விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "பெருநிறுவனங்கள் வங்கிகளைத் தொடங்கி நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் யோசனை ஏற்கத்தக்கதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

ஏற்கத்தக்கதல்ல
 பெருநிறுவனங்கள் வங்கிகளைத் தொடங்கி நடத்தலாம் என்கிற யோசனை ஏற்கத்தக்கதல்ல. பெருநிறுவனங்கள் திவால் என்று சொல்லி நாட்டை விட்டு ஓடும் நிலை வரும்போது அவர்கள் நடத்தும் வங்கிகளின் கதி என்னவாகும்? எல்லாவற்றையும் தனியாரிடம் தாரை வார்த்துவிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்கு என்னதான் செய்யப் போகிறார்கள்?
 பா. சக்திவேல், கோயம்புத்தூர்.
 முன்னுரிமை
 பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட கடன் தொகைகள் திருப்பி செலுத்தப்படாமல் பல கோடி ரூபாய் வாராக்கடனாக இருப்பது நமக்குத் தெரியும். பெருநிறுவன வங்கிகளில் ஏற்படுகின்ற இழப்புகளை சரி செய்வதற்கே அரசு முன்னுரிமை அளிக்கும். பொதுத்துறை வங்கிகளின் சீர்திருத்தம் பின்னுக்குத் தள்ளப்படும். மேலும், பெருநிறுவனங்கள் கடன் வழங்கும் போது சரியான வழிமுறைகளை பின்பற்ற வாய்ப்பு இல்லை.
 மா. பழனி, தருமபுரி.
 சிறந்த சேவை
 இப்போது பொதுத்துறை வங்கிகளைவிட தனியார் வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை நன்றாகவே இருக்கிறது. எனவே, பெருநிறுவன வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை அளிக்கும். நகரங்கள் அளவுக்கு கிராமப்புறங்களில் தனியார் வங்கிகள் இல்லை. எனவே, பெருநிறுவன வங்கிகள் கிராமப்புறங்களில் அதிகமாகத் தொடங்கப்பட வேண்டும். மேலும், ஏழை எளிய மக்கள் கடன் பெறுவது தனியார் வங்கிகளில் எளிது.
 மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.
 நன்மை கிட்டாது
 நம் நாட்டில் வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்படுமுன் அவை தனியாரிடம்தான் இருந்தன. அவற்றால் பொதுமக்களுக்கு நன்மை கிட்டவில்லை என்பதால்தான் அவை நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இப்போது மீண்டும் அவற்றை பெருநிறுவனங்களிடம் கொடுப்பது ஏற்புடையதல்ல. பெருநிறுவனங்கள் வங்கிகளைத் தொடங்கினால் அந்த நிறுவனங்களுக்கு நன்மை கிடைக்கலாம். ஆனால், பொதுமக்களுக்கு நன்மை கிடைக்காது.
 த. யாபேத் தாசன், பேய்க்குளம்.
 விஷப்பரீட்சை
 இது தவறான யோசனை. தற்போது வங்கிகளில் பெருந்தொகை கடன் பெற்றவர்கள் அதனை திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்குச் சென்று விடுகின்றனர். அந்தக் கடன் தொகையை வசூலிக்க இயலாமல் வங்கிகள் திணறிக்கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் பெருநிறுவனங்கள் வங்கிகளைத் தொடங்க அனுமதி அளிப்பது ஒரு விஷப்பரீட்சையாகத்தான் ஆகும். இதனால் பொதுமக்கள் நஷ்டமே அடைவார்கள்.
 என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.
 பொறுப்பின்மை
 இது நல்ல யோசனைதான். எதற்கெடுத்தாலும் சம்பள உயர்வு, வேலை நிறுத்தம் என்று போராடும் குணம் வங்கி ஊழியர்களுக்கும் வந்து விட்டது. அதற்குக் காரணம் வங்கிகள் அரசுடைமை ஆக்கப்பட்டதுதான். அரசு நிர்வாகம் என்றாலே பொறுப்பின்மை என்பதும் சேர்ந்துகொள்கிறது. மேலும், அரசுக்கு வேண்டிய தொழிலதிபர்கள் பெருந்தொகையைக் கடனாகப் பெற்று திரும்ப செலுத்தாத நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
 கலைப்பித்தன், சென்னை.
 அரசின் கடமை
 பொதுத்துறை வங்கி தனியார் வங்கி இரண்டுமே பெரும் முதலாளிகளுக்குதான் கடன் கொடுத்து ஏமாந்திருக்கின்றன. பொதுத்துறை வங்கிகளில் பணம் போடுவது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில் ஏதாவது பிரச்னை என்றால் அதைத் தீர்க்க வேண்டியது அரசின் கடமை. இப்போதுள்ள தனியார் வங்கிகளே பிரச்னைகளால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் புதிய தனியார் வங்கிகளை அனுமதிக்கக் கூடாது.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 உத்தரவாதம் இருக்காது
 பெருநிறுவனங்கள் வங்கி தொடங்கினால் அதில் சேமிக்கும் மக்கள் பணத்திற்கு உத்தரவாதம் இருக்காது. ஏற்கெனவே அரசு வங்கிகளில் கடன் பெற்ற பலர் திவால் நோட்டீஸ் கொடுத்து விட்டு, வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து விட்டனர். இந்த வேளையில் பெருநிறுவனங்களை வங்கிகள் நடத்த அனுமதிப்பது பொதுமக்கள் பணத்தைப் பாதுகாப்பதில் அரசுக்கு அக்கறையில்லை என்ற எண்ணத்தையே ஏற்படுத்தும்.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 குழப்பம் உண்டாகும்
 தங்கள் பணத்தை வங்கிகளில் நம்பிக்கையுடன் சேமித்து வரும் பொதுமக்கள் மத்தியில் இது குழப்பத்தையே உண்டாக்கும். தனியார் வசம் வங்கி தொடங்கும் வாய்ப்பு அளிக்கப் பட்டால் அவர்களுடைய வங்கிகள் கொள்ளை லாபத்தையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும். மக்கள் சேவை என்பது சிறிதும் இருக்காது. பெருநிறுவன வங்கி பணக்காரர்களுக்கு மட்டுமே பயன்படும்; ஏழை மக்களுக்கு அல்ல.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 கண்காணிப்பு தேவை
 பெருநிறுவனங்கள் வங்கிகளைத் தொடங்கி நடத்தலாம் என்ற யோசனை வரவேற்புக்குரியதே. வேலைவாய்ப்பு, முதலீடு என்ற நோக்கங்கள் எல்லாம் மிகவும் சரியானவைதான். ஆனால், பொதுமக்கள் அந்த வங்கிகளில் சேமிக்கும் பணம் பத்திரமாயிருக்கும் என்று அரசு வாக்குறுதி அளிக்க வேண்டும். அந்த வங்கிகள் தங்கள் மனம்போல் செயல்படாமல், அவற்றின்மீது அரசின் கண்காணிப்பு இருந்துகொண்டே இருக்க வேண்டும்.
 ஏ.பி. மதிவாணன், சென்னை.
 தகுதி இல்லை
 பெருநிறுவனம் வங்கி நடத்தினால் அந்த நிறுவனமே வங்கியிலுள்ள மக்களின் சேமிப்புப் பணத்தை எடுத்து தனது கடனை அடைத்துக் கொள்ளும். மேலும், இந்தியாவில் உள்ள பல பெருநிறுவனங்களில், உரிமையாளரின் குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களுமே முக்கிய பதவிகளில்உள்ளனர். இவர்களுக்கு தகுதியோ திறமையோ இருக்காது. இந்நிறுவனங்கள் வங்கியை நடத்தினால், அது பொருளாதார வளர்ச்சிக்கு ஆபத்தாக முடியும்.
 மா. ஜான் ரவிசங்கர், அஸ்தம்பட்டி.
 கண்கூடு
 இன்றைய நிலையில் பெரும்பாலான அரசு நிறுவனங்களில் பொதுமக்களுக்கான சேவைகள் சரிவர கிடைப்பதில்லை என்பது கண்கூடு. அதனால்தான் ஏராளமான அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. இதனைக் காரணமாக வைத்து மத்திய அரசு பல அரசு நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்து வருகிறது. வங்கித்துறையை சீர் செய்ய வேண்டுமென்றால் அதனைப் பெருநிறுவனங்கள் தொடங்க அனுமதிக்க வேண்டும்.
 கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.
 திருடன் கையில் சாவி
 பொதுத்துறையில் இருக்கும்போதே வங்கிகளின் செயல்பாடு நன்றாக இல்லை. அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயைக் கடனாக வழங்குவதும், அவர்கள் அதனைத் திரும்ப செலுத்தாதலால் அது வாராக்கடனாக மாறி தள்ளுபடி செய்யப்படுவதும்தான் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெருநிறுவனங்கள் வங்கி தொடங்கலாம் என்பது திருடன் கையில் சாவியைக் கொடுத்த கதையாகிவிடும்.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 லாப நோக்கம்
 இந்த யோசனையை ஏற்கக் கூடாது. வங்கிகளின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்வதே. ஆனால், பெருநிறுவனங்களின் இலக்கு லாபம் ஈட்டுவதே. வைப்புத் தொகைகளைத் தங்களுக்கு வேண்டிய பெரிய நிறுவனங்களுக்கு கடனாக வழங்குவார்கள். அது மட்டுமல்லாமல், தங்கள் நிறுவன வளர்ச்சிக்கும் அத்தொகையைப் பயன்படுத்திக் கொள்வார்கள். வழங்கப்பட்ட கடன் தொகை திரும்ப வராமல் வாராக்கடனாக மாறும்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 ஏற்க மாட்டார்கள்
 இந்த யோசனை ஏற்கமுடியாத ஒன்று. நிறைய வங்கிகளைத் தொடங்குவது மக்களுக்கு நன்மைதான் என்றாலும்கூட பெரு நிறுவனங்கள் வங்கி தொடங்குவதை பொதுமக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மேலும், இதனால் வங்கி சேவைகள் அனைத்தும் தனியார் மயம் செல்லும் வாய்ப்புகள் அதிகமாகும். ஆகவே, அரசே முன்வந்து பொது
 மக்களுக்குத் தேவையான இடங்களில் புதிய வங்கிகளைத் தொடங்க வேண்டும் .
 மா. இளையராஜா, திருச்சிராப்பள்ளி.
 மோசடி நிகழும்
 பெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்கி நடத்துவது ஏற்புடையதல்ல. நிதி நிறுவனங்களில் ஏற்படும் மோசடி நிகழ்வுகள் அந்த வங்கிகளிலும் உண்டாக வாய்ப்பு இருக்கிறது. பொதுமக்களின் பணத்துக்குப் பாதுகாப்பு இருக்காது. வைப்புத் தொகைக்கான வட்டி குறைக்கப்பட்டு, கடன் தொகைக்கான வட்டி அதிகரிக்கப்படும். பெருநிறுவன வங்கிகள் லாப நோக்கில் மட்டுமே செயல்படும்.
 எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது,
 மேலப்பாளையம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT