கடந்த வாரம் கேட்கப்பட்ட "நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

இந்தியாவிலும், தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும், எத்தனை எத்தனை புதிய கட்சிகள் தோன்றினாலும் அதில் மக்களுக்கு பாரம்பரிய கட்சி மக்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி எது

ஏற்கலாம்
 இந்தியாவிலும், தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும், எத்தனை எத்தனை புதிய கட்சிகள் தோன்றினாலும் அதில் மக்களுக்கு பாரம்பரிய கட்சி மக்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி எது என்பது நன்றாகத் தெரியும். மேலும், நீட் தேர்வுக்கு பல இடங்களில் பல்வேறு போராட்டங்கள், தற்கொலைகள் நடந்தது என்பது எல்லோரும் அறிந்ததே. நீட் தேர்வை ரத்து செய்வதாக காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை ஏற்கலாம்.
 கீதா முருகானந்தம், கும்பகோணம்.
 ஏற்க முடியாது
 தேர்தல் கால வாக்குறுதியாக இருந்தால்கூட நீட் தேர்வு ரத்து என்பதை ஏற்க முடியாது. நீட் தேர்வில் தேர்ச்சியடைய புத்திக் கூர்மையும் பொது அறிவும் உள்ள மாணவனால்தான் முடியும். சிறந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவராவது நாட்டுக்கு நல்லது. மேலும், மருத்துவக் கல்லூரியில் நன்கொடை கொடுத்து சேர்க்கை பெறுவது நீட் தேர்வு மூலம் தடுக்கப்பட்டுள்ளது. பணம் மட்டுமே தகுதியானால் திறமையற்ற மாணவர்களும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விடுவர். நீட் தேர்வின் மூலம் பண வசதியற்ற ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் மாணவர்களும் நீட் தேர்வில் பங்கு பெறும்போது, தமிழக மாணவர்களுக்கு மட்டும் விலக்கு தேவையென்பது மாணவர்களின் திறமைக்கு இழுக்கும் அவமானமும் தரக்கூடியது.
 மா.தங்கமாரியப்பன்,
 கோவில்பட்டி.
 சாத்தியம்தான்!
 நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கத்து. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. 50 சதவீதத்துக்குமேல் இட ஒதுக்கீடு கூடாது என்று நீதிமன்றம் கூறிய பிறகும்கூட, 69 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் தொடரவில்லையா? அரசு நினைத்தால் நீட் தேர்வை நிச்சயம் ரத்து செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
 பொன்.கருணாநிதி, கோட்டூர்.
 வாய்ப்பு இல்லை!
 ஏற்க முடியாது. ஏனெனில் நீட் தேர்வு இந்தியாவின் கல்விக் கொள்கையாகிவிட்டது. தேர்வு ரத்து செய்யப்பட வேண்டுமானால், இரண்டு சாத்தியமாக்கப்பட வேண்டும். ஒன்று, கல்வி மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இரண்டாவது, மத்தியில் முழுமையான பலம் பெற்று ஆட்சிப் பொறுப்பை காங்கிரஸ் ஏற்க வேண்டும். தற்போது நடைபெறும் தேர்தல்கால கருத்துக்கணிப்புகளின்படி பாஜகவுக்கோ, காங்கிரஸுக்கோ முழு பலம் கிடைக்காது என்று சொல்கிறது. எது ஆட்சியைப் பிடித்தாலும் எதிர்க்கட்சி வலுவான நிலையில் இருக்கும் என்பதால் மசோதா நிறைவேற வழி இல்லை. எனவே, நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பே இல்லை.
 மகிழ்நன், கடலூர்.
 கட்டாயம்?
 நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை நிறைவேற்றியே தீர வேண்டிய சூழ்நிலை உள்ளது. நீண்ட பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சி அண்மைக்காலமாக மிகவும் பலவீனம் அடைந்து வருகிறது. அந்தக் கட்சி மீண்டும் புத்துணர்ச்சி பெற வேண்டுமானால், தனது கடந்தகால தவறுகளைத் திருத்திக் கொண்டு வாக்குறுதிகளைக் காப்பாற்றியே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
 எம்.எஸ். இப்ராகிம், சென்னை.
 தேர்தல் தந்திரம்!
 அரசியல் காரணமாக பலத்த எதிர்ப்பை நீட் தேர்வு சந்தித்தாலும் துணிச்சலாக எதிர்கொண்டு ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெற்றி பெற்று, நன்கொடை கொடுக்காமல் மருத்துவம் படிக்கும் முன்னேற்றத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இட ஒதுக்கீடு என்ற சலுகையால் குறைந்த தகுதி, தரத்திலேயே தேங்கி விடாமல் சவால்களை துணிச்சலாக எதிர்கொண்டு வெல்வதே வளர்ச்சியாகும். நீட் தேர்வு ரத்து என்ற காங்கிரஸ் வாக்குறுதி, வாக்குகளைக் கவரும் தேர்தல் தந்திரம்.
 மல்லிகா அன்பழகன், சென்னை.
 திமுக-வுக்காக...
 நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதைக் கண்டிப்பாக ஏற்கலாம். ஏனெனில், தமிழ்நாட்டில் நீட் தேர்வை திமுக எதிர்க்கிறது. அதன் உதவியில்லாமல் இங்கு வெற்றி பெற்று எம்.பி.க்களைப் பெற முடியாது. மேலும், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு காங்கிரஸுக்கு கிடைத்தாலும், திமுகவின் ஆதரவு தேவை. மற்றுமொரு காரணம், பாஜக கொண்டு வரும் எந்தத் திட்டத்தையும் எதிர்ப்பது என்ற அணுகுமுறையையும் கூறலாம். காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலையில், நீட் தேர்வை ரத்து செய்வதால் இழப்பு ஏதும் இல்லை. வேறு மாதிரியான நடைமுறைகளைக் கொண்டுவருவதில் சிக்கலும் இல்லை.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 குழப்பம்
 நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குழப்ப நிலையை ஏற்படுத்தும். இந்தியாவில் மட்டும்தான் ஆட்சிகள் மாறும்போது கல்வித் துறையிலும் பல தலைகீழான மாற்றங்கள் நிகழ்கின்றன. நீண்ட விவாதங்களெல்லாம் முடிந்து இறுதி செய்யப்பட்டுவிட்ட நீட் தேர்வுக்கு பலரும் தயாராகி வரத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் தேர்வு ரத்து என்பது ஒருவித சலிப்பு மனநிலையை உண்டாக்கும்.
 வே.வரதராஜன், மகாஜனம்பாக்கம்.
 மாநில அரசுகளுக்கே...
 நிச்சயம் ஏற்கலாம். எந்த ஓர் அரசும் மாறும்போதும் முந்தைய அரசின் கொள்கைகளை ரத்து செய்த உதாரணங்கள் நிறைய உண்டு. நீட் தேர்வைப் பொருத்தவரை மக்கள் விரும்பி ஏற்காத ஒன்று என்பதை கடந்தகால கசப்பான அனுபவங்களே சான்று. கல்விக் கொள்கையை மாநில அரசே தீர்மானிக்க வேண்டுமே தவிர மத்திய அரசு அதில் தலையிடக் கூடாது என்பதே பெரும்பாலானோரின் கருத்தாகும்.
 உ.இராசமாணிக்கம், கடலூர்.
 அரசியல் வேண்டாம்!
 இந்திய மாணவர்களுக்கு நீட் தேர்வு தேவையா, தேவையில்லையா என மாணவர்களின் பெற்றோர் முடிவு செய்ய வேண்டும். நீட் தேர்வை எழுதக்கூடிய மாணவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், முடிவு அவர்களுடைய விருப்பம். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் கூறி தனது அரசியல் லாப, நஷ்டத்தைக் கணக்கிட வேண்டாம். ஏனெனில் நீட் தேர்வு என்பது மாணவர்களின் எதிர்காலம் ஆகும். இதை ஏற்க முடியாது.
 என்.கணபதி சுப்ரமணியன், ஈரோடு.
 விருப்பமாக மாறினால்...
 மாநில அரசு விரும்பினால் மத்திய அரசின் நீட் தேர்வுத் திட்டத்தில் இணையலாம், இணையாமலும் இருக்கலாம். இணைந்த பிறகு விரும்பினால் விலகிக் கொள்ளலாம். இவ்வாறு விருப்ப வாய்ப்பு அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சியில் நீட் அறிமுகப்படுத்தப்பட்டது. பாஜக ஆட்சியில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றால், நீட் தேர்வை மீண்டும் விருப்ப வாய்ப்புத் திட்டமாக மாற்றிச் செயல்படுத்துவதன் மூலம், அது ரத்து செய்யப்படும் என்ற காங்கிரஸின் அறிவிப்பு ஏற்புடையதே.
 ஆதிலெமு, மதுரை.
 காலம் பதில் சொல்லும்!
 நீட் தேர்வுக்கு வழிவகுத்ததே, மன்மோகன் சிங் பிரதமராக இருந்த திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசுதான். உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாகத்தான் நீட் தேர்வு தற்போது நடைமுறையில் உள்ளது. ஆக, வினை விதைத்தவர்களே வினையை அகற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். ஆட்சியைப் பிடிப்பார்களா, வாக்குறுதியை நிறைவேற்றுவார்களா? காலம்தான் பதில் சொல்லும்.
 கே.வேலுச்சாமி, தாராபுரம்.
 நிர்ப்பந்தம்!
 நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை ஏற்கலாம். தமிழகத்தின் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், அதை ரத்து செய்வதால் பிரச்னைகள் வர வாய்ப்பில்லை. மேலும், தமிழகத்தில் மட்டுமே நீட் தேர்வு ரத்தாகும்; தேசிய அளவில் அல்ல என்பதை மக்கள் உணர்ந்தால் நல்லது. பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெறும் கட்-ஆஃப் மதிப்பெண்களே மருத்துவப் படிப்பில் சேர போதுமானதாகும்; நீட் தேர்வு தேவையில்லை. காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், மத்தியில் ஆட்சி அமைக்க தமிழக கூட்டணிக் கட்சிகளின் தயவு தேவை. எனவே, நீட் தேர்வை ரத்து செய்வதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கும் என நம்பலாம்.
 ச.கந்தசாமி, எட்டயபுரம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com