பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை எதிர்ப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை எதிர்ப்பது சரியா

காலம் கடந்து....
பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு என்பது காலங்கடந்து  செய்யப்படும் சமூக நீதி. நாடு சுதந்திரமடைந்து 72 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் பிற்படுத்தப்பட்டோர், மலை ஜாதியினர், சீர்மரபினர் என்றெல்லாம் மக்களை பிரிவுபடுத்தி வேலைவாய்ப்பு, மருத்துவப் படிப்பு என்று சொல்லி இட ஒதுக்கீடு என்பது ஜாதிப் பிரிவினையை மக்களிடத்தில் ஊக்குவிக்கும் ஒரு வேண்டாத நிலை. எல்லா காலத்திலும் ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடு இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட நிலையில் ஏழ்மை நிலையில் இருப்போருக்குத்தான் இடஒதுக்கீடு. இதில் ஜாதியை முன்னிறுத்தி இடஒதுக்கீடு என்பதைத் தவிர்க்க வேண்டும். நலிந்த பிரிவினர் என்ற அளவுகோல் அடிப்படையில்தான் இடஒதுக்கீடு என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
டி.வி.கிருஷ்ணமூர்த்தி, சென்னை.

அரசின் கடமை!
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் 10% கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அளிப்பதே உண்மையான சமூக நீதி. முன்னேறிய வகுப்பினரும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும் செலுத்துகின்றனர். அவர்களையும் பொருளாதாரத்தில் கைதூக்கிவிட வேண்டியது அரசின் கடமை.
ப.அடைக்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

எதிர்ப்பது தவறு!
இடஒதுக்கீட்டை 10% எதிர்ப்பது தவறு. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற இந்த இட ஒதுக்கீடு பெரிதும் உதவும். இட ஒதுக்கீட்டில் பொதுப் பிரிவினரை' (ஓ.சி.), பொது ஜாதிப் பிரிவினர்' என மாற்றினால் ஏற்கெனவே  ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு பெற்றவர்கள் இதில் வரமுடியாது. ஆனால், இதை செய்ய யாருக்கும் துணிவில்லை. பணம் இல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் இந்த இட ஒதுக்கீட்டால் பலன் அடைய முடியும். எல்லா சமூகத்திலும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் உள்ளனர்.
என்.காளிதாஸ், 
சிதம்பரம்.

எதிர்ப்பது சரி!
சரிதான். எந்த அடிப்படையில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினர் என்று கண்டுகொள்வர். இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நல்ல பொருளாதார நிலையில் இருப்பவர்கள்கூட, நான் நலிந்த பொதுப் பிரிவினைச் சேர்ந்தவர்' என்று சொல்லிக் கொள்ளத் தயங்கமாட்டார்கள். இந்த 10% இடஒதுக்கீடு கிடைக்க என்ன செய்யலாமென யோசிப்பர். இதனால், இந்த இடஒதுக்கீடு உண்மையாகவே பொருôதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு போய்ச் சேருவதைவிட மற்றவர்களுக்குத்தான் அதிகம் போய்ச் சேரும். அதனால், இதை எதிர்ப்பதுதான் சரி.
உஷா முத்துராமன், 

மதுரை.
சரியல்ல! 
இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தாழ்த்தப்பட்டவர்கள், மிகவும் பிற்பட்டோர், பழங்குடியினர் என்று அரசு இவர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கிவருவது ஊரறிந்த தகவல். இவர்கள்தான் மாநில-மத்தியஅரசு வேலைவாய்ப்புகளை நிறையவே பெற்று வருகின்றனர். பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினர் சலுகைகள் பெற முடியாது தவிர்க்கின்றனர். வேலைவாய்ப்பிலும் சரி, அரசு பிற சலுகைகள் பெறுவதிலும் சரி, பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். எனவே 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்ப்பது சரியல்ல.
சு. இலக்குமணசுவாமி, மதுரை.

சமத்துவத்தை நிலைநாட்ட...
ஜாதி, மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து, ஒட்டுமொத்தமாக பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டு முûயை அமல்படுத்துவதே இந்தியன்' என்ற சமத்துவத்தை இந்தியாவில் நிலைநாட்டுவதாக அமையும். கல்வி, வேலைவாய்ப்பு  இவையாவற்றிலும் பொருளாதார அடிப்படையிலேயே இட ஒதுக்கீட்டு முறையை உருவாக்குவதே, சமுதாயத்தில் அனைத்துப் பிரிவினரும் பயன்பெறும் வகையில் அனைவருமே மேம்பாடு அடைய முடியும்.
நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.

தேவையற்றது!
நாடு சுதந்திரம் அடைந்தவுடன் நலிவடைந்த பிரிவினருக்குக் கொடுக்கப்படும் இடஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்க வேண்டும். அதற்குள் எல்லா மக்களையும் முன்னேறச் செய்து நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டியது அரசின் பொறுப்பு என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இன்று வரை சுமார் எழுபது ஆண்டுகள் கழிந்தும், இட ஒதுக்கீடு இன்னும் நடைமுறையில் இருந்துவருவது ஆட்சியாளர்கள் நாட்டை முன்னேறுவதற்கு நல்லாட்சி புரியவில்லை என்பதற்குச் சான்றாகும். 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும் 10% இடஒதுக்கீடு தேவையற்றது.
மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

காலத்தின் கட்டாயம்!
தற்போது இட ஒதுக்கீடுச் சலுகைகளை அனுபவித்து வருபவர்கள் செல்வந்தராக இருந்தாலும் ஜாதியைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், உயர் ஜாதியினர் பரம ஏழையாக இருந்தாலும் இடஒதுக்கீடு அறவே கிடையாது; தற்போது அறிவித்துள்ள 10 சதவீத இடஒதுக்கீட்டை அரசியல் காரணங்களுக்காக கட்சிகள் எதிர்த்து வருகின்றன. பொதுப் பிரிவினரில் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ரா.ராஜதுரை, சீர்காழி.

எதிர்ப்பது ஏன்?
சலுகையை வைத்தே இடஒதுக்கீடு கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே பின்பற்றி வரும் 69 சதவீதத்துக்கு குந்தகம் ஏதும் விளையாத நிலையில் எல்லாத் தகுதியும் முழுமையாகப் பெற்றிருக்கும் முற்பட்ட வகுப்பினர் சலுகைகள் ஏதுமின்றி மேலும் நலிவுற்று, சிரமத்துக்கு உள்ளாகத்தான் வேண்டுமா?
பவளவண்ணன், நடுவிக்கோட்டை.

முற்றிலும் தவறு!
தமிழ்நாட்டில் பல கட்டங்களாக ஆட்சியாளர்களால் பிற்பட்ட வகுப்பினருக்காக இடஒதுக்கீட்டை உயர்த்தி, தற்போது 69% சதவீத இடஒதுக்கீட்டுக்கான சலுகைகளை முழுமையாக பிற்படுத்தப்பட்ட வர்க்கத்தினரே அனுபவிக்கின்றனர். ஆனால், பொதுப் பிரிவினரில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை மாணவர்களுக்கு எந்தவிதச் சலுகைகளும் கிடைப்பதில்லை. இந்த நிலையில் சமதர்ம சமுதாயம் என்பது கனவுதான். எனவே, இவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடடை எதிர்ப்பது முற்றிலும் தவறு.
கே.வேலுச்சாமி, தாராபுரம்.

குறை காண முடியாது!
கட்டாயம் கொடுக்கப்படவேண்டும். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு (பிராமணர் மற்றும் சில பிரிவுகள்) எந்த அரசுப் பணியிலும் எந்தச் சலுகையும் அளிக்கப்படவில்லை. இப்போதாவது 10 சதவீத இடஒதுக்கீடு அமலுக்கு வந்தால்தான் சரிசமமான வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டதாக இருக்கும். திறமையுள்ளவர்கள் ஏழைகளாக இருப்பினும் அவர்களுக்கும் நியாயம் வழங்குவதுதான் சரியான அணுகுமுறை. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுவது போன்று, இடையூறு இல்லாமல் 10 சதவீத இடஒதுக்கீட்டை உயர் ஜாதியினருக்கு அளிப்பதில் குறை காண முடியாது. 
கலைப்பித்தன், 
கடலூர்.

தவறான அர்த்தத்தில்...
பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினர் என்றால் முற்பட்ட வகுப்பினர்-பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினர் என அனைத்துப் பிரிவினரும் உள்ளனர். ஆனால், திமுக, மதிமுக, தி.க. போன்ற கட்சிகள் பொதுப் பிரிவு என்றாலே முன்னேறிய வகுப்பினர் என்று தவறான அர்த்தத்தில் எதிர்க்கிறார்கள். மேலும் 10% இடஒதுக்கீட்டினை ஏற்பதால் கூடுதலாக 1,000-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி இடங்கள் கிடைக்கும் என்று பிரதமர் மோடி அரசின் அறிவிப்பை ஏற்க மறுத்து வருவதுடன, தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 69%  இடஒதுக்கீட்டுக்குக்கு எந்த பாதிப்பும் பிரச்னைகளும் வராது என்ற உறுதிமொழியை ஏற்காமல் எதிர்ப்பது சரியல்ல.
செ.சுவாமிநாதன், திருவானைக்கோயில்.

முரண்
1947-இல் ஒரு குறிப்பிட்ட சமூகங்கள் தாழ்ந்து பின்தங்கிய நிலையில் இருந்தன. ஆனால், இன்று கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு பெற்று வரும் தாழ்ந்த பின் தங்கிய சமூகங்கள் பொருளாதார நிலையில் வளமுடன் வலிமையாக வலம் வருவதைக் காணலாம். பொதுப் பிரிவினர் அனைவருமே பொருளாதாரத்தில் வலுவுடன் இல்லை. அறிவு, தகுதி, திறமை இருந்தும், வர்க்க பேதங்களைச் சட்டிக்காட்டி பொதுப் பிரிவு மக்களுக்கு உண்டான 10% இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அறிவுடைமை ஆகாது. இது ஜனநாயகத்தின் முரண்.
இ.ராஜுநரசிம்மன், சென்னை.

ஆராய்ந்து...
பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை எதிர்ப்பது தேவையற்றது. ஏனெனில் பல்வேறு பிரிவினருக்கும் இதுவரை ஒதுக்கப்பட்ட சலுகைகள் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்று ஆராயவேண்டும். பொதுப் பிரிவினரும் நாட்டு மக்கள்தான் என்ற உணர்வுதான் முக்கியம். சலுகை பெறுபவர்கள் தரும் புள்ளிவிவரங்கள் சரியானவைதானா என்று ஆராய்ந்து முடிவு செய்து உதவ வேண்டும்.
ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com