பகுதி - 935

வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை..
பகுதி - 935

பதச் சேதம்

சொற் பொருள்

வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை மக்கள் தாய் கிழவி பதி நாடு

 

வாள்: ஒளிகொண்ட; மனைச்சி: மனைவி; குதலை: மழலை; பதி: (தனது) ஊர்; நாடு: (தனது) நாடு;

வைத்த தோட்டம் மனை அத்தம் ஈட்டு பொருள் மற்ற கூட்டம் அறிவு அயலாக

 

அத்தம்: செல்வம்; அயலாக: (என்னை விட்டு) நீங்க;

முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை முட்டர் பூட்டி எனை அழையா முன்

 

மோட்டெருமை: பெரிய எருமை; முட்டர்: மூடர்—யம தூதர்கள்;

முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுருதி(க்குள்) குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய்

 

சுருதி: வேதத்தினுள்ளும்; குராக்குள்: குரா மலருக்குள்;

பட்ட(ம்) நால் பெரும் மருப்பினால் கர இபத்தின் வாள் பிடியின் மணவாளா

 

பட்டம்: நெற்றிப் பட்டம்; நால்பெரும் மருப்பினால்: நான்கு பெரிய தந்தங்களால் (ஐராவதத்துக்கு நான்கு தந்தங்கள்); கர: துதிக்கை; இபத்தின்: யானையின்; வாள் பிடியின்: ஒளிபொருந்திய பெண்யானை(யாகிய தேவானை)யின்;

பச்சை வேய் பணவை கொச்சை வேட்டுவர் பதிச்சி தோள் புணர் தணியில் வேளே

 

வேய்: மூங்கில்; பணவை: பரண்; கொச்சை: குழறலான பேச்சு—குதலை; வேட்டுவர் பதிச்சி: வேடர்களின் ஊரிலிருந்தவள்—வள்ளி;

எட்டு(ம்) நால் கர ஒருத்தல் மா திகிரி எட்டுமா குலைய எறி வேலா

 

 நால்கர: தொங்குகின்ற கரம், துதிக்கை; ஒருத்தல்: யானை; மா திகிரி: பெரிய மலைகள்;

எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொண்டு எத்தினார்க்கு எளிய பெருமாளே.

 

எத்திடார்க்கு: ஏத்திடாருக்கு—போற்றாதவர்களுக்கு; முத்த: பாசங்களிலிருந்து நீங்கியவனே; எத்தினார்க்கு: போற்றியவர்களுக்கு;

வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை மக்கள் தாய்க் கிழவி பதி நாடு... வட்டமாகவும் ஒளிகொண்டதாகவும் உள்ள மார்பகத்தைக் கொண்ட மனைவியும்; அவளிடத்தில் பெற்ற மழலைச்சொல் பேசுகின்ற மக்களும்; எனது தாயும்; எனது ஊரும்; எனது நாடும்;

வைத்த தோட்டம் மனை அத்தம் ஈட்டு பொருள் மற்ற கூட்டம் அறிவு அயலாக... என்னுடைய தோட்டமும் வீடும் செல்வமும் சம்பாதித்த பொருளும் மற்றும் உறவுக் கூட்டமும் என்னுடைய அறிவும் (என எல்லாமும்) என்னைவிட்டு நீங்க;

முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை முட்டர் பூட்டி எனை அழையா முன்... நன்றாக ஓட்டப்பட்டு மிகவும் நெருங்கி வருகின்ற பெரிய எருமையின் மீதமர்ந்து வருகின்ற மூடர்களான யமதூதர்கள் என்னை (பாசக்கயிற்றால்) கட்டி இழுத்துச்செல்வதன் முன்னால்,

முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுருதி(க்குள்) குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய்... அடியேன் முக்தியாகிய வீட்டை அடைவதற்காகவும்; என்னை முத்தனாக்குவதற்காகவும்; வேதத்தினுள்ளும் குரவ மலர்களுக்குள்ளும் ஒளிர்கின்ற உன்னுடைய திருக்கழல்கள் இரண்டையும் தந்தருள வேண்டும்.

பட்ட(ம்) நால் பெரும் மருப்பினால் கர இபத்தின் வாள் பிடியின் மணவாளா... நெற்றிப் பட்டத்தையும்; நான்கு பெரிய தந்தங்களையும்; தொங்குகின்ற துதிக்கையையும் உடைய (ஐராவதம் என்னும்) யானை வளர்த்தவளும்; ஒளிபொருந்திய பெண் யானையைப் போன்ற (நடையை உடைவளுமான) தேவானையில் மணாளனே!

பச்சை வேய்ப் பணவை கொச்சை வேட்டுவர் பதிச்சி தோள் புணர் தணியில் வேளே... பச்சை மூங்கிலால் அமைக்கப்பட்ட பரண்மீது நின்று (தினைப்புனத்தைக் காத்தவளும்) குழறிப் பேசும் மழலைச் சொல்லை உடையவளும் வேடர் குலத்தவளுமான வள்ளியின் தோளை அணைத்தவனே!  திருத்தணிகையின் தலைவனே!

எட்டு(ம்) நால் கர ஒருத்தல் மாத் திகிரி எட்டும் மாக் குலைய எறி வேலா... தொங்குகின்ற எட்டுத் துதிக்கைகளை உடைய அஷ்டதிக் கஜங்களும்; குலபர்வதங்கள் எட்டும் நடுங்கும்படியாக வேலை எறிந்தவனே!

எத்திடார்க்கு அரிய முத்த பாத் தமிழ் கொண்டு எத்தினார்க்கு எளிய பெருமாளே.... உன்னைப் போற்றாதவர்களுக்கு அரியவனே! முத்தனே!  தமிழ்ப் பாக்களால் உன்னைப் போற்றுபவர்களுக்கு எளிய பெருமாளே!

சுருக்க உரை

நெற்றிப் பட்டத்தையும் நான்கு பெரிய தந்தங்களையும் தொங்குகின்ற துதிக்கையையும் உடைய ஐராவதம் வளர்த்தவளும்; பெண்யானையைப் போன்ற மதர்த்த நடையைக் கொண்டவளுமான தேவானையின் மணாளனே!  பச்சை மூங்கில்களால் அமைக்கப்பட்ட பரணின் மீது நின்றுகொண்டு தினைப்புனத்தைக் காத்தவளும் வேடர் குலத்தவளும்; மழலைப் பேச்சைக் கொண்டவளுமான வள்ளியின் தோளை அணைத்தவனே! குலகிரியான எட்டு மலைகளும்; தொங்குகின்ற துதிக்கையை உடைய எண்திசை யானைகளும் நடுங்கும்படியாக வேலை எறிந்தவனே!  போற்றாதவர்களுக்கு அரியவனே! முக்தனே! தமிழ்ப் பாக்களால் போற்றுபவர்களுக்கு எளிய பெருமாளே!

வட்டமான மார்பகத்தை உடைய மனைவி; அவளிடத்திலே பெற்ற மதலை; வயதான தாய்; எனது ஊர்; எனது நாடு; என்னுடைய தோட்டம்; என்னுடைய வீடு; செல்வம்; நான் சேர்த்த பொருள்; என்னுடைய உறவினர்கள்; என்னுடைய அறிவு என்று எல்லாமும் என்னைவிட்டு நீங்கிப் போகும்படியாக,

நன்றாகச் செலுத்தப்பட்ட எருமைக் கிடாக்களின் மீதேறி மூடர்களான யமதூதர்கள் பாசக் கயிற்றை வீசி என்னை இழுத்துச் செல்வதன் முன்பாக அடியேன் முக்தியாகிய வீட்டை அடையும்படியாகவும்;  முக்தனாக ஆகும்படியாகவும், வேதங்களினுள்ளும் குரா மலர்களுக்குள்ளும் ஒளிர்கின்ற உன்னுடைய இரண்டு திருப்பாதங்களையும் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com