விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை சரியானதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

சரியல்ல
 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை சரியல்ல. கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு இன்னும் போதிய அளவில் தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல, ஆசிரியர்களை சந்தித்துத் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்கு மாணவர்களுக்கு இணைய வழியில் வாய்ப்பில்லை. இந்த சூழலில் இணைய வழியில் தேர்வு நடத்துவது கூடாது.
 மா. பழனி, தருமபுரி.
 செயற்கைக் கல்வி
 பாடங்களைப் புரிந்து கற்பதுதான் இயற்கையான கல்வி. தேர்வுக்காகக் கல்வி என்பது வியாபாரத்தனமானது. செயற்கைத் தன்மை கொண்டது. அரசுப் பள்ளிகளில் மேல் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. அது போல, ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும். அதை கையாள்வதற்குப் பயிற்சியளிக்க வேண்டும். அதன்பிறகே ஆன்லைன் வழியே தேர்வுகளை நடத்தலாம்.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 என்ன தவறு?
 இந்தக் கோரிக்கை சரியானதுதான். பாடங்களை ஆன்லைனில் படிக்கும் மாணவர்கள் நோய்த்தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக பள்ளிக்கே போகாத போது, அவர்களுக்கான தேர்வையும் இணைய வழியில் நடத்துவதில் என்ன தவறு? ஆசிரியர்கள் நடத்திய பாடங்களை மாணவர்கள் புரிந்துகொண்டார்களா என்பதை அறியவே தேர்வு. அதனை இணைய வழியில் நடத்து வது சரியே.
 உஷா முத்துராமன், மதுரை.
 ஏற்புடையதல்ல
 அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்குமே இணைய வழி கல்வி கிடைக்கப் பெற்றிருக்கிறது என்று சொல்ல இயலாது. தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் காலம் தாழ்ந்தே நடத்தப்பட்டன. ஒரு சில பள்ளிகளில் மட்டுமே இணைய வழி வகுப்புகள் அதுவும் மேல்நிலை வகுப்புகள் சரியாக நடந்தன. மாணவர்கள் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களைக் கூட கேட்டு தெளிவு பெற இயலாத சூழல் நிலவுகின்றது. எனவே ஆன்லைனில் தேர்வுகளை நடத்துவது ஏற்புடையதல்ல.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 சிக்கல் உருவாகும்
 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இணைய வழியில் நடத்த முயல்வது ஏற்புடையது அல்ல. உயர்நிலை, மேல்நிலை என்று இருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இணைய வழி தேர்வு என்பது பல சிக்கல்களை உருவாக்கும். அதற்கான கட்டமைப்பு வசதி முழுமையாக இல்லை. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கணினி பயன்பாடு முழுமையாகத் தெரியாது. எனவே, இந்த ஆண்டு நேரடியாக முழு ஆண்டுத் தேர்வை மட்டும் நடத்துவதுதான் சரி.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 நிதர்சனம்
 அரசுப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புற மாணவர்களே. அவர்களுக்கு இணைய வழியில் தேர்வு எழுதுவதற்குத் தேவையான கணினி வசதியோ அறிதிறன்பேசி வசதியோ இல்லை என்பதே நிதர்சனம். இணைய வழியில் தேர்வுகளை நடத்தினால், பெரும்பாலான கிராமப்புற மாணவர்கள் தேர்வில் பங்கேற்க இயலாது. அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு தேர்வுகளை நடத்தலாம்.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 பாதிப்பு
 இக்கோரிக்கை சரியானது அல்ல. கணினி, அறிதிறன்பேசி போன்ற தொழில்நுட்ப வசதியற்ற ஏழை மாணவர்கள் இணைய வழியில் தேர்வுகளை எழுத முடியாது. அரசுப் பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவர்களை இந்தத் திட்டம் பெரிதும் பாதிக்கும். எல்லாராலும் அந்த முறையில் தேர்வு எழுத இயலாது. எனவே இந்த கோரிக்கையை அரசு புறக்கணிக்க வேண்டும்.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 தவிர்க்க இயலாதது
 கல்வித்துறையில் காலத்திற்கேற்ப பல மாற்றங்கள் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. வெளிநாடுகளில் மாணவர்களுக்கு இணைய வழிக் கல்வி எப்போதோ தொடங்கி விட்டது. நோய்த்தொற்றுப் பரவும் காலத்தில் மட்டுமல்ல, இனி எல்லாக் காலங்களிலுமே இணைய வழி கல்வி என்பது தவிர்க்க இயலாதது. மாணவர்களுக்கு மனச்சோர்வு எற்படும் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். ஆசிரியர் கற்பிப்பதை மாணவர் புரிந்து கொண்டால் இது சாத்தியம்தான்.
 க. சண்முகம், சின்ன திருப்பதி.
 எதிர்பார்ப்பு
 கிராமப்புறங்களில் இருந்து கல்வி கற்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கணினியை முழுமையாக இயக்கத் தெரியாது. அது மட்டுமின்றி சரியான நேரத்தில் தேர்வுகளை முடிப்பதென்பதும் இயலாத செயல். இந்த தவறான முடிவை அரசு எடுத்திருந்தால், அதை தயவு செய்து திரும்பப் பெறவேண்டும் என்பதுதான் கிராமப்புற பெற்றோரின் எதிர்பார்ப்பாகும். இணைய வழி தேர்வைத் தவிர்த்து வழக்கமான பள்ளி வகுப்பு முறையில் தேர்வு நடத்துவதே சரி.
 ந. கண்ணையன், கிருஷ்ணகிரி.
 நல்லது
 அரசுப் பள்ளிமாணவர்களுக்கு மெட்ரிக் பள்ளிகளைப் போல இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டிருந்தால் எத்தனைபேர் பங்கேற்றனர் என்பது தெரியும். அவர்களுக்குத் தேர்வுகள் நடத்துவது பற்றி முடிவுசெய்யலாம். தொலைக்காட்சி வழியாக நடத்திய வகுப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள்பயன் பெற்ற விவரம் தெரியாது. அவர்கள் வீணாகக் காலம் கழித்து விட்டனர் என்ற குறை ஏற்படாதவாறு அரையாண்டுத் தேர்வுகளை இணைய வழியில் நடத்துவது நல்லதே.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 பயிற்சிக் களம்
 அரையாண்டுத் தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்படவேண்டும் என்கிற கோரிக்கை சரியானதே. ஏற்கெனவே படித்த பாடங்களை நினைவுபடுத்திக் கொள்ளவும் அவற்றை எழுதிப் பார்க்கவும் தேர்வுகள் உதவும். பலமுறை படிப்பதைக் காட்டிலும் ஒரு முறை எழுதிப் பார்ப்பது சிறப்பு. தேர்வு வைப்பதன் மூலம் மாணவர்கள் பாடங்களை மீண்டும் படிப்பார்கள். இது பயிற்சிக் களமாகவும் அமையும்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 ஆய்வுக்குரியது
 இக்கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் முறையாக நடத்தப்படவில்லை. தனியார் பள்ளி மாணவர்கள்போல் இணைய கட்டமைப்பு கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. தொலைகாட்சி சேனல்கள் வழியே நடத்தப்படும் பாடங்கள் எந்த அளவு பயனளித்துள்ளது என்பது ஆய்வுக்குரியது. வகுப்பு நடத்தி பாடங்களைக் கற்பித்தல்தான் முக்கியமே தவிர, தேர்வுகள் முக்கியமல்ல.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 நல்ல யோசனை
 நாம் விரும்பியோ விரும்பாமலோ இணையம் நம் வாழ்வோடு ஒன்றி விட்டது. கல்லூரி படிப்புகள் யாவும் இணைய வழியில்தான் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு பள்ளிப் பருவத்திலேயே இணையப் பயன்பாடு குறித்த அறிமுகம் இருந்தால் தேர்வுகளை எதிர்கொள்வதில் தடை இருக்காது. அரசு பள்ளி மாணவர்களும் இணைய வழியில் தேர்வுகளை எழுதத் தொடங்கினால் அவர்களின் கல்வியறிவோடு தொழில்நுட்ப அறிவும் மேம்படும். இது நல்ல யோசனையே.
 சீனி.செந்தில்குமார்,தேனி.
 கடினமல்ல
 இன்றைய காலகட்டத்தில் எல்லாத் துறைகளிலும் கணினிப் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. உலகையே இணைக்கும் இணையத்தால் பள்ளி மாணவர்களை இணைப்பது கடினமல்ல. நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் மாணவர்களின் ஒரு ஆண்டு கல்வி தடைப்பட்டது. அதனை ஈடுகட்டவே பாடங்கள் குறைக்கப்பட்டு இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டன. அப்படியிருக்க, தேர்வு நடத்துவதில் தவறில்லை.
 கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.
 புது அனுபவம்
 இது தவறான கோரிக்கை. பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்களை நடத்துவதும் அவற்றை அவர்கள் புரிந்துகொள்வதுமே மிகவும் சிரமமாக உள்ளன. இந்த நிலையில் தேர்வுகளையும் இணைய வழியில் நடத்துவது சரியல்ல. இது முழுக்க முழுக்க புது அனுபவம். இதற்கு மாணவர்களை தயார் செய்வது மிகவும் சிரமம். இந்த ஆண்டு மட்டும் அரையாண்டுத் தேர்வை ரத்து செய்வதுதான் சரி.
 பா. அரங்கநாதன், கும்பகோணம்.
 கல்வித் தகுதி
 எந்தவொரு தேர்வும் வகுப்பறையில், ஆசிரியரின் மேற்பார்வையில் நடப்பதுதான் முறையானது. அப்போதுதான் மாணவர்களின் உண்மையான கல்வித் தகுதியை அறிய இயலும். இணைய வழியில் மாணவர்கள் தேர்வில் தவறு செய்ய வாய்ப்பு உருவாகும். சில மாதங்களுக்குப் பின்னர் ஆசிரியரின் மேற்பார்வையில் பள்ளிகளில் தேர்வை நடத்துவதே நல்லது. உண்மையான கல்வித் திறனை அறிய வகுப்பறைத் தேர்வே சிறந்தது.
 குரு. பழனிசாமி, கோயம்புத்தூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT