விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான பயிற்சிகளை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

சரியான முடிவு
 ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான பயிற்சிகளை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது சரியான முடிவு. ஏழை மக்கள் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெற இது வழிகோலும். அறுவை சிகிச்சையில் கொள்ளை லாபம் ஈட்டிய அலோபதி மருத்துவர்கள் கூக்குரலிடலாம். மக்கள் ஆதரவால் அக்குரல் நின்றுவிடும். ஏழை மக்களுக்கு ஏற்ற மருத்துவ முறை ஆயுர்வேதம் என்றால் மிகையாகாது.
 ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
 பலன் தரும்
 அறுவை சிகிச்சை என்பது அலோபதிக்கு மட்டும் உரியது போன்ற பார்வை உருவாக்கப்பட்டு வருகிறது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் உருவாகியுள்ள பரிசோதனைக் கருவிகள் பயன்படுத்தும் பயிற்சியை அனைத்து வழி மருத்துவர்களுக்கும் வழங்க வேண்டும். அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள அனைத்து மருத்துவ முறைகளுக்கும் உரிமை உண்டு. இது நல்ல பலன் தரும்.
 பா. சக்திவேல், கோயம்புத்தூர்.
 தொழில்நுட்பம்
 ஆயுர்வேத மருத்துவர் சுஸ்ருதர்தான் இந்திய மருத்துவ முறையில் அறுவை சிகிச்சையின் தந்தை என்று போற்றப்படுகிறார். அறுவை சிகிச்சை என்பது ஒரு தொழில்நுட்பம்தானே தவிர வேறில்லை. மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள்தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பது இல்லை. அறுவை சிகிச்சைக்கு முறையான பயிற்சி பெற்ற ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம்.
 அ. பட்டவராயன், திருச்செந்தூர் .
 விஷப்பரீட்சை
 ஆயுர்வேத மருந்துகளை மட்டுமே கொண்டு அறுவை சிகிச்சையை முழுமையாகச் செய்ய இயலாது. அறுவை சிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருந்து, பின்னர் கொடுக்கப்படும் வலி நிவாரண மருந்து, வேறு தொற்று ஏற்படாமலிருக்க கொடுக்கப்படும் மருந்துகள் இவற்றுக்கெல்லாம் ஆங்கில மருந்துகளையே நம்பி இருக்க வேண்டிய நிலைதான் உள்ளது. ஆயுர்வேத முறையில் அறுவை சிகிச்சை என்பது விஷப்பரீட்சை.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 கேள்விக்குறியே
 ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பயிற்சிகளை அளிப்பது தேவையற்றது. அப்படியே பயிற்சி அளித்தாலும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளத் தேவையான வலுவான கட்டமைப்புடன்கூடிய மருத்துவமனையை எல்லா ஆயுர்வேத மருத்துவர்களும் பெற்றுள்ளார்களா என்பது கேள்விக்குறியே. எனவே, பாரம்பரிய மருத்துவத்துடன் ஆங்கில மருத்துவ முறையைக் கலந்து பயிற்சியளிப்பது தவறு.
 உ. இராசமாணிக்கம், கடலூர்.
 வீண் செயல்
 ஆயுர்வேத மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிப்பது வீண் செயல். அலோபதி மயக்க மருத்துவரும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கண்காணிப்புக்கு அலோபதி முதுநிலை மருத்துவரும் இருந்தே ஆக வேண்டும் எனும்போது ஏன் ஆயுர்வேத மருத்துவர் அறுவை சிகிச்சை செய்யவேண்டும்? ஆயுர்வேத மருத்துவர்கள் பயிற்சி எடுத்திருந்தாலும் அது நோயாளிகளுக்குக் கெடுதலாகவே முடியும்.
 எஸ். கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.
 பாதிப்பு
 பயிற்சி அளிப்பதால் மட்டுமே ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற வாய்ப்பு இல்லை. ஆங்கில மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் இரண்டையும் சேர்த்துத்தான் ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொள்வார்கள். இதனால் பாதிக்கப்படப் போவது நோயாளி தான். திடீரென ஆயுர்வேத மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிப்பது ஆபத்தாய் முடியும்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 கவனம் தேவை
 இது மிகத்தவறான முடிவாகும். ஏனெனில் முறையான பயிற்சி முடித்த மருத்துவர்கள்கூட சில வேளைகளில் தவறு செய்கிறார்கள். நோயாளிகளின் உயிர் சம்பந்தபட்ட விஷயம் என்பதால் மிக மிக கவனம் தேவை. ஆயுர்வேத மருத்துவர்களுக்கு குறுகிய காலத்தில் பயிற்சி அளித்து அறுவை சிகிச்சை செய்வதால் என்ன அனுபவம் வந்துவிடப் போகிறது? அரசு இவ்விஷயத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
 ந. கண்ணையன், கிருஷ்ணகிரி.
 தவறில்லை
 நோய்கள் பெருகிவரும் இந்நாளில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய சூழ்நிலைலைதான் உள்ளது. முறையாகக் கற்றோர் இதயம், மூளை, சிறுநீரகம் போன்ற முக்கியமான உறுப்புகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். மற்ற சிறுசிறு அறுவை சிகிச்சை செய்ய, ஆயுர்வேதம் படித்தவர்களுக்கும் பயிற்சியளித்து அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 சந்தேகமே
 ஆயுர்வேத மருந்துகள் அறுவை சிகிச்சைக்குப்பின் காயம் ஆற்றும் தன்மை கொண்டவையா என்பது தெரியாது. மேலும், அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஏற்படும் பிரச்னைகளை ஆயுர்வேத மருத்துவர்களால் திறமையாக கையாள முடியுமா என்பதும் சந்தேகமே. ஆயுர்வேத முறையை, ஆங்கில மருத்துவ முறையோடு இணைப்பது மிகமிகத் தவறான செயலாகும்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 நல்ல யோசனை
 அரசின் முடிவு சரியானதுதான். இரு மருத்துவ முறையிலும் செயல்படும் மருத்துவர்களிடையே போட்டி மனப்பான்மையோ பொறாமையோ ஏற்படாமல் அரசு கண்டிப்பான முறையில் இந்தப் பயிற்சியை வழங்க வேண்டும். மத்திய அரசு ஒரு முடிவு எடுத்திருக்கிறது என்றால் பல மருத்துவ நிபுணர்களைக் கலந்தாலோசித்திருக்கிறது என்பதுதான் பொருள். மக்கள் உயிர் காக்கும் பணி இது என்பதை மறந்துவிடக் கூடாது.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 இரு துருவம்
 அலோபதியும் ஆயுர்வதேமும் இரு துருவமாகும். முறையாக அறுவை சிகிச்சை பட்ட மேற்படிப்பு படித்து பயிற்சி பெற்ற அலோபதி மருத்துவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆயுர்வேத மருத்துவர்களை அறுவை சிகிச்சை செய்ய அனுமதித்தால் போலி மருத்துவர்கள் பெருகும் வாய்ப்பு அதிகம். அவர்கள் செய்யும் தவறுகளால் மருத்துவத் துறை மீதே மக்கள் நம்பிக்கை இழந்துவிடக்கூடும்.
 கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.
 திண்ணம்
 முதுநிலைப் பட்டம் பெற்ற ஆயுர்வேத அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் பல மருத்துவ முறைகளில் உதவி அறுவைச் சிகிச்சை மருத்துவர்களாக சிறப்புறப் பணியாற்றி வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட அறுவைச் சிகிச்சைகளில் இவர்களுக்கு முறையான பயிற்சியளித்து முக்கியத்துவம் கொடுத்தால் ஆபத்தான நேரங்களில் பல உயிர்கள் காப்பாற்றப்படுவது திண்ணம். போதிய மருத்துவர்கள் இல்லை என்கிற குற்றச்சாட்டு மறையும்.
 கே. ராமநாதன், மதுரை.
 ஆபத்து
 அறுவை சிகிச்சைக்கு முன் மயக்க மருந்து அளித்தல், அதன் அளவு வேறுபாடு, ரத்தம் வீணாவதைத் தடுத்தல், ரத்த அழுத்தத்தை சீராக்குதல் போன்ற நுட்பமான மருத்துவ செயல்பாடுகள் ஆயுர்வேத மருத்துவ முறையில் உடனடியாக செய்ய இயலாது. இரண்டு மருத்துவ முறைகளும் கலந்தால் அது நோயாளியின் உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம். இந்த முடிவை அரசு கைவிட வேண்டும்.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 ஆதாரமற்றது
 ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கு ஆபத்து என்று கூறுவது ஆதாரமற்றது. அலோபதி முறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சையில் உயிரிழப்புகள் ஏற்படுவதில்லையா? அறுவை சிகிச்சை என்றாலே பெரிய தொகையை மருத்துவர்கள் வாங்கி விடுகின்றனர். அது முடியாமல் போய்விடுமோ என்றுதான் மருத்துவர்கள் பயந்து அலறுகிறார்கள். மக்கள் ஆயுர்வேதத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
 கலைப்பித்தன், கடலூர்.
 மாற்றம்
 கால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்களை ஏற்றுப் பழகிவிட்டோம். ஆயுர்வேத மருத்துவர்கள் பயிற்சி பெற்று, அறுவை சிகிச்சை செய்வதையும் ஏற்கலாம். ஆனால், சிறந்த மருத்துவ நிபுணர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பயிற்சி நிறைவடைந்தபின் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதில் தேர்ச்சி பெறுபவரை மட்டுமே அறுவை சிகிச்சை செய்வதற்கான தகுதியுடையவர் என்று சான்று வழங்க வேண்டும்.
 பொன். கருணாநிதி, கோட்டூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT