தமிழக எம்.பி.-க்களில் ஒருவர், மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்தில் இல்லாமல் இருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தமிழக எம்.பி.-க்களில் ஒருவர், மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்தில் இல்லாமல் இருப்பது சரியா

அநீதி அல்ல!
தமிழக எம்.பி-க்களில் ஒருவர் மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்தில் இல்லாமல் இருப்பதில் ஏதோ தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம், அநீதியாகக் கருதுவது சரியல்ல. மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக, அதனுடன் கூட்டணி சேர்ந்து தேர்தல் களம் கண்ட அதிமுக ஆகிய இரண்டும் தமிழகத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள சூழலில் கேபினட் அந்தஸ்து குறித்து இரண்டு கட்சிகளும் ஆசைப்பட வியூகம் வகுப்பது சரியாகாது.
கேபினட் அந்தஸ்து அளிக்கப்படாதது இழுக்கல்ல. பதவியும் அதிகாரமும் இல்லாமலேயே, தமிழக மக்கள் நலன் காக்க எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மக்களவையில் குரல் எழுப்பினாலே இணையற்ற சேவையாகும்.
ச.கந்தசாமி, தூத்துக்குடி.

அரசுக்கு இழப்பு!
சுதந்திர இந்தியாவில் முதல் மத்திய நிதிஅமைச்சர் ஒரு தமிழரே. 1962-களில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடிய காலத்தில், அமெரிக்காவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்து பசிப் பிணியைப் போக்கியவர் ஒரு தமிழரே; அவர் திறமைமிக்க மத்திய அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம். அவர் தோற்றபோது வெற்றி பெற்ற அண்ணா மட்டுமல்ல, இந்தியாவே வருத்தப்பட்டது. பின்னர் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, உணவு உற்பத்திக்கான பொறுப்பை சி.சுப்பிரமணியத்திடமே ஒப்படைத்தார். வெற்றியைத் தீர்மானிப்பது தேர்தல் களம்; அதிகார களம் தமிழக எம்.பி.யை புறந்தள்ளியது தவறு. தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், மத்திய அமைச்சராக்கப்படாததில் தமிழனுக்கு நஷ்டமில்லை; ஆனால், இந்தியாவுக்கும் பாஜக அரசுக்கும் நஷ்டம்.
சிவ.ந.ஏழுமலை, 
சின்ன காஞ்சிபுரம்.

சரிதான்!
தமிழக எம்.பி-க்களில் ஒருவர் மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்தில் இல்லாமல் இருப்பது சரியே. பாஜக கூட்டணியில் ஒருவர்தான் வெற்றி பெற்றிருக்கிறார். சற்றே மீள்பார்வையில் தமிழக அமைச்சரவையை பல ஆண்டுகளுக்குப் பின்நோக்கினால் கூட்டணி கட்சிக்கு அப்போதைய அரசு அமைச்சரவையில் பங்கு தரவில்லை. மைனாரிட்டி அரசு என்ற நிலையுடன் ஆட்சியின் காலம் நிறைவுபெற்றது. ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையை அடைந்த கட்சி கூட்டணிக் கட்சியை கௌரவப்படுத்த வேண்டுமானால், அமைச்சரவையில் இடமளிக்கலாம். கட்சியிலிருந்தே ஒருவர்கூடத் தேர்வு பெறாத நிலையில், அது சாத்தியமில்லை, சரியும் அல்ல.
எஸ்.ஞானப்பிரான், சென்னை.

குறை காண முடியாது!
தமிழக எம்.பி.-க்களில் ஒருவர், மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்தில் இல்லாமல் இருப்பது குறித்து புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டும். சுதந்திரத்திற்கு பின் முதலில் உருவான அமைச்சரவையில் ஆர்.கே.சண்முகம் செட்டியார் தொடர்ந்து டி.டி.கே.,  சி.சுப்பிரமணியம், ப.சிதம்பரம் உள்பட பலர் கேபினட் அந்தஸ்தில் இடம்பெற்றனர்.  குடியரசுத் தலைவராக ஆர்.வெங்கட்ராமன்  இருந்திருக்கிறார். ஆளும் கட்சிக்கு தமிழ்நாட்டில் பிரதிநிதித்துவம் இல்லாததால், அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை.எனவே, பாஜக அரசை குறை கூற முடியாது. வாக்களித்த மக்களையும் குறை சொல்ல முடியாது.
என்.எஸ்.முத்துகிருஷ்ணராஜா,
இராஜபாளையம்.

ஆதங்கம் காரணமாக...
அனைத்து மாநிலங்களும் சேர்ந்ததுதான் இந்தியா. அப்படிப்பட்ட மத்திய அமைச்சரவையில் ஒரு தமிழராவது கேபினட் அந்தஸ்து பெற்றால்தான் அந்த அமைச்சரவையே நிறைவு பெற்றதாகும். தமிழகத்தில் மத்திய அரசை ஆதரித்த கட்சி பெருவாரியான வெற்றியைக் குவிக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் அமைச்சர் பதவி அளிக்க பாஜக அரசு விரும்பவில்லை; சரியில்லை. 
உஷாமுத்துராமன்,
 மதுரை.

பிரதிநிதித்துவம்  கட்டாயம்!
மத்திய அரசியல் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருக்குகூட கேபினட் அந்தஸ்தில் அமைச்சர் பதவி வழங்காதது சரிதானா என்றால், அது பாஜகவின் பாரபட்சத்தையே காட்டுகிறது. நாட்டிலுள்ள பெரிய மாநிலங்களில் தமிழகமும் ஓரளவு பெரிய மாநிலம் ஆகும். சுதந்திரத்துக்குப் பின் அமைந்த காங்கிரஸ் அமைச்சரவையில்  தமிழகத்தைச் சேர்ந்த பலர் இடம்பெற்றனர். பா.ஜ.க. அமைத்த கூட்டணியில் தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஒரே ஒருவர் (பி.ரவீந்திரநாத் குமார்) மட்டும் வென்றுள்ளார். இவர் அரசியலுக்கு இளையவர் என்றால், மாநிலங்களவை உறுப்பினர் ஒருவருக்காவது பிரதிநிதித்துவம் வழங்கியிருக்கலாம்.
பி.துரை, காட்பாடி.

எதிர்பார்ப்பு என்ன?
மத்திய அமைச்சரவையில் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்றெல்லாம் பொதுவாக நடுநிலை வாக்காளர்கள் பார்ப்பதில்லை. மாறாக, நம் தேவைகள் நிறைவேற்றப்படுகிறதா, நமது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனவா, நமது விவசாய விளைநிலங்களுக்கு, வாழ்வாதாரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மீத்தேன் திட்டம் போன்றவற்றைத் தடுக்கிறார்களா என்பதைத்தான் மக்கள் கவனிக்கின்றனர்.
க.சுல்தான் ஸலாஹீத்தின் மழாஹிரி,
தூத்துக்குடி.

தேவையில்லை!
மத்திய அமைச்சரவையில் ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதியும் கேபினட் அந்தஸ்தில் இருந்தால்தான் அந்தந்த மாநிலங்களுக்கான தேவைகளைப் பெற்றுத் தர இயலும் என்பதில்லை. அதற்கு மாநில - மத்திய அரசுகளுக்கிடையே சுமுக உறவு இருந்தால் போதும். தன் சொந்த முயற்சியால் முன்பு தமிழகத்தின் தேவைகளை தலைவர்கள் பெற்றுத் தரவில்லையா? எனவே, தமிழகத்துக்கு கேபினட் அந்தஸ்துடன் கூடிய அமைச்சர் கோரிக்கை தேவையில்லாதது.
கோ.ராஜேஷ் கோபால், 
அரவங்காடு.

புறக்கணிப்பு?
சரி அல்ல. மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். தமிழக சார்பில் ஒருவர் கூட மத்திய அமைச்சர் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அதிமுக கூட்டணியுடன் போட்டியிட்ட பாஜக, அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமளிக்க வேண்டும். தமிழகத்தை பாஜக அரசு வஞ்சிப்பதாக, புறக்கணிப்பதாகவே மக்கள் கருதுகின்றனர். எனவே, பிரதிநிதித்துவம் அளிப்பது அவசியம்.
என்.சண்முகம், 
திருவண்ணாமலை.

எதிர்பார்ப்பு கூடாது
அந்த ஒருவர் பெறல் தவறே! தேர்தல் எனும் தேர்வு நடத்தப்பட்டதில் தமிழகத்தின் ஒரு தொகுதி சந்தேகத்துக்குட்பட்டுப்  போனது. அது நிரூபணமாகியும் போனது. இந்த நிலையில் ஒருவர்  வெற்றி பெற்றதே போதுமானது. அந்த ஒருவருக்கு கேபினட் அந்தஸ்து எதிர்பார்ப்பது சரி அல்ல.
எஸ்.ஜி.இசட்கான், 
திருப்பூர்.

வருந்தி பயன் என்ன?
சரியில்லைதான். மத்தியில் ஆளும் கட்சியாக, கட்சியைச் சேர்ந்த ஒருவர்கூடத் தமிழகத்தில் எம்.பி.-யாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.   இத்தனைக்கும் ஓர் ஒளிக்கீற்றாக, மத்தியில் கேபினட் அந்தஸ்தில் இரண்டு தமிழர்கள்  இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்கள் தமிழகத்துக்கும் சேர்த்து குரல் கொடுப்பார்கள் என்று நம்புவோம். வருத்தப்பட்டு என்ன பயன்?
சொ.முத்துசாமி,
பாளையங்கோட்டை.


மக்களவை உறுப்பினர்களே...
தமிழக எம்.பி.-க்களில் ஒருவர்கூட மத்திய அமைச்சரவையில் இல்லாதது சரியா, தவறா எனத் தெரியவில்லை. எனினும், மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றும்கூட பலனில்லாமல் போனதுண்டு.
எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவி மூலம், தொகுதி சார்ந்த வளர்ச்சியையும், இன்றியமையாத் தேவைகளையும் முழுவதும் ஆராய வேண்டும்; தொடர்ந்து தொகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டு, அவற்றின் அடிப்படையில் துறை சார்ந்த அமைச்சகத்திலும் நாடாளுமன்றக் கூட்டங்களிலும் கோரிக்கை வைத்து செயல்படுத்தினால் போதும். 
கோ.லோகநாதன், 
திருப்பத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com