தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு திமுக இடையூறாக உள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு திமுக இடையூறாக உள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது சரியா

ஏற்புடையதுதான்!
மத்திய அமைச்சரவையில் தி.மு.க. பங்கேற்றிருந்தபோது தங்களுக்குரிய இலாகாவை பெற்று முன்னேறினர். ஆனால், தமிழக முன்னேற்றத்துக்கு தடையாக தி.மு.க. உள்ளது என்பதைவிட அலட்சியமாகச் செயல்பட்டு வருவதுதான் உண்மை. மேலும், மத்திய அரசுடன் திராவிட கட்சிகள் இணக்கமாகச் செயல்பட்டு வருவது அவர்களின் முன்னேற்றத்துக்காக மட்டுமே; தமிழகம் முன்னேற்றம் பெறுவதற்காக அல்ல. மத்திய அரசும் திராவிடக் கட்சிகளை மகுடி ஊதி ஆட்டுவிப்பதற்கான காரணம், ஊழல்தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.
கதிர் தியாகு, விருத்தாசலம்.

ஏற்க முடியாது!
தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு தி.மு.க. இடையூறாக உள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது சரியல்ல. தி.மு.க.வின் தற்போதைய செயல்பாடுகள் எல்லாம் வரும் தேர்தல்களுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில்தான் உள்ளது. பா.ஜ.க.வைப் பகிரங்கமாக விமர்சிப்பது என்பதெல்லாம், தமிழகத்துக்கான மத்திய அரசின் திட்டங்களுக்கு இடையூறானவை என கொள்ளக் கூடாது. நீதிமன்றம் வரை சென்று தமிழகத்தில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல்களைத் தடுத்ததை வேண்டுமானால், தி.மு.க. செய்த முக்கியமான இடையூறாகக் கருதலாம். தமிழக முன்னேற்றத்துக்கு இடையூறாக உள்ளது என்பதை ஏற்க முடியாது.
ச.சுப்புரெத்தினம், 
மயிலாடுதுறை.

எதிர்ப்பே காரணம்
தமிழகத்தில் மத்திய அரசும் தமிழக அரசும் என்ன நடவடிக்கை எடுத்தாலும் தனது எதிர்ப்பை தி.மு.க. தெரிவிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை உள்ளிட்டவற்றில் கடும் எதிர்ப்பை தி.மு.க. தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றிலும் பிற கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு தி.மு.க. ஆதரவு அளித்து வருகிறது. இதனால்தான் தமிழக முன்னேற்றத்துக்கு தி.மு.க. இடையூறாக உள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கே.ஏ.நாராயணன், 
கன்னியாகுமரி.

தடைக்கல் அல்ல!
மத்திய அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, மக்களுக்கு விழிப்புணர்வு தர வேண்டிய தார்மிகக் கடமை எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறது என்பதை உணர்த்தும் திமுகவின் செயல்பாடுகள், தமிழக முன்னேற்றத்துக்கு தடைக்கல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நவீன்குமார், பட்டுக்கோட்டை.

ஒருங்கிணைந்து...
தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க. தடையாக இருக்கிறது என்று மொழிய வேண்டிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு திமுக தடையாக இருக்கிறது என்று மொழிந்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது. மக்களின் முன்னேற்றத்துக்கு ஆளும் தரப்பினரும், எதிர்த்தரப்பினரும் ஒருங்கிணைந்து தீர்வு காண வேண்டும்.
எஸ்.ஜி. இசட்கான், திருப்பூர்.

விதிவிலக்கல்ல!
இந்தக் காலத்தில் எந்த அரசியல் கட்சியினரும் தன் மாநில முன்னேற்றத்தில் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை. இதற்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. தி.மு.க.வை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறை கூறுவது, கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிவது போன்றது. குறை சொல்லுபவரின் கட்சியினரைவிட, குறை சொல்லப்பட்ட கட்சியினர் எவ்வளவோ மேல். 
க.சுல்தான் ஸலாஹீத்தீன், 
காயல்பட்டினம்.

வாய் தவறி...
தமிழக முன்னேற்றத்துக்கு தி.மு.க. இடையூறாக உள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது சரியல்ல. தமிழகத்தில் தி.மு.க. இடையூறாக உள்ளது என்பவர், கேரளத்தில் இடதுசாரிகள் இடையூறாக உள்ளதாகவும் தெலங்கானாவில் சந்திரபாபு நாயுடு இடையூறாக உள்ளதாகவும் கூறுவார். தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க. இடையூறாக உள்ளது என்பதற்குப் பதிலாக, வாய் தவறி மாற்றிச் சொல்லி விட்டார்போலும்.
ச.கந்தசாமி, எட்டயபுரம்.

காழ்ப்புணர்வே...
தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு தி.மு.க. இடையூறாக உள்ளது என மத்திய அமைச்சர் அரசியல் காழ்ப்புணர்வோடு கூறியுள்ளார். மீத்தேன் தொடங்கி ஸ்டெர்லைட் வரை பல்வேறு பிரச்னைகளில் மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கத் தவறிவிட்டது.  காவிரி முதல் நீட் தேர்வு வரை எல்லா பிரச்னைகளிலும்  தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருக்கும் பா.ஜ.க.வை தி.மு.க. போன்ற கட்சிகள் எப்படி பாராட்ட முடியும்?  எனவே, தி.மு.க.வின் எதிர்ப்பால் சில திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்ற எரிச்சலின் வெளிப்பாடுதான் மத்திய அமைச்சரின் கருத்து. 
பொன்.கருணாநிதி, கோட்டூர்.

நியாயம் இல்லை!
தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு தி.மு.க. இடையூறாக இருப்பதாக மத்திய அமைச்சர் கூறுவதில் நியாயம் இல்லை. தமிழக மக்களுக்கு காவிரி நீர் கிடைக்கக் கூடாது என்பதற்காக மேக்கேதாட்டு அணையை கர்நாடகம் கட்டும் வகையில், அதன் திட்ட வரைவுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு தி.மு.க. எதிர்ப்பைத் தெரிவித்தது. இது தமிழக முன்னேற்றத்துக்கு இடையூறா? 
பி.துரை, காட்பாடி.

தவறானது
ஆட்சியில் தி.மு.க. இல்லை; தி.மு.க. எம்.பி.க்கள் மக்களவையில் இல்லை;  மாநிலங்களவையிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தி.மு.க. எம்.பி.க்கள் இல்லை. இத்தகைய நிலையில் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தி.மு.க. எவ்வாறு தடையாக இருக்க முடியும்?  மேலும், மக்களை தி.மு.க. எழுச்சியுறச் செய்து மத்திய அரசின் திட்டங்களைத் தடுக்கவும் இல்லை. எனவே, திமுக மீது அபாண்டமாகக் குற்றஞ்சாட்டுவது தவறு.
பா.தாணப்பன், தச்சநல்லூர்.

உள்நோக்கத்துடன்...
ஒரு மாநிலம் முன்னேறுவது கட்சிகளால் மட்டுமல்ல; மக்களின் ஒத்துழைப்பினாலும்தான். எந்தத் தடை வந்தாலும் அந்தத் தடைகளைப் படிக்கற்களாக்கி முன்னேற மக்கள் நினைத்து விட்டால் ஒரு கட்சி, அதுவும் எதிர்க்கட்சியே ஆனாலும் அதனால் எப்படித் தடை வரும்?  ஒருவரை குற்றம் சொல்ல வேண்டும் என்று மனதில் தோன்றிவிட்டால், அவர் வேண்டாதவராகி கால் பட்டாலும் குற்றம், கை பட்டாலும் குற்றம் என்ற மனநிலை உள்ளவர்தான் இப்படிப் பேசுவார். 
உஷா முத்துராமன், மதுரை.

நாகரிகம் அல்ல!
மக்களுக்கான எந்த திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. எந்தத் திட்டத்துக்கு தி.மு.க. இடையூறாக இருந்தது என்று கூற முடியுமா? சாதனையைச் சொல்லி வோட்டு வாங்க வேண்டும். மாறாக, எதிர்க்கட்சிகள் மீது அவதூறாக எதையும் கூறக் கூடாது.  அது அரசியல் நாகரிகம் அல்ல. என்ன செய்ய வேண்டும் என்று எண்ண வேண்டும். மற்றவர்களைக் குறை கூறுவதில் பயனில்லை.
தொ.எழில் நிலவன், களமருதூர்.

வீண் பழி!
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. தமிழகத்துக்கு மத்திய அரசு உதவினால் எல்லாக் கட்சிகளும் வரவேற்கும். ஏனென்றால், தமிழக மக்களின் முன்னேற்றம் என்பது பொதுவான ஒன்று. திமுக கூறுவதைக் கேட்டு மத்திய அரசு செயல்படவில்லை. தி.மு.க. கூட்டணிக் கட்சியும் கிடையாது. தி.மு.க. மீது வீண் பழி சுமத்துகிறார் என்பதே உண்மை.
என்.சண்முகம், 
திருவண்ணாமலை.

அழகல்ல!
தமிழக முன்னேற்றத்துக்கு தி.மு.க. இடையூறாக உள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது சரியல்ல. பொது இடங்களில் கருத்துத் தெரிவிக்கும்போது என்ன காரணம், என்ன செயல்கள் என்று குறிப்பிட்டு அமைச்சர் சொல்ல வேண்டும். மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் கண்ணை மூடிக் கொண்டு தி.மு.க. எதிர்க்கவில்லை. எந்தத் திட்டங்கள் மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் தங்களுக்கு பாதகம் எனது நினைத்து எதிர்க்கிறார்களோ, அத்தகைய திட்டத்தை தி.மு.க. எதிர்க்கிறது. வீண் குற்றச்சாட்டு சுமத்துவது மத்திய  அமைச்சருக்கு அழகல்ல!
பி.கே.ஜீவன், கும்பகோணம்.

வழக்கம்தான்
தேர்தல் நேரத்தில் கூட்டணியில் இருந்தால் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வதும், மற்ற நேரங்களில் தூற்றிக் கொள்வதும் அரசியல்வாதிகளுக்கு வாடிக்கை. இதனால்தான் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தி.மு.க.வை குறை கூறியுள்ளார். இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
கோ. ராஜேஷ் கோபால், 
அரவங்காடு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com