சனிக்கிழமை 20 ஜூலை 2019

சிறார்களுக்கு பாலியல் தொல்லை அளித்தால் மரண தண்டனை அளிக்கும் வகையில் போக்சோ' சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN | Published: 09th January 2019 02:45 AM

சரிதான்!
இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதுடன், கொலை செய்யவும் துணிந்துவிடும் காம வெறியர்களுக்கும் யாருடைய அறிவுரையும் ஏறாது. இத்தகைய கொடூரன்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குவதே சரியாக இருக்கும். எனவே, சிறுமியர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் கொடூரன்களுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது சரி.
கே. வேலுச்சாமி, தாராபுரம்.

குற்றத்தின் தன்மைக்கேற்ப...
ஒட்டுமொத்தமாக மரண தண்டனை என்பதைவிட குற்றத்தின் தன்மைக்கேற்ப ஆயுள் தண்டனையோ அல்லது வேறு தண்டனைகளோ தரலாம். மரண தண்டனை என்று சட்டம் வந்தாலும் நிரூபித்து தண்டனை வழங்குவது மிகவும் கடினம். தண்டனை உறுதி செய்யப்பட்ட பிறகும்கூட தண்டனையை நிறைவேற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நாடு இது என்பதை மறந்துவிடக் கூடாது.
மா. தங்கமாரியப்பன், 
கோவில்பட்டி.

உடனே தண்டனை
சிறார்களுக்கு பாலியல் தொல்லை அளித்தால் மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது சரி. சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது. தண்டனை உடனுக்குடன் நிறைவேற்றப்பட வேண்டும். சிறார்களுக்கு காமக் கொடூரன்கள் பாலியல் தொல்லை கொடுப்பது கொடுமை. அரக்க குணம் படைத்தவர்கள் அழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நல்லவர்கள் நாட்டில் பயமின்றி வாழ முடியும். 
என். காளிதாஸ், சிதம்பரம்.

தேவை சிகிச்சை!
வயது வந்தவர்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதே குற்றம்; அதிலும் சிறார்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பது கொடும் 
குற்றம். ஆனால், சிறார்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பவர்கள் ஒருவித மன நோயாளிகளே! மன நோயாளிகளுக்குத் தேவை, தண்டனையுடன் கூடிய சிகிச்சை தானே தவிர, மரண தண்டனை என்பதை ஏற்க முடியாது.
இ. ராஜு நரசிம்மன், சென்னை.

அரசு உதவ வேண்டும்
உலக அனுபவமில்லாத சிறுவர், சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குள் இழுக்கும் மனித மிருகங்களுக்கு அரபு நாடுகளில் உள்ளது போன்று, பொது மக்களின் முன்னிலையில் தண்டனையை நிறைவேற்ற வேண்டும். மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறுவோரின் குடும்பச் சூழலை அறிந்து அதற்கேற்ப அந்தக் குடும்பத்தினருக்கு  அரசு உதவி செய்ய வேண்டும்.
இரா. கல்யாணசுந்தரம், மதுரை.

தவறே இல்லை
சிறார்களுக்கு பாலியல் தொல்லை அளித்தல் கொடிய குற்றமென்பதில் சந்தேகமில்லை. காமச் சிந்தனையால் பச்சிளஞ் சிறார்களுக்குப் பாலியல் தொல்லைகள் தரப்படுவது மிகவும் வேதனையான செயல் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. போக்சோ சட்டத்தில் மரண தண்டனை அளிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டியது. மனித மிருகங்களை இப்படித் தண்டிப்பதில் தவறே இல்லை.
கவியழகன், சென்னை.

அவசியம் இல்லை!
சிறார்களுக்குப் பாலியல் தொல்லை அளித்தால் மரண தண்டனை அளிக்கும் வகையில் போக்சோ' சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது சரி அல்ல. சிறார்களுக்குப் பாலியல் தொல்லை அளிப்பது கொடுமையிலும் கொடுமை. மிகக் கடுமையான தண்டனை தேவைதான். சட்டத்தில் மரண தண்டனைக்குரிய குற்றங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே, அதைக் கடுமையாக்கினாலே சிறார்கள் பாலியல் தொல்லை குற்றத்துக்கும் தீர்வாக அமையும். எனவே, போக்சோ' சட்டத்தில் மாற்றம் செய்து மரண தண்டனையைக் கட்டாயமாக்க வேண்டிய அவசியம் இல்லை.
ச.கந்தசாமி, எட்டயபுரம்.

கொடுமை!
இயற்கையின் அமைப்பு பாலியல் உணர்வு. பாலியல் உணர்வை மனதாலும் போதிய பயிற்சியாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். எனினும், பாலியல் உணர்வால் பள்ளி செல்லும் சிறார்களை சிலர் இம்சை செய்து பாலியலுக்கு இணங்க வைப்பது அல்லது கட்டாயப்படுத்துவது கொடுமை, வேதனை. அத்தகைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையே சரியானது.
எஸ். முருகானந்தம், தாழக்குடி.

ஏற்புடையதல்ல!
சிறார்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பவர்களுக்கு மரண தண்டனை என்பது ஏற்றுக் கொள்ள இயலாது. அவர்களுடையை சொத்தை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாம். உலகின் பல நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு வரும் நிலையில் இது ஏற்புடையதல்ல. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யலாம். பாலியல் தொல்லை தருபவர்களுக்கு மரண தண்டனை தவிர்த்து ஏனைய தண்டனைகளை அளிக்கலாம்.
டி.ஆர். ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.

மாற்றத்துக்கு உதவும்
சிறார்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் போக்சோ' சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. கடுமையான சட்டங்கள் இருந்தால்தான் பாலியல் தொல்லை கொடுக்க அச்சப்படுவார்கள். இந்தச் சட்டத்தின் மூலம் சிறார்கள் நலன் காக்கப்படும். தவறு செய்தால் மரண தண்டனை என்ற அச்சமே, அவர்களை பாலியல் தொல்லை கொடுக்கக் கூடாது என மாற்றும்.
என். சண்முகம், 
திருவண்ணாமலை.

கருத்தாக்கம் மாறுமா?
தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும். அரேபிய நாடுகளில் குற்றங்கள் குறைவாக இருப்பதற்கு, அங்கு வழங்கப்படும் தண்டனை முறைகள் முக்கியக் காரணம். சிறார்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் மனித மிருகங்களுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் போக்சோ' சட்டத்தில் மாற்றம்  செய்யப்பட்டிருப்பது நல்ல முடிவு. மரண தண்டனை' கூடாது என்கிற வாதத்தை நாம் திரும்பப் பெற வேண்டிய காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
பொன்.கருணாநிதி, கோட்டூர்.

கருணை கூடாது!
குழந்தைகளின் அறிவாற்றல், படைப்பாற்றல் திறன் நம் நாட்டுக்கு மிகவும் அவசியம். நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்' என்ன என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லித் தர வேண்டும். பள்ளி, வெளியில் சென்று விளையாடிவிட்டு வரும் குழந்தைகள் சொல்ல வரும் விஷயத்தை பெற்றோர் கவனிக்க வேண்டும்.
பாலியல் துன்புறுத்தலினால் மரணம், ஊனம், மனத்தளவில் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் வாழ்க்கையும் அவர்தம் பெற்றோரும் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய கொடூர  செயல்புரிவோர் யாராக இருந்தாலும் மரண தண்டனை அளிப்பது அவசியம். அவர்தம் குடும்பத்தினருக்கு அரசு சலுகைகளையும் பறிக்க வேண்டும்.
ஆர். விஜயலட்சுமி, 
சிவகங்கை.

மாற்றம் சரி அல்ல!
மரண தண்டனை என்பதையே ஒழிக்க வேண்டுமென பலதரப்பு கோரிக்கைகள் வந்துள்ள தருணத்தில், சிறார்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் செய்வது சரியல்ல. சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை இதன் மூலம் நிறுத்தி விட முடியாது. 
அ.சம்பத், திருவரங்கம்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை எதிர்ப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
மன்மோகன் சிங்குக்கு மாநிலங்களவை வாய்ப்பை திமுக அளித்திருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசம்-என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
தமிழக எம்.பி.-க்களில் ஒருவர், மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்தில் இல்லாமல் இருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வுதான் என்ன என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...