விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "தமிழகத்தில் ஒரே நாளில் சட்டப்பேரவை தேர்தலை நடத்தினால் தேர்தல் முறைகேடுகளை தவிர்க்கலாம் என்று கூறப்படுவது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

சரியானது
 தமிழகத்தில் ஒரே நாளில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தினால் தேர்தல் முறைகேடுகளை தவிர்க்கலாம் என்பது சரியானது. ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும்போது அந்தந்த தொகுதிக்குட்பட்டவர்கள் தங்களுடைய தொகுதியிலிருந்து வாக்களிப்பார்கள். பல கட்டங்களாகத் தேர்தல் நடத்தினால் தேர்தல் நடந்து முடிந்த பகுதியிலிருந்து சிலர் தேர்தல் நடக்கவிருக்கும் பகுதிகளுக்குச் சென்று முறைகேடுகளையும் சட்டவிரோத செயல்களையும் செய்வதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம்.
 மா. பழனி, தருமபுரி.
 தில்லுமுல்லு
 வெவ்வேறு தினங்களில் தேர்தல் நடைபெற்றால் ஆளுங்கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள எதிர்க்கட்சி ஆட்சியைக் கைப்பற்ற பல தில்லுமுல்லுகளை செய்ய வழி உண்டு. தொகுதி விட்டு தொகுதி வந்து கள்ள ஓட்டு அளிக்கவும் வாய்ப்பு உருவாகும். ஒரே நாளில் தேர்தல் எனும்போது இது போன்ற தவறுகளைத் தவிர்க்கலாம். அவரவர் தொகுதியில் வாக்கு சேகரிக்க, வாக்களிக்க அந்தந்தத் தொகுதி உறுப்பினர் மற்றும் கட்சியினர் அதிகக் கவனம் செலுத்துவர்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 அரசியல் ஆதாயம்
 ஒரே நாளில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தினால் ஓரளவு ஆளும்கட்சியின் அதிகார அத்துமீறல்களைத் தவிர்க்கலாம். பல கட்டங்களாகப் பிரித்து தேர்தலை நடத்தினால் பலம் மிக்க அரசியல் கட்சியினர் அதிகார மீறலிலும், அத்து மீறலிலும் ஈடுபட வாய்ப்புண்டு. பல அரசியல் கட்சிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தொண்டர்கள் என்ற போர்வையில் குண்டர்களை களமிறக்கி அரசியல் ஆதாயம் அடைய வாய்ப்புள்ளது.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 வரவேற்கத்தக்கது
 ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவதால் கள்ள ஓட்டு போடப்படுவது கண்டிப்பாகக் குறையும். சமூக விரோதிகள் தொகுதிக்குள் நுழைவது, வன்முறையில் ஈடுபடுவது போன்றவையும் தவிர்க்கப்படும். வாக்காளர்களுக்கு ரகசியமாகப் பணமோ பரிசுப்பொருளோ தருவதையும் தடுக்கலாம். வெளியூர்காரர்கள் தொகுதிக்குள் நுழையவும் வன்முறையில்
 ஈடுபடவும் வாய்ப்பு கிடைக்காது. எனவே, ஒரு நாள் தேர்தல் என்கிற இந்த யோசனை வரவேற்கத்தக்கதே.
 க. நாகராஜன், கடலூர்.
 வாய்ப்பு இல்லை
 ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றால் இரு தொகுதிகளில் வாக்காளராக இருப்போர் கள்ள ஓட்டு போடுவது நடக்காது. தொகுதிக்குத் தொடர்பற்ற ஆட்கள் தொகுதிக்குள் நுழையவும் பிரசாரம் மேற்கொள்ளவும் இயலாது. வாக்காளர்களுக்குக் கொடுப்பதாகக் கூறப்படும் பரிசுப் பொருளோ பணமோ தொகுதிக்குள் நுழையாமல் காவல்துறையினரால் கட்டுப்படுத்த இயலும். தேர்தல் பணியில் ஈடுபடுவோர், பாதுகாப்புப் பணியாளர்களின் வேலையும் எளிதாகும்.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 சாத்தியம் இல்லை
 அதிக மக்கள்தொகையும், பெரிய நிலப்பரப்பும் உடைய தமிழகம் போன்ற மாநிலத்தில் ஒரே நாளில் தேர்தல் என்பது நடைமுறை சாத்தியம் இல்லாதது. ஒரே நாளில் தேர்தல் நடத்த பெரும் எண்ணிக்கையில் அரசு ஊழியர்களும், காவல்துறையினரும் பிற பணியாளர்களும் தேவைப்படும். எனவே வெவ்வேறு நாட்களில் தேர்தல் நடத்துவது பற்றி பரிசீலிக்கலாம். அரசு எந்திரம் மேலும் விழிப்புடன் இருக்க இந்த ஏற்பாடு உதவும். முறைகேடுகளையும் தவிர்க்கலாம்.
 வி.எஸ். ரவி, கடலூர்.
 சவால்
 தமிழகத்தில் வெவ்வேறு நாட்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டால், முதல் கட்டத் தேர்தல் முடிந்த தொகுதிகளில் இருந்து தொண்டர்கள் இரண்டாம் கட்ட தேர்தல் தொகுதிகளில் குவிந்து விடுவர். இதனால், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பது காவல் துறையினருக்கு பெரும் சவாலாக ஆகும். வாக்குப்பதிவு மையங்களில் நெருக்கடியான சூழ்நிலை உருவாகும். எனவே, ஒரே நாளில் தேர்தலை நடத்துவதே சரி.
 ஆர்.எஸ். மனோகரன், சென்னை.
 சிறப்பு
 ஒரே நாளில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது சிறப்பானது. பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்றால் வாக்காளருக்கு பணம் வழங்குதல் கள்ள ஓட்டு போடுதல், ரவுடிகள் ராஜ்ஜியம் என பல தவறான செயல்கள் சுலபமாக நடைபெறும். கட்சிகளுக்கு தேர்தல் பிரசார செலவு, வேட்பாளருக்கான செலவு ஆகியவை கட்டுப்படுத்தப்படும். வெளியூர் தொகுதி ஆட்களின் தொந்தரவும் இருக்காது. வீண் பிரச்னைகளும் எழும்பாது. ஒரு கட்ட தேர்தலே சிறந்தது.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 பள்ளித் தேர்வு
 நாடு முழுவதும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்படுவது போல் தேர்தலையும் ஒரே நாளில் நடத்தலாம். ஒரே நாள் தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிக அளவில் தேவைப்படும். அது மட்டுமல்ல, மொத்த வாக்காளர்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டும் என்பதால் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையும் அதிகமாகத் தேவைப்படும். இவற்றையெல்லாம் செய்துவிட்டால் ஒரு நாள் தேர்தலில் முறைகேடுகளைத் தவிர்க்கலாம்.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 ஒரே மனநிலை
 தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தல் நடத்துவதின் மூலம் நிச்சயம் தேர்தல் விதிமீறல்களை தவிர்க்க முடியும். இப்படிச் செய்வதன் மூலம் வாக்காளர்கள் அனைவருமே அவரவர் தொகுதியில் இருந்து வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்படும். சில சமூக விரோதிகள் கூட்டமாக வேறு தொகுதிகளுக்குச் சென்று சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க முடியும். மக்கள் ஒரே விதமான மனநிலையில் இருந்து வாக்களிக்க முடியும். ஒரு மாநிலம் ஒரே நாள் தேர்தல் என்பதே சரி.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 தவறு செய்ய வழி
 பல கட்டங்களாக தேர்தல் நடக்கும்போது முறைகேடு செய்பவர்கள் எல்லா இடங்க ளிலும் தவறு செய்ய வழி ஏற்பட்டு விடும். பெரும்பாலான முறைகேடுகள் ஆளுங்கட்சியினரால் நடத்தப்படுவதாகவும் அதற்கு தேர்தல் ஆணையமும் காவல்துறையும் துணை போவதாகவும் ஒவ்வொரு தேர்தலின்போதும் செய்திகள் வருவது உண்டு. ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட்டால் முறைகேடுகள் குறைவதற்கு வாய்ப்புண்டு.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 ஏற்புடையதல்ல
 இந்தக் கருத்து ஏற்புடையதல்ல. என்னதான் தேர்தல் ஆணையம் பணப் பட்டுவாடாவைத் தடுக்க முயற்சிகள் எடுத்தாலும் அதனால் தடை செய்ய முடியாது. வாக்காளர்கள் நினைத்தால் மட்டும்தான் முறைகேடுகளைத் தவிர்க்கலாம். ஏனெனில், முறைகேடுகளில் முதன்மையானது பணம் கொடுப்பதும் வாங்குவதுமே. ஏனைய முறைகேடுகளைத் தவிர்க்கலாம். முறைகேடுகளில் ஈடுபடும் கட்சிகள் வருங்காலத்தில் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும்.
 தி.ரே. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 ஆள் மாறாட்டம்
 ஒரே நாளில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தினால் முறைகேடுகளை தவிர்க்கலாம். கள்ள ஓட்டு போடும் கும்பல் ஒரு தொகுதியில் தேர்தல் முடிந்தவுடன், அடுத்தத் தொகுதிக்கு சென்று திருமண மண்டபங்களிலோ விடுதிகளிலோ தங்கி அந்தத் தொகுதியிலும் வாக்களிக்க இயலாது. வாக்காளர்கள் ஆள் மாறாட்டம் செய்வதை தவிர்க்கலாம். ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றால் தேர்தல் ஆணையத்தின் பளு சற்றுக் கூடுதல் ஆனாலும் பல வகையில் இது நல்லதே.
 சீனி. செந்தில்குமார், தேனி.
 முறைகேடுகள்
 இரண்டு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டால் ஆளுங்கட்சியினரோ அந்தந்தப் பகுதியிலுள்ள செல்வாக்கு மிக்க கட்சியினரோ பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பாக அமைந்துவிடும். சில கட்சிகள் ஒரு தொகுதியின் வாக்குப்பதிவு விழுக்காட்டை வைத்து தங்கள் கட்சியின் வெற்றி-தோல்வியைக் கணித்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தலில் முறைகேடுகளை அரங்கேற்றும். ஒரேநாளில் தேர்தல் நடத்துவதுதான் சாலச்சிறந்ததாகும்.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 செலவுகள் குறையும்
 நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற இந்த முறை மிகவும் உதவும். வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கும் முயற்சியும் ஒரே வேலையாக முடிந்து விடும். இதனால் கட்சிகளின் செலவு மட்டுமல்ல, அரசின் செலவுகளும் குறையும். இப்படி எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஒரே நாளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுவதே நல்லது. இதனால், தேர்தல் முடிவுகளையும் விரைவில் தெரிந்து கொள்ள முடியும்.
 உஷா முத்துராமன், மதுரை.
 கண்கூடு
 தமிழகத்தில் ஒரே நாளில் சட்டப்பேரவை தேர்தலை நடத்தினால் முறைகேடுகளைத் தடுக்கலாம் என்பது ஏற்புடையதே. கடந்த காலங்களில் ஒரே நாளிலேயே தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட்டபோது முறைகேடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் மட்டுமாகவே இருந்தது கண்கூடு. இதன் மூலம் அரசியல் கட்சியினர் ஒரு தொகுதியில் வாக்களித்து விட்டு மறு தொகுதியில் வாக்களிப்பதையும் பணப்பட்டுவாடா போன்ற முறைகேடுகளையும் தடுக்க முடியும்.
 செய்யது முகம்மது, மேலப்பாளையம்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

SCROLL FOR NEXT