விவாதமேடை

தனித் தனி அடையாள அட்டைக்குப் பதிலாக  ஒரே அடையாள அட்டை யோசனை குறித்து என்ன கருதுகிறீர்கள்

2nd Oct 2019 04:24 AM

ADVERTISEMENT

சிரமம் குறையும்
ஒரே அடையாள அட்டை மிக அருமையான திட்டம். இதனை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதனால் மக்களுக்கு பல்வேறு அடையாள அட்டைகளை தனித் தனியே பராமரிக்கும் சிரமம் குறையும். மேலும் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைக்கப்படுவதால் கண்டிப்பாக கள்ள வாக்கு போடுவது பெருமளவு குறையும். பான் கார்டு போன்றவற்றை வங்கிக் கணக்கோடு இணைப்பதால் வருமான வரி ஏய்ப்பும் குறைய வாய்ப்புள்ளது. பான் கார்டு, ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) ஆகியவற்றை இணைப்பதால் ரேஷன் பொருள்கள் வழங்குதில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பில்லை. உரியவர்களுக்கு மட்டுமே இலவசம், மானியம் கிடைக்கக் கூடிய வாய்ப்பும் இதனால் உருவாகிறது.
பொன்.கருணாநிதி, கோட்டூர்.

ரகசியம் மீறப்படும்
பெரும் பணச் செலவிலும், மனித உழைப்பாலும் உருவான ஆதார் அட்டை குற்றுயிர் பெற்றதாக ஆகிவிடக்கூடாது. தனி மனிதன் குறித்த பல தரவுகளை ஓர் அட்டையில் உள்ளடக்கப்படும்போது நாம் அண்மையில் பெற்ற அடிப்படை உரிமையான தனி மனித ரகசியம் மீறப்படுவதற்கான வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. ஓட்டுநர் உரிமம், கடவுச் சீட்டு போன்றவை வாழ்நாளில் ஒரு முறைகூட பயன்படுத்தப்படுவதற்கான தேவை பலருக்கு ஏற்படாது. எனவே, தேவை அடிப்படையில் குடிமக்களுக்குத் தேவைப்படும் தனித் தனி அட்டைகளை பாதுகாப்பு அம்சங்களைக் கடுமையாக்கி வழங்குவதே சிறந்தது. 
சு.இராஜரத்னம், பிள்ளையார்விளை.

மிகவும் எளிது
தனித் தனி அடையாள அட்டைக்குப் பதில் ஒரே அடையாள அட்டை வழங்குவது வரவேற்புக்குரியது. ஏனெனில், தனித் தனி அட்டைகளை வைத்துக் கொள்வதற்குப் பதிலாக ஒரே அட்டையை வைத்துப் பராமரிப்பது மிகவும் எளிது. பல்வேறு அலுவலகங்களிலும் பராமரிப்பது எளிதாக இருக்கும். இதில் அரசு தனிக் கவனம் செலுத்தி நடைமுறைச் சிக்கல்கள் ஏதும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும். அலுவலர்களும் பொதுமக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால் இந்தத் திட்டம் முழுமையாக வெற்றிபெறும். 
ந.கண்ணையன், கிருஷ்ணகிரி.

சாத்தியமில்லை
தனித் தனி அடையாள அட்டைக்குப் பதிலாக ஒரே அட்டை என்பது கேட்பதற்கு கவர்ச்சிகரமானதாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் சாத்தியமில்லை. தற்போது  ஓர் அட்டை இல்லையென்றால் பிற அடையாள அட்டைகளில் ஒன்றை ஆவணமாக அரசு கருதுகிறது. அனைத்துக்கும் ஒரே அட்டையென்றால் அனைவருக்கும் அந்த அட்டை கிடைப்பதை உறுதி செய்ய முடியுமா? ஏனெனில், இன்று அனைவருக்கும் அனைத்து அட்டைகளும் கிடைக்காத நிலை உள்ளது. அதாவது, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று கிடைக்கப் பெறாதோர் ஏராளமானோர் உள்ள நிலையில் ஒரே அடையாள அட்டை என்பதுசாத்தியமில்லை. 
ஐ.சுரேஷ், தூத்துக்குடி.

ADVERTISEMENT

தேவையற்றது
இந்திய மக்களின் அடையாள அட்டை என்ற வகையில் முன்பு ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, பெரிய நிறுவனங்களின் தொழிலாளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், முதலானவை பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆதார் கார்டு வந்த பின்னர் மேற்கூறிய அடையாள அட்டைகள் எதுவுமே தேவைப்படவில்லை. அரசின் பணிகளுக்கு  ஆதார் அட்டையே போதும் என்று கூறிவிட்டனர். அரசின் நலத்திட்டம்,  பர்மிட் முதலானவற்றுக்கு ஆதார் அட்டை பயன்படுகிறது. மேற்கூறிய அடையாள அட்டைகள் எல்லாம் அந்தந்தப் பணிகளுக்குப் பயன்படுகிறது. எனவே, எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஒரே அடையாள அட்டை என்பது தேவையற்றது. மேலும், அப்படிச் செய்ய நினைத்தால் பெரும் பணச் செலவும் பணிச் சுமையும் அரசுக்கு ஏற்படும். 
மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

நல்ல யோசனை
தனித் தனி அடையாள அட்டைக்குப் பதிலாக ஒரே அடையாள அட்டை நல்ல யோசனைதான். தற்போது பலதரப்பட்ட அட்டைகளை வெவ்வேறு காரணங்களுக்காக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவை அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஒரே அட்டையாக மாற்றும் நிலையில் மக்கள் அதை எளிதாகப் பயன்படுத்த முடியும். 
ப.சுவாமிநாதன், சென்னை.

தவறான யோசனை
தனித் தனி அடையாள அட்டைகளுக்குப் பதிலாக ஒரே அடையாள அட்டை என்பது தவறான யோசனை. இதனால், கோடிக்கணக்கான பணம் விரயமாகும். பலவிதக் குழப்பங்கள் இத்தகைய அடையாள அட்டையால் ஏற்படும். மோட்டார் வாகன உரிம அடையாள அட்டை, கல்வி நிறுவனங்கள், பணி நிறுவனங்கள் தரும் அட்டைகள் போன்றன குறிப்பிட்ட காலத்துக்கே செல்லுபடியாகி பின் புதுப்பிக்கத்தக்கன. இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்தால் ஒருவரை அடையாளம் காண்பதில் கால விரயமும் தேவையற்ற குழப்பங்களும் ஏற்படும். சிறுவர்கள் பெறும் அடையாள அட்டையை, எதிர்காலத்தில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். இந்த ஒரே மந்திரம் எல்லாவற்றிலும் கூடாது. 
ச.சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

யோசனை சரியல்ல
ஒரே நாடு, ஒரே இனம், ஒரே கொடி, ஒரே மதம், ஒரே மொழி எனப் பேசியவர்கள் இப்போது ஒரே அடையாள அட்டை என்ற கோஷத்தை முன் வைக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை என மக்களை அடையாளப் படுத்த இவை இருந்தால் மட்டும் போதும் எனக் கூறினர். தற்போது அடுத்த பெரும் செலவுக்கு அச்சாரம் போடுகிறார்கள். தவறான யோசனைகள், தவறான செயல்பாடுகள்- இதனால் ஏற்படும் இழப்புகள் மக்கள் தலையில் அல்லவா சுமத்தப் படுகின்றன. பலமுறை எண்ணித் துணிந்து இறுதியில் நல்ல முடிவெடுப்பது அல்லவா புத்திசாலித்தனம்? காலமும் நிலைத்து நிற்கும் நல்ல முடிவுகளை அரசு எடுக்கட்டும்.
ச.கந்தசாமி, இராசாப்பட்டி.

வரவேற்கலாம்
நாடுமுழுவதும் ஒரு நபருக்கு ஒரே அட்டை என்பது வரவேற்கத்தக்கது. எதிலும் வெளிப்படைத்தன்மையோடும், உண்மையாகவும் நடந்து கொள்பவர்களுக்கு இதனால் எந்தவித பாதிப்பும், கடினமும் ஏற்படாது. கையாள்வதும் எளிது. அதே நேரம் தொடர்புடைய நபரோ, துறையினரோ தவிர மற்றவர்கள் அதிலுள்ள தகவல்களை அறிய முடியாதவாறு அதன் செயல்தன்மை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 
வரதன், திருவாரூர்.

ஏற்றதல்ல
தனித் தனி அடையாள அட்டைக்குப் பதிலாக நாடு முழுவதும் செல்லுபடியாகும் ஒரே அடையாள அட்டை இருக்க வேண்டும் என்பது ஒரு நல்ல திட்டம்தான். கேட்பதற்கும் சொல்வதற்கும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எல்லா அட்டைகளையும் ஒரே அட்டையுடன் இணைக்க அலைய வேண்டி வரும். பணம், கால விரயம் ஆகும். எத்தனையோ கிராமங்களில் இன்னமும் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டையைக் கூட பெற முடியாதவர்கள் உள்ளனர்.  இது முதியோருக்கு மிகுந்த சிரமமாகும். அரசு ஊழியர்களுக்கும், வெளிநாடு, வெளி மாநிலம்  செல்பவர்களுக்கும்தான் இது நல்ல திட்டம். சாமானியர்களுக்கு இது ஏற்றதல்ல. 
ம.இராஜா, திருச்சி.

வரப்பிரசாதம்
இது மிகவும் அருமையான திட்டம். பல அட்டைகளில் திருத்தம், சரிபார்ப்பு என்று அலையும் பாமர மக்களுக்கு வரப்பிரசாதம். ஒரே அட்டை என்பதால் கையாள்வதற்கு மிகவும் எளிது. இந்த ஒரே அடையாள அட்டைத் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
கு.அருணாசலம், தென்காசி.

வேண்டாம்
வேண்டாம் என்பதே என் கருத்து. தற்போது தனி மனிதனின் அடையாளத்தைக் காண்பிக்க ஆதார் அட்டை உள்ளது. வாக்காளர் விவரத்தை வாக்காளர் அடையாள அட்டையும், முகவரிக்கு முகவரியுடன் கூடிய அடையாள அட்டையும் உள்ளன.  மாற்றுத் திறனாளி என அடையாள அட்டை, தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை, உழவர் பாதுகாப்புத் திட்ட அடையாள அட்டை ஆகியவை உள்ளன. இவ்வாறு பல்வேறு பயன்பாட்டுக்கு அடையாள அட்டைகள் ஏற்கெனவே உள்ளதால், அனைத்துக்கும் ஓர் அடையாள அட்டை என்ற யோசனை சாத்தியமற்றது. 
பி.துரை, காட்பாடி.

ஏற்கலாம்
அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய ஒரே அடையாள அட்டை யோசனை ஏற்கத்தக்கதே. ஆனால், அதில் சில திருத்தங்களை நாளடைவில் மேற்கொள்வதற்கான வசதிகள், வழிகள் ஆகியவற்றை எளிமையாக செய்து கொள்ளும் வகையில் அட்டை தயாரிக்க அரசு ஆவன செய்வது நல்லது. 
பவள வண்ணன், நடுவிக் கோட்டை.

வீண் செலவு
எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரே அடையாள அட்டை என்பது அகன்று விரிந்து பரவியிருக்கும் நம் நாட்டைப் பொருத்தவரை சாத்தியமற்றது. சில யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலும் உள்ள அத்தனை குடிமக்களுக்கும் நூற்றுக்கு நூறு ஒரே அடையாள அட்டைகளை வழங்கி முடிப்பது என்பது தேவையில்லாத கால விரயத்தையும் செலவையும் ஏற்படுத்தும். அந்த ஒரே அடையாள அட்டைக்காக செலவிடும் தொகையைக் கொண்டு, பொதுமக்களுக்குத் தேவையான எத்தனையோ அடிப்படைப் பணிகளை நிறைவேற்றலாம்.
இப்னு கலந்தர் மழாஹிரி, 
காயல்பட்டினம்.

 


வாரிசு அரசியல் குறித்த கமல்ஹாசனின் கருத்து ஏற்புடையதா?

இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
விவாத மேடை பகுதி, தினமணி, 
29, இரண்டாவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை - 600 058 
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இமெயில்: edit.dinamani@gmail.com
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT