பா.ஜ.க.வின் ஆட்சி, ஊழல் இல்லாத ஆட்சி என பிரதமர் மோடி பெருமிதம் கொள்வது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

பா.ஜ.க.வின் ஆட்சி, ஊழல் இல்லாத ஆட்சி என பிரதமர் மோடி பெருமிதம் கொள்வது சரியா


சரிதான்!
இந்தியாவின் ஊழல் கட்சிகளிலிருந்து விலகி, வித்தியாசமாக இந்திய வளர்ச்சியின் மறுமலர்ச்சிக்கு வித்திடும் வகையில் பாஜக ஆட்சி செயல்படுகிறது. பொருளாதார புரட்சி ஏற்படும் வகையில்     மேக் இன் இந்தியா' உள்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பது நாட்டின் செழுமைக்குச் சான்று. எனவே, ஊழல் இல்லாத ஆட்சி' என்று பிரதமர் மோடி பெருமிதம் கொள்வது சரிதான்.
இரா. கோவிந்தசாமி, சி.என்.பாளையம்.

காங்கிரஸ் ஆட்சியைவிட...
ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் கூறிக் கொண்டிருக்கும்போது, பா.ஜ.க ஆட்சியில்  ஊழல் இல்லை' எனப் பிரதமர் மோடி பெருமிதம் கொள்வது ஏற்கக்கூடியதாக இல்லை. காங்கிரஸ் ஆட்சியைவிட ஊழல் குறைவு எனக் கூறலாம்.
2014 தேர்தலின்போது பாஜக அளித்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று? எதிர்க்கட்சிகள் கேட்கும்போது பதில் சொல்லாத பிரதமர், ஒவ்வொரு மேடையிலும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், மக்களின் தோழன் என சொல்லிக் கொண்டு கஜா புயலால் தமிழகம் தவித்தபோது எந்தவொரு ஆறுதலும் தெரிவிக்காதது தமிழர்களுக்கு வருத்தமே.
க. அருச்சுனன், செங்கல்பட்டு.

மக்கள் அறியாததல்ல
பா.ஜ.க. வின் ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி என்று மோடி பெருமிதம் கொள்வது தவறு. பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவர் அந்தக் காலத்தில் பணம் பெற்ற விவகாரம் தொடங்கி, வியாபம்' ஊழல் வரை பா.ஜ.க.வின் வரலாறு மக்கள் அறியாததல்ல.
கர்நாடக மாநிலத்தில் சுரங்க ஊழலில் சிக்கியவர்கள் யார் என்பதையும் நாடு அவ்வளவு விரைவில் மறக்காது. மல்லையா தொடங்கி பெரும் குற்றவாளிகளுக்குத் துணையாக நிற்பவர் யார் என்பதும் மக்களுக்குத் தெரியும். 
ரஃபேல்' விமான பேரம் தொடர்பாக சந்தேகத்தின் நிழல் பா.ஜ.க.-வின் மீது படரத் தொடங்கி விட்டது. இத்தனை பிரச்னை இருக்கும்போது, ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி பா.ஜ.க.  என்ற மாயை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.
பொன். கருணாநிதி, கோட்டூர்.

மறந்துவிடக் கூடாது
பா.ஜ.க. ஆட்சி குறித்து பிரதமர் பெருமிதம் கொள்வதில் தவறில்லை. ஊழலற்ற ஆட்சியை மட்டுமல்ல, நாட்டை முன்னேற்ற பல வழிகளிலும் பாடுபடுவது பா.ஜ.க. அரசாகும்.
நாடு மிகவும் பொருளாதாரத்தில் நலிவடைந்து இருந்ததனால், அதைப் பலப்படுத்த பெரும் முயற்சி எடுத்ததால் பலன் கொஞ்சமாகக் கிடைத்தது போலத்தான் தோன்றும். எந்தவோர் ஊழல் குற்றச்சாட்டும் இந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய அரசின் மீது கூற முடியாது. முந்தைய ஆட்சியில் நடந்த 2ஜி, நிலக்கரி ஊழல் முதலியவற்றை நாம் மறந்துவிட முடியாது.
மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

என்ன சந்தேகம்?
பா.ஜ.க. வின் ஆட்சி ஊழலற்ற  ஆட்சி 
எனப் பிரதமர் பெருமிதம் கொள்வது சரியே. இதில் என்ன சந்தேகம்? சர்க்காரியா கமிஷன் ஊழல், போஃபர்ஸ் பீரங்கி ஊழல் போன்றவை நடந்ததா? இல்லையே? மேலும், பா.ஜ.க. ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதை மறுக்க முடியாது.
கந்த ஜெயராம், சென்னை.

பொறுத்திருந்து பார்ப்போம்
பா.ஜ.க.வின் ஆட்சியில் ஊழல் உண்டா, இல்லையா  என்பதற்கு இப்போது பதிலைக் கண்டுபிடிப்பதும், பிரதமர் மோடியின் நேர்மை மீது இப்போது எடை போடுவதும் சிரமம். சில மாதங்கள், ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடியின் வரலாறு பற்றி காலம் பதில் சொல்லும். பொறுத்திருப்போம்.
எஸ். நாகராஜன், அஸ்தினாபுரம்.

சிறப்புதான்!
பிரதமர் மோடி பெருமிதம் கொள்வது 200 சதவீதம் சரி. ஏனெனில், கடந்த 2004-ஆம் ஆண்டு இடது சாரிகள் துணையுடன் காங்கிரஸ் ஆட்சி செய்த போது வரலாறு காணாத 
2 ஜி ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் என்று பட்டியல் ஏராளம். இத்தகைய ஊழல்களைச் செய்து அரசுப் பணத்தை காலி செய்த கடந்த ஆட்சியைவிட, கடந்த நான்கரை ஆண்டுகளில் பிரதமர் மோடியின் ஆட்சி சிறப்பானதுதான். 
அ.கோதண்டன், 
புளியந்தோப்பு.

இன்றைய இந்திய நிலை!
ஊழலை வியப்போடு பார்த்தால் அது வெளிநாடு. நேர்மையை வியப்போடு பார்த்தால் அது இந்தியா. இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை. மத்தியப் பிரதேசத்தில் 50-க்கும் மேற்பட்டோர் சாவுக்குக் காரணமான வியாபம் ஊழல், ஐபிஎல் கிரிக்கெட் ஊழலில் லலித் மோடியை வெளிநாட்டுக்குத் தப்ப வைத்தது எனப் பல ஊழல்கள். எனவே,  பொய் கூறி மக்களை ஏமாற்றி, மக்களாட்சியின் மாண்பையே குலைத்ததுதான் மிகப் பெரிய ஊழல்.
க. தியாகராசன், குடந்தை.

கடினம் என்றாலும்...
மத்தியில் அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் பெரும்பாலான ஊழல்கள் நிரூபணமாகியுள்ளன. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்துக்குப் பிறகு, சாதாரண குடும்பத்தில் பிறந்து பா.ஜ.க.வில் இணைந்து, குஜராத் மாநில முதல்வராக திறம்படச் செயலாற்றி, இந்தியாவுக்கு பிரதமராக உயர்ந்தவர் நரேந்திர மோடி. நிர்வாகத்தில் ஊழல் இல்லாமல் ஆட்சி செய்வது கடினம். இதை பிரதமர் மோடி நன்கு உணர்ந்து பெருமிதம் கொள்கிறார். தவறில்லை.
இ.ராஜு நரசிம்மன், சென்னை.

சாதனைதான்!
கட்சி நடத்த தொண்டர்கள் வேண்டும்; தொண்டர்கள் தொடர ஆட்சி வேண்டும்; ஆட்சி நிலைக்க ஊழல் செய்ய வேண்டும்' என்ற இன்றைய சூழ்நிலையில், தன் மீதோ, தன் அமைச்சரவையின் மீதோ ஒரு சிறு ஊழல் குற்றச்சாட்டுகூட இல்லாமல் ஆட்சியைத் திறம்பட நடத்தும் பிரதமர் மோடி சாதனையாளர்தான்.
ரஃபேல் விமான கொள்முதல் விவகாரத்தில்கூட காங்கிரஸ் தவிர வேறு எந்த எதிர்க்கட்சியும் அக்கறை காட்டாததில் இருந்தே, அது ஒரு பொய் குற்றச்சாட்டு என்பது மக்களுக்குப் புரிந்து விட்டது. உயர் நிலையிலிருந்துதான் ஒழுக்கம் முதலில் தொடங்க  வேண்டும். மோடி  பெருமிதம் கொள்வது நியாயம்தான்.
சி. முத்துசாமி, 
பாளையங்கோட்டை.

ஊழல் புரியாதவராக...
பா.ஜ.க. ஊழல் இல்லாத ஆட்சி எனப் பிரதமர் மோடி கூறி வருவது சரியே. ரஃபேல் விமான கொள்முதல் விவகாரத்தில்கூட ஊழல் எதுவும் நடைபெற்றதாக ஆதாரம் இல்லை என உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது. ரஃபேல் விமான விவகாரத்தைத் தவிர மற்ற எதையும் கண்டித்து ஊழல்' எனப் பேச எந்தக் கட்சிகளாலும் முடியாதபோது, ஊழலற்ற ஆட்சி' என்பது சரிதானே. ஊழல் புரியாத தலைவராகத்தான்  பிரதமரை மக்கள் பார்க்கிறார்கள். ஊழல் இல்லாமல் இருந்தால்தான் வளர்ச்சி வரும்.
ராஜசேகர், ஆலப்பாக்கம்.

தேர்தல் முடிவு செய்யும்
பா.ஜ.க.வின் ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி எனப் பிரதமர் மோடி பெருமிதம் கொள்வது சரியல்ல. பிரதமர் பதவி என்பது ஒரு மகத்தான பதவியாகும்.
அவரைத் தாழ்வாகப் பேசுவதோ அல்லது எழுதுவதோ முறையற்ற செயலாகும். ஆனால், பா.ஜ.க.வின் ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி என்பதற்கு நாட்டு மக்கள்தான் சான்று அளிக்க வேண்டும். வாக்களித்த, வாக்காளர்களின் எண்ணம் வெளிப்பட வேண்டும்.
ஊழல் இல்லை என்ற பிரதமரின் பெருமிதம் சரிதானா என்பதை 2019-இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செய்யும். அதுவரை பொறுத்திருப்போம்.
ச.கண்ணபிரான், 
திருநெல்வேலி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com