வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.72,000 அளிப்பதாக ராகுல் காந்தி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதி குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.72,000 அளிப்பதாக ராகுல் காந்தி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதி குறித்து என்ன நினைக்கிறீர்கள்

வரவேற்கத்தக்கது
ராகுல் காந்தி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதி மிகவும் வரவேற்கத்தக்கதுதான். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களை மிகவும் நேர்மையான முறையில் அரசியல் சார்பற்ற உன்னத வழியில் புள்ளிவிவரம் சேர்த்து கணக்கிட்டு வழங்க வேண்டும். ஆண்டுக்கு தலா ரூ. 72,000 அளித்தால் மாதம் ரூ.6000 ஆகிறது. இடைத்தரகர்கள், சமூக விரோதிகள் தலையிடாமல் குழு அமைத்துப் பட்டியல் தயார் செய்து இந்த நிதியை வழங்க வேண்டும். இந்தத் திட்டம் வெற்றிபெற வேண்டும். 
ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

ஏற்புடையது அல்ல!
ராகுல் காந்தியின் பாட்டி பிரதமர் இந்திரா காந்தி தனியார் வங்கிகளில் சிலவற்றை தேசியமயமாக்கினார். மன்னர் மானியத்தை ஒழித்தார். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் வறுமையை ஒழிப்போம் என்று 1971 நாடாளுமன்ற தேர்தலில் முழங்கினார். இதனால் பெரிய வெற்றியை எதிர்பார்த்திருந்த எதிர்க்கட்சிகள் பெரும் தோல்வி அடைந்தன. இந்திரா காந்திக்கு அமோக வெற்றி கிடைத்தது. ஆனால், வறுமை ஒழிக்கப்பட்டதா என்பது இன்னும் கேள்விக்குறிதான். அதற்கான விடையே ராகுல் காந்தியின் இந்தத் தேர்தல் வாக்குறுதி. மக்களின் ஏழ்மையை மூலதனமாக்கி தேர்தல் வெற்றிக்கு காங்கிரஸ் கட்சி திட்டமிடுவது ஏற்புடையதல்ல.
சிவ.ந.ஏழுமலை,சின்ன காஞ்சிபுரம்.

சாத்தியம்தான்!
காங்கிரஸ் வாக்குறுதி சாத்தியமே. பாஜக அரசு மானியம் வழங்குகிறது; அதிகரிக்கவும் செய்கிறது. தற்போது காங்கிரஸ் அறிவித்துள்ள நிதி, பாஜக அரசு தற்போது வழங்கி வரும் நிதியைவிடக் குறைவு என நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகிறார். அப்படியானால், காங்கிரஸ் அறிவித்துள்ள திட்டம் சாத்தியம் என்றே தெரிய வருகிறது. தவிர, போதிய நிதி இந்தியாவில் உள்ளது என ராகுல் காந்தியும் உறுதிப்படுத்தியிருக்கிறார். வறுமைக்கோட்டில் உள்ளவர்களுக்கு என முறையாகக் கணக்கிட்டு, கணிசமாக நிதி வழங்குதலில் தவறேதும் இல்லை.
எஸ்.ஜி.இசட்கான், திருப்பூர்.

கவர்ச்சித் திட்டம்
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.72,000 அளிப்பதாக ராகுல் காந்தி அளித்துள்ள வாக்குறுதி, தேர்தல் நேரத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் கவர்ச்சித் திட்டமே. நடைமுறையில் சாத்தியமா, இல்லையா என்பது ஒருபுறம். பொதுவாக எந்தக் கட்சியும் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் உழைக்கும் மக்களின் இடர்களைக் களையவும், அவர்களின் உழைப்பை ஊக்குவிக்கவும், விலைவாசியைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்தினால் போதுமானது. அவர்கள் வறுமையிலிருந்து தாமாகவே விடுபட்டு விடுவார்கள். அதை விடுத்து  இதுபோன்ற வாக்குறுதிகள் அளிப்பதால் பயன் இல்லை.
வே.வரதராஜன், மகாஜனம்பாக்கம்.

சிறப்பான திட்டம்
ராகுல் காந்தி அளித்துள்ள வாக்குறுதி சிறப்பான திட்டமாகும். செயல்படுத்தப்படும்போது, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கைத் தரம்  நிச்சயம் ஐந்து ஆண்டுகளில் உயரும்.  திட்டத்தைச் செயல்படுத்துவதன் சாத்தியம் குறித்து ஊடகத் துறையினர் எழுப்பிய வினாவிற்கும் சரியான விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு செயல்படுத்திய மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அறிப்புத் திட்டம் போன்று இதுவும் மிகச் சிறப்பான திட்டமாகும்.
அ.இருளாண்டி, மதுரை.

நல்லது அல்ல!
எப்படியாவது ஆட்சி என்பதுதான் இன்றைய அரசியல்வாதிகளின் லட்சியம். அந்த வெளிப்பாட்டின் ஒருபகுதிதான் இந்த அறிவிப்பு. இந்தத் திட்டம், உண்மையாக உழைத்து முன்னேற நினைப்பவர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல். இப்போது நடைமுறையில் இருக்கும் ஏழைகளுக்கான இலவசத் திட்டங்களையும், மானியத் திட்டங்களையும், மனசாட்சியோடும் ஊழல் இல்லாமலும் நிறைவேற்றினாலே போதும். ஏழைகள் பயன் பெறுவார்கள். அதை விடுத்து ராகுலின் இந்தத் திட்டம், பலரையும் சோம்பேறிகளாக மாற்றவும், அரசியல்வாதிகள் தங்கள் ஊழல் கறை படிந்த சுக வாழ்க்கையைத் தொடரவுமே உதவும். இது நாட்டுக்கு நல்லதல்ல.
சொ.முத்துசாமி, பாளையங்கோட்டை.

பலன் கிடைக்குமா?
ஆண்டுக்கு ரூ.72000 வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர் எனச் சான்று பெற லஞ்சம் தலைவிரித்தாடி உண்மையானவருக்குக் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அதை விடுத்து 50 வயது கடந்த முதிர் கண்ணியருக்கும், பெண் பிள்ளைகளைப் பெற்றவருக்கும், கணவனைப் பிரிந்தவருக்கும், மனைவியைப் பிரிந்தவருக்கும், பிள்ளைகளே இல்லாமல் பராமரிக்க ஆள் இல்லாதவருக்கும் உடல் ஊனமுற்றோருக்கும், 50 வயது கடந்தும் வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறாதோருக்கும் என ஓரளவேனும் வாழ்க்கையை நடத்த உதவித் தொகை அளிக்கலாம்.  இத்தகையோர் உணவு, உடை, குறைந்த அளவு மருத்துவம் செய்து கொள்ள உதவியாக இருக்கும்.
கோ.லோகநாதன், திருப்பத்தூர்.

நம்ப முடியாது
தற்போதை ஆளுங்கட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ள கருத்துகள் நம்பகத்தன்மை அற்றவை. ஏனெனில், தமிழகம்-கர்நாடகம் இடையே நீண்ட காலமாக நிலவிவரும் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி தெரிவிக்கவில்லை. எனவே, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு நிதி வழங்குவது என்பது சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு தனிநபர் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும்  செலுத்தப்படும்  என்று பிரதமர் மோடி தெரிவித்த தேர்தல் வாக்குறுதிபோல் ஆகிவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்க வேண்டும்.
ச.அ.அலெக்சாண்டர், வரதராஜன்பேட்டை.


தொடர்ந்து பலன் தருமா?
இதுபோன்ற திட்டங்கள் போடுவது பெரிதல்ல. அது முறையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இருக்கிறது அரசின் திறமை. ஏனெனில் எல்லாத் திட்டங்களும் கடைநிலை மக்கள் வரை 100  சதவீதம் சென்று சேர்வதில்லை. நம் நாட்டைப் பொருத்தவரை வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் சரியாக அடையாளம் காணப்பட்டார்களா என்று ஆராயப்பட வேண்டிய ஒன்று. மேலும், ஓர் ஏழைக் குடும்பத்தின் பொருளாதாரம், உயர்வதற்கு ரூ. 72, 000 மட்டுமே போதுமானது அல்ல. ஓர் ஆண்டு  தரலாம். ஒவ்வொரு ஆண்டும் அவ்வாறு தர முடியுமா என்பது கேள்விக்குறிதான். இதற்குப் பதில், வாழ்வாதாரம் உயர வேறு திட்டங்களை அறிவிக்கலாம்.
பெ.ஜெயசீல சீனிவாசன், சேலம்.

உதவும்
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.72,000 அளிக்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஏழைக் குடும்பத்தினர் அன்றாடம் படும் கஷ்டங்களை நேரடியாகப் பார்த்து இப்படியும் ஒரு உதவிசெய்தால் அவர்களின் வாழ்வுக்கு உதவிகரமாய் இருக்கும் என்பதை அறிந்து இந்த அறிவிப்பைச் செய்துள்ளது வரவேற்கத்தக்கது. 
கீதா முருகானந்தம், கும்பகோணம்.

தேர்தல் உத்தி
ராகுல் காந்தியின் வாக்குறுதி வெற்றி பெறுவதற்கான தேர்தல் உத்தி.வறுமைக் கோடு என்ற ஒன்றைப் புதிதாகப் போட்டதே இவரது மூத்த தலைவர்கள்தாம். காங்கிரஸ் நடத்திய 50 ஆண்டுக்கால ஆட்சி, மற்ற அரசியல் கட்சிகளின் ஆளுகை; இன்னும் வறுமைக்கோடு அழிக்கப்படவில்லை. இட ஒதுக்கீடுகள், சலுகைகள் நீண்டு கொண்டே போகின்றன. வீசுகிற காற்றில் தூற்றிவிட்டால் போச்சு என்று போகிற போக்கில் பொய் அறிவிப்புகளை வாரி இறைத்துள்ளார் ராகுல் காந்தி.
ச.கந்தசாமி, தூத்துக்குடி.

சாத்தியமில்லை
ராகுலின் அறிவிப்புக்கும் தேர்தல் நேர  இலவசங்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தப் பணத்தை அவர் எப்படி அளிப்பார்?  அரசு நிதியிலிருந்து இந்தத் தொகையை அளித்தால், மற்ற திட்டங்களுக்கு எப்படிப் பணம் ஒதுக்குவார்? இது நடைமுறையில் சாத்தியமில்லை.
கோ.ராஜேஷ்கோபால், அரவங்காடு.

நல்ல திட்டம்
இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கும் கீழே இருக்கும் 5 கோடிக்கும் மேலான குடும்பங்கள், சாலையோரங்களிலும்  காடுகளிலும், வடகிழக்கு, தென்மேற்கு, மத்திய பாரதத்தின் வறண்ட இடங்களிலும் குடிக்கத் தண்ணீரின்றி வாழ்வதைக் காண முடிகிறது. இவர்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பரிதாபமானது. அரைகுறை ஆடைகளோடு அரை வயிறு நிரம்பாத வாழ்வு. இவர்களில் பலர் மரணப் படுகுழியான கனிமச் சுரங்கங்களில் பணிக்குச் செல்பவர்கள். கல்வி இல்லாத, யாராலும் கவனிக்கப்படாத ஏழைகள். இவர்களின் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கில் மாதம் ரூ.6,000 செலுத்தப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி  அளித்திருப்பது சாத்தியமானதே.
மு.அ.ஆ.செல்வராசு, வல்லம்.

வாக்குக்குப் பணம். தீர்வுதான் என்ன?

இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
விவாத மேடை பகுதி, தினமணி, 
29, இரண்டாவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை - 600 058 

என்ற முகவரிக்கு அனுப்பவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com