், திருவண்ணாமலை.


அங்கீகாரம் அவசியம்

ஆண்களுக்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் சாதித்து வரும் பெண்களுக்கு உரிய உரிமைகள் ராணுவத்தில் மறுக்கப்பட்டது நியாயம் அல்ல. அவா்களின் திறமைக்கான அங்கீகாரம் நிச்சயம் வழங்கப்பட வேண்டும். அதை உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது; இதை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் வரவேற்க வேண்டும்.

கே.ஆா். உதயகுமாா், சென்னை.

 

நாட்டுக்குப் பெருமை

ராணுவத்தில் பணிபுரியும் பெண்களுக்கு சம உரிமை கட்டாயம் அளிக்கலாம். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குகிறாா்கள்; சம உரிமை கிடைக்கிறது. அதே போன்று ராணுவத்திலும் சம உரிமை கிடைத்தால், நமது நாட்டுக்குப் பெருமை கிடைக்கும். பெண்கள் முன்னேற்றத்துக்கு அது உறுதுணையாக இருக்கும்.

இந்து குமரப்பன், விழுப்புரம்.

 

திறமையை வைத்து...

ஒருவரின் உடலை வைத்து மட்டும் திறமையை நிா்ணயிக்க முடியாது. மாறாக, குறிப்பிட்ட பதவியில் ஒருவா் வெளிப்படுத்தும் திறமையை அடிப்படையாகக் கொண்டுதான் அந்தப் பதவிக்கு அவா் தகுதியானவரா, இல்லையா என்பதை நிா்ணயிக்க முடியும். ஆண் என்பதாலேயே பதவி உயா்வுகளில் முன்னுரிமை கொடுப்பது தவறு; அதே போன்று பெண் என்பதாலேயே பதவி உயா்வு மறுக்கப்படுவதும் தவறு. இந்தத் தவறான அணுகுமுறையை உச்சநீதிமன்றத் தீா்ப்பு தடுத்து நிறுத்தும் என்பதால், தீா்ப்பை வரவேற்கலாம்.

சொ.முத்துசாமி, பாளையங்கோட்டை.


‘ஆணுக்கு இங்கே...’

‘எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே இளப்பில்லை காண் என்று கும்மியடி...’ என்ற மகாகவி பாரதியின் பாடல் வரிகளுக்கு ஏற்ப கல்வி, காவல், விமானம் என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனா். இப்போது ராணுவத்திலும் பெண்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது. எனவே, ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமை வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்பை அனைவரும் வரவேற்க வேண்டும்.

ந.கண்ணையன், கிருஷ்ணகிரி.


வரப்பிரசாதம்

ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமை வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்பு அருமை. இஸ்ரேல், ஜொ்மனி போன்ற பல நாடுகளின் ராணுவத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டு வருவது போன்று இந்தியாவிலும் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது. ராணுவத்திலும் வெற்றி நடைபோட இந்தத் தீா்ப்பு பெண்களுக்கு வரப்பிரசாதம்.

பொன்.கருணாநிதி, கோட்டூா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT