திங்கள்கிழமை 22 ஜூலை 2019

கணிணி கண்காணிப்பு தனிமனிதனை பாதிக்குமா?

By வழக்கறிஞர் சி.பி. சரவணன்| DIN | Published: 31st December 2018 03:47 PM

 


இந்தியாவில் அரசின் அதிகாரப்பூர்வ வேலைக்கு உதவ இரண்டு சட்டங்கள் உள்ளன. அவை, தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க உதவும் இந்திய டெலிகிராப் சட்டத்தின் விதிகள் மற்றும் இந்திய தொழில்நுட்பச் சட்டம் 2000. இச்சட்டங்கள் 2008, 2009-ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டன.


இந்திய தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவு 69 இன் கீழ் கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் ஒருவர் அனுப்பும் தகவலை வழிமறிப்பது, கண்காணிப்பது, முன் அறிவிப்பின்றி வெப்சைட்டுகளை முடக்குவது போன்ற அதிகாரங்கள் கொடுக்கப்பட்டது மற்றும் இந்திய தொழில்நுட்ப (தகவல் செயல்முறை, வழிமறிப்பது, பாதுகாத்தல், கண்காணிப்பு மற்றும் மறுகோடிடல்) விதிகள் 2009 [ IT( Procedure and Safeguard for interception , Monitoring Decryption of Information) Rules, 2009] இன் விதி.4(1) இன் படி அரசின் தகுதியான அதிகாரி, அதாவது மத்திய மற்றும் மாநில உள்துறைச் செயலர்கள் எந்த கணிணி சம்மந்தப்பட்ட தகவல்களை வழிமறிக்கவும், கண்காணிக்கவும், தகவலை மறுகோடிடவும், உருவாக்கவும், அனுப்பவும், பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் அளிக்கிறது.


நாட்டில் உள்ள எந்தவொரு கம்ப்யூட்டர் தரவுகளையும் (Data) குறுக்கிடவும், கண்காணிக்கவும், கண்டறியவும், வேவு பார்க்கவும் 10 மத்திய அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு சமீபத்தில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இது பற்றிய 'கெசட்' அறிவிப்பு கடந்த 21, டிசம்பர்,2018 வெளியிடப்பட்டுள்ளது. இந்த 'கெசட்' அறிவிப்பின் படி,


1. உளவு அமைப்பு (IB.)

2. போதைப்பொருள் தடுப்பு அமைப்பு (Narcotics Control Bureau)

3. அமலாக்க இயக்குனரகம் (Directorate of Enforcement)

4. மத்திய நேரடி வரிகள் வாரியம் (The Central Board of Direct Taxes)

5. வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (Directorate of Revenue Intelligence)

6. சி.பி.ஐ. (Central Bureau of Investigation)

7. தேசிய புலனாய்வு அமைப்பு (National Investigation Agency)

8. 'ரா' உளவுப்பிரிவு (Research and Analysis Wing)

9. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், அசாமில் செயல்படுகிற சமிக்ஞை புலனாய்வு அமைப்பு

10. டெல்லி போலீஸ் கமிஷனர்


ஆகிய 10 அமைப்புகளும் எந்த கணிணியையும் கண்காணிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.


ஒவ்வொரு வழக்கிலும், இந்த அமைப்புகள், உள்துறை செயலரின் அனுமதி பெற வேண்டும்.

மேலும், இந்திய தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவு 22 இன் கீழ் இருமாதங்களுக்கு ஒரு முறை அமைச்சரவை செயலரின் (Cabinet Secretary) கூட்டுக் குழுமுன் அனைத்து வழக்குகளையும் கொடுக்க வேண்டும்.


உரிமை மீறல்கள்…


இந்த அறிவிப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டச் சரத்து 19-இல் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு எதிரானது.


மனித உரிமைகளுக்கும் எதிராக உள்ளது.


இதேபோல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, மக்களும் அரசின் அனைத்து கணிணிகளையுமே கண்காணிக்கலாமே.


தேசப் பாதுகாப்பு என்ற போர்வையில், தேர்தலை மனதில் வைத்துத் தான் இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது. உண்மை என்னவென்றால் இந்த விளையாட்டை தொடங்கியது காங்கிரஸ். 2009, லோக்சபா தேர்தலில் எதிர்கட்சிகளை வேவு பார்க்கவும், தங்களுக்கெதிரான கருத்துகள் பரவுவதைத் தடுக்கவும் இந்த சட்டத்தை காங்கிரஸ் பயன்படுத்தியது. ஆனால்,சந்தேகிக்கும் நபரைக் கண்காணிக்கலாம் என்று உத்தரவு கொடுத்தாலும், கண்காணிக்கும் அதிகாரத்தை எந்த ஒரு அமைப்புக்கும் காங்கிரஸ் வழங்கவில்லை. காங்கிரஸ் தயங்கித் தயங்கிச் செய்யும் காரியங்களை, இப்போது பாஜக செய்து முடித்துள்ளது.


தனிமனிதனை பாதிக்குமா?


இந்த அறிவிக்கை தனி மனிதனை பெரிதாக பாதிக்காது, ஏற்கனவே கண்காணிப்பு வளையத்தில் தான் தனி மனிதர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஃபேஸ்புக் , ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற வெளிநாட்டு சமூக வலைதளங்களின் சர்வர்கள் வெளிநாடுகளில் இருப்பதால், தனிமனித குறித்த தகவலை இடைமறிக்கவோ, பெறவோ எளிதில் முடியும். இப்போது சிக்கலில் இருப்பது, அரசியல் கட்சிகள் தான்.


கம்ப்யூட்டர்களை உளவு பார்க்க 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு இப்போது அதிகாரம் வழங்கி பிறப்பித்து உள்ள உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றன. எதிர்கட்சி எதிர்ப்பில் காங்கிரஸ் செய்யலாமா, சட்டத்திருத்தம் செய்ததே அவர்கள் தானே. இந்நிலையில், கணிணிகளை கண்காணிக்க 10 அமைப்புகளுக்கு அனுமதி அளித்த, மத்திய அரசின் புதிய உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனோகர் லால் சர்மா என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்து உள்ளார்.


இன்றைய நிலையில் கண்காணிக்கப்பட வேண்டியது அரசே ஒழிய, மக்கள் அல்ல என்பதை மக்கள் அறிந்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : சட்டமணி தனிமனித உரிமை கணிணி கண்காணிப்பு sattamani

More from the section

தேர்தல் ஸ்பெஷல்-5 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைப்புத் தொகைகள் எவ்வளவு?
தேர்தல் ஸ்பெஷல்- 4 வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள், அவசியம் கவனிக்க வேண்டிய விதிகள்....
தேர்தல் ஸ்பெஷல் - 3 புதிய அரசியல் கட்சி தொடங்குவது எப்படி?
தேர்தல் ஸ்பெஷல் -2 பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?
தேர்தல் ஸ்பெஷல்-1 பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் என்னென்ன?