கஜா புயல் பாதிப்பு காரணமாக திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

கஜா புயல் பாதிப்பு காரணமாக திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது சரியா

சரியல்ல!
கஜா புயலால் பணப்பயிர்கள் முற்றிலும் அழிந்து விட்டதால் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொலைத்து விட்டு, அதற்குரிய நிவாரணம் கிடைக்காது மனமுடைந்துள்ள திருவாரூர் தொகுதி வாக்காளர்களின் மனநிலையை தில்லியிலுள்ள தேர்தல் ஆணையம் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லைதான். தெரிந்தும் தெரியாதது போன்று, தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அனைத்துக் கட்சிகளும், மக்களும் எதிர்ப்புத் தெரிவித்தவுடன் அறிவிப்பை திரும்பக் பெற்றுக் கொண்டது சரியல்ல.
ச. கிருஷ்ணசாமி, மதுரை.

சரிதான்!
தேர்தல் ஆணையமே தன்னிச்சையாக தேர்தலை அறிவித்ததும், பிறகு ரத்து செய்ததையும் நினைக்கும்போது, மக்களின் நம்பகத்தன்மையை தேர்தல் ஆணையம் இழந்து விட்டதோ எனக் கருத இடமளிக்கிறது. எனினும், தேர்தலை ரத்து செய்ததன் மூலம் வளைந்த செங்கோலை தேர்தல் ஆணையம் நிமிர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கதே.
கோதைமாறன், திருநெல்வேலி.

ஏமாற்றம் தவிர்ப்பு
திருவாரூர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது மிக மிகச் சரியானதே. தேர்தலை முன்னிட்டு, மக்களுக்கு பொங்கல் பரிசுகளை அரசு அளிக்க முன்வராத அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும். ஒரு தொகுதிக்காக தேர்தல் ஆணையம் அக்கறையுடன் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதை விடுத்து, மற்ற 20 தொகுதிகளுக்குமே சேர்த்து தேர்தல் நடத்துவதே சிறந்தது.
நாகை சந்திரா, 
நெல்லிக்குப்பம்

சரியான முடிவுதான்
கஜா புயலினால் இப்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை செய்தி ஊடகங்கள், மக்களின் பேட்டிகள், திருவாரூர் தேர்தல் நடத்தும் அலுவலர், கட்சி வேட்பாளர், தலைவர், மாநில அரசின் தலைமைச் செயலர் வரையிலானவர்கள் தந்த அறிக்கைகள், விளக்கங்களை கவனத்துடன் கருத்தில் ஏற்றுக் கொண்டு திருவாரூர் இடைத் தேர்தலை தள்ளிவைத்தது சரியான முடிவுதான்.
ஆர். விஜயலட்சுமி, சிவகங்கை.

சிறப்பான முடிவு
திருவாரூர் இடைத் தேர்தலை ஒத்திவைத்தது சரியே! கஜா புயல் பாதிப்பு - நிவாரணப் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. தேர்தல் அறிவிப்பால் புயல் பாதிப்பு நிவாரணப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் நிலை. இதனால், மக்களின் துயர் பெருகும். மக்களின் வாழ்வாதாரத்தை அரசு கவனிக்க வேண்டும். இதற்காக தேர்தல் ஆணையம் திருவாரூர் இடைத் தேர்தலை ரத்து செய்தது சரியே! 
என். சண்முகம், 
திருவண்ணாமலை.

சரியான நடவடிக்கையே!
கஜா புயலால் பெரும் பாதிப்புக்குள்ளானது திருவாரூர் மாவட்டமே. இந்த நிலையில் பல சட்டப்பேரவைகள், உறுப்பினர்கள் இல்லாமல் காலியாக இருப்பதையும் கருத்தில் கொள்ளாமல் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது சரியல்ல. மக்களின் உடனடித் தேவையான நிவாரணப் பணிகளை அரசு தொய்வின்றி மேற்கொள்ளும் வகையில் திருவாரூர் இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது சரியான நடவடிக்கையே!
சத்தியசீலன், 
திருநெல்வேலி.

மிகச் சரி!
இடைத்தேர்தலை நடத்த பல தொகுதிகள் காலியாக இருக்கும்போது திருவாரூர் தொகுதியில் மட்டும் தேர்தல் எனத் தேர்தல் ஆணையம் ஆணையிட்டது தவறு. இப்போது கஜா புயலைக் காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்தது மிகச் சரியாகும்.
செ. டெவிட்கோவில்பிள்ளை, 
தென்காசி.

சரியான முடிவு
20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நிலுவையில் இருக்கும்போது, இறுதியில் காலியான திருவாரூர் தொகுதிக்கு மட்டும் என்ன அவசரம்? ஆரம்பமே தவறு என்பதால் அதை ரத்து செய்தது சரியான முடிவு.
பீம.சத்தியநாராயணன், சென்னை.

நிம்மதி
கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழுமையாக நிறைவேறாத நிலையில் தேர்தல் தேதியை அறிவித்ததே தவறுதான். தேர்தல் அறிவித்ததை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும்கூட விரும்பவில்லை. ஏனெனில், இடைத்தேர்தல் நடந்து அதனுடைய முடிவுகளால் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தையில் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக கஜா புயலைக் காரணம் காட்டி தள்ளிவைக்க நீதிமன்றத்தை அணுகி வெற்றி அடைந்துள்ளனர். இந்த முடிவால் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் நிம்மதி அடைந்துள்ளன.
ப. சுவாமிநாதன், சென்னை.

நடுநிலை அல்ல!
தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாக ஆளும் கட்சிக்கு சாதகமாகவே ஆதரவு நிலையை தேர்தல் ஆணையம் எடுத்திருப்பதன் மூலம் திருவாரூர் தேர்தல் ரத்து செய்திருப்பது சரியானதல்ல என்பதோடு நடுநிலை தவறியதும்கூட.
செ.சுவாமிநாதன், அம்பத்தூர்.

ஜனநாயகத்துக்கு நல்லதல்ல
ஆர்.கே. நகர் தோல்வியைப் போல இன்னொரு தோல்வியை சந்திக்க விரும்பாத ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து குரல் கொடுத்து தேர்தலை ரத்து செய்ய வைத்து விட்டன. கஜா புயல் என்று அல்ல, மார்கழி குளிர் என்ற காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்திருந்தாலும் இந்தக் கட்சிகளுக்கு நல்லதுதான். ஆனால், இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
சாய் ஜயந்த், சென்னை

சரியே!
தேர்தல் நடத்தினால், விருப்பத்தோடு வாக்கு அளிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. வாக்குப்பதிவு குறைவதற்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். மேலும், தேர்தல் பணிக்கான நபர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் நடத்துவதில் பயனில்லை. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் திருவாரூர் இடைத் தேர்தலை ஒத்திவைப்பு சரியே.
கே.எஸ். சுந்தரம், வடவள்ளி.

சரியானதுதான்!
புயல் பாதிப்பில் உள்ள மக்கள் இன்னும் முழுமையாக வாழ்வாதாரத்தைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். மேலும், அரசு நிவாரணமும் சரிவர அவர்களுக்குப் போய் சேரவில்லை. இந்நிலையில் அங்கு இடைத் தேர்தல் நடத்துவதென்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும். ஆகவே, இன்றைய சூழலில் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது சரியான முடிவாகும்.
இளங்கோவன், மயிலாடுதுறை.

குளறுபடிகள்
புயல் நிவாரண நிதி வழங்குவதற்கும் இடைத்தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாகும். நிவாரண உதவியைக் காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைப்பது தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடைந்துவிடும் என்ற பயத்தில் செய்யும் குளறுபடிகள் போன்று தெரிகிறது.
க. சுல்தான் ஸலாஹீத்தின், தூத்துக்குடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com