ஸ்பெஷல்

நவராத்திரி கொலு பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

தினமணி

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் அன்னை பராசக்தியை வீடுகளிலும், ஆலயங்களிலும் பூஜை செய்து வழிபடும் சாரதா நவராத்திரி விழா இவ்வாண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஆரம்பமாகின்றது.

தக்ஷிணாயன புண்ய காலத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன், புரட்டாதி மாதத்தில் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம் தேவர்களுக்கு இரவு காலமாகும். கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் சாரதா நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர்.

சாக்தமும் நவராத்திரிகளும்

இந்து மதத்தின் சிறப்பு மிக்க சாக்த வழிபாட்டில் அன்னை தெய்வங்களை போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் சிறப்பு மிக்கதாகும். பருவ காலங்களுக்கு ஏற்ப ஒன்பது நாட்களை நவராத்திரிகளாக கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு. ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம்.

வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வஸந்த நவராத்திரி).(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

தை மாதத்தில் கொண்டாடப்படுவது ச்யாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

சாரதா நவராத்திரி

சாரதா நவராத்திரி பூஜை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கடைப்பிடிக்கப்படும் விரதம் சாரதா நவராத்திரி விரதமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில்  அனுஷ்டிக்கப்படும் சாரதா நவராத்திரியை மட்டுமே நாம் அனைவரும் அறிந்திருப்பதோடு சிறப்பாக கொண்டாடுகிறோம்.

நவராத்திரி பெண்கள் விரும்பி செய்யும் ஓர் தெய்வீக பெருவிழா. நவராத்திரி நாட்களில் வீட்டை அலங்கரித்து, கொலு அமைத்து வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களையும், கன்னிப் பெண்களையும் அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து, நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களை மரியாதை செய்து அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி இதனால் அந்த இல்லத்தில் முப்பெரும் தேவிகளின் ஆசியைப் பரிபூரணமாக பெறும் நன்னாள் இது. நவராத்திரி முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலஷ்மியை வழிபடவேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.

கொலுபடிகளின் தத்துவம்

காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது போல், எல்லா விஷயத்திற்கும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்திருப்பார்கள். கொலு படிகளுக்கும் அர்த்தத்தோடு காரணம் இருக்கிறது. புழுவாய் பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி அன்று ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம்.

முதல் படி, அதாவது கீழ் படியில் – ஓரறிவு உயிர் இனமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் வைக்க வேண்டும்.

இரண்டாம் படியில் – இரண்டறிவான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.

மூன்றாம் படியில் - மூவறிவான கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.

நான்காவது படியில் - நான்கு அறிவான நண்டு, வண்டு பொம்மைகள் வைக்க வேண்டும்.

ஐந்தாம் படியில் - ஐந்தறிவு கொண்டநான்குகால் விலங்குகள், பறவைகள், போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.

ஆறம் படியில் - ஆறறிவான மனிதர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

ஏழாம் படியில் – சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

எட்டாம் படியில் - தேவர்களின் உருவங்கள், நவக்கிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள் வைக்கலாம்.

ஒன்பதாம் படியில் – முதலில் விநாயகரை வைத்த பிறகு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும். இதில், சரஸ்வதி-லஷ்மிக்கும் நடுவில் அன்னை சக்திதேவி இருக்க வேண்டும்.

பொதுவாக கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்கும் போது கடைசிப்படியான மேல்படியில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும். முதலில் மேலே உள்ள கொலுப்படியில் வைக்க வேண்டியது விநாயகர். விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை முதலில் கொலுப்படியில் வைத்த பிறகுதான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும் என்று பராசக்தி தேவி சொல்லி இருப்பதாக “தேவி பாகவதம்” சொல்கிறது.  ஒன்பது படிகள் வைக்க முடியாதவர்கள், முப்பெரும் தேவியை குறிப்பதாகும் 3 படிகளும் வைக்கலாம். அல்லது சக்தியின் சக்கரமான 5 படிகளும் வைக்கலாம். சப்தமாதர்களை குறிக்கும் 7 படிகளும் அமைக்கலாம். நவகிரகங்களைக் குறிக்கும் 9 படியும் வைக்கலாம். ஆக, கொலு படிகள் 3,5,7,9 போன்ற எண் வரும்படி அமைக்கலாம்.

ஜோதிடமும் நவராத்திரியும்

ஜோதிடத்தில் தாய்மை மற்றும் பெண்களைக் குறிக்கும் கிரகங்கள் சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகும். நம் வாழ்வில் பெண்மையின் அவசியத்தை உணர்த்தும் பாவங்கள் நான்கு. அவை குடும்ப ஸ்தானம் எனப்படும் இரண்டாம் பாவம், மாத்ரு ஸ்தானம் மற்றும் சுகஸ்தானம் எனப்படும் நான்காம் பாவம், களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் பாவம் மற்றும் அயன சயன போக மோக்ஷ ஸ்தானம் எனப்படும் பன்னிரெண்டாம் பாவம் ஆகும். ஒருவருக்கு குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைய இரண்டாம் வீடு மற்றும் சுக்கிரனின் நிலையைக் கொண்டு பார்க்க முடியும். மேலும் குடும்பத்திற்குத் தேவையான செல்வ செழிப்பிற்கும் காரகர் சுக்கிர பகவான் ஆகும். இதனை உணர்த்தும் வகையில் கால புருஷனுக்கு இரண்டாம் பாவமான ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி வீடாக அமைந்து சந்திரன் உச்சமாகிறார்.

நான்காம் பாவமான கடகம் சந்திரனின் ஆட்சி வீடாகும். கால புருஷனுக்கு களத்திர ஸ்தானமான துலாமும் சுக்கிரனின் ஆட்சி வீடாகும். மேலும் தூக்கம் மற்றும் படுக்கை சுகத்தை உணர்த்தும் பன்னிரெண்டாம் பாவமான மீனத்தில் சுக்கிரன் உச்சமாவது குறிப்பிடத்தக்கது.  ஒருவர் எத்தனை கஷ்டப்பட்டாலும் அதன் பலனை சுகமாக அனுபவிக்க சுகஸ்தானம் சிறப்பாக அமைய வேண்டும். எனவே சந்திரனும் நான்காம் பாவ அதிபதியும் நல்ல நிலையில் ஆட்சி உச்சம் பெற்று நிற்க வேண்டும். ஒருவருக்கு நல்ல தூக்கம் வேண்டுமென்றால் அவருக்கு நல்ல மனநிலை வேண்டும். அதிக மகிழ்ச்சி, கோபம், அதிக பயம் இதுபோன்ற உணர்வுகள் தூக்கத்தைக் கெடுத்துவிடுகிறது. ஆக ஒருவருக்கு நல்ல மனோநிலை அமைய சந்திரனின் அருளாசி முக்கியமானதாகும்.

இரவின் காரகன் சந்திரன் ஆகும். அந்த சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்பதை பொறுத்தே ஒருவரின் இரவு பொழுதின் தன்மையையும் தூக்கத்தையும் தீர்மானிக்கமுடியும். இரவில்தான் தூங்கவேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டுவிட்டால் அவருக்கு தூக்கம் என்பது ஏக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.பெண்களின் சிறப்பை விளக்கும் வண்ணம் "கணவன் - மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என கூறியிருக்கிறார்கள். ஒருவருக்கு மனைவி சகல சௌபாக்கியவதியாக அமைய ஜாதகத்தில் ஏழாம்பாவம் சுக்கிரனும் நல்ல நிலையில் அமைந்திருக்க வேண்டும்.

சுக்கிரன் என்றாலே சுகம்தான் நினைவிற்கு வரும். நல்ல சுவையான உணவு (சுக்கிரன்), குளுமையான சூழ்நிலை (சுக்கிரன்) இனிமையான இசை (சுக்கிரன்) வசதியான படுக்கைகள் மற்றும் நறுமணம் மிக்க மலர்கள் மற்றும் சுவை நிறைந்த பழங்கள் (சுக்கிரன்) கூடவே அழகான மற்றும் அன்பான மனைவி (சுக்கிரன்) இவையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போதே இனிமையும் தூக்கம் வருவது போன்ற உணர்வும் ஏற்படுகிறதல்லவா. இவையெல்லாம் சுகமானதாகவும் சுவை மிக்கதாகவும் அமைய ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக அமைய வேண்டும்.

யாரெல்லாம் நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கலாம்?

பெண்மையின் சிறப்பை விளக்கும் சந்திரன் மற்றும் சுக்கிரனின் வீடுகளான ரிஷபம், கடகம், துலாம் ஆகிய ராசிகளை லக்கினமாகவோ அல்லது ராசியாகவோ கொண்டவர்கள், சந்திரன் அல்லது சுக்கிரன் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனாக அமையப்பெற்றவர்கள், சுக்கிரன் உச்சம் அடைந்தவர்கள், மாளவியா யோகம் பெற்றவர்கள் இயற்கையாகவே நவராத்திரி பூஜையில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஏழாம் வீடுதான் களத்திர ஸ்தானம் ஆகும். இந்த இடத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை பெற்று இருப்பது, ஏழாம் வீட்டில் சுக்கிரன் நீச்சம் பெற்று இருப்பது, 7-க்கு உடைய கிரகம் 6, 8, 12 போன்ற இடங்களில் தனித்தோ அல்லது பாவ கிரகங்களுடன் சேர்ந்தோ இருப்பது, ராகு அல்லது கேது 7-ல் இருப்பது களத்திர தோஷத்தைக் குறிப்பிடும்.

ஏழாவது வீட்டுக்குரிய கிரகமோ அல்லது சுக்கிரனோ, பாவ கிரகங்களின் பார்வை பெற்று இருந்தாலோ அல்லது 6, 8-க்குரிய கிரகத்துடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது 6, 8, 12-ல் மறைந்து இருந்தாலோ களத்திர தோஷம் என்று அர்த்தம். பொதுவாக, லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் உள்ள கிரகங்களைக் கொண்டுதான், ஒருவருக்கு களத்திர தோஷம் இருக்கிறதா, இல்லையா என்று முடிவு செய்யப்படுகிறது. அத்தகைய ஜாதக அமைப்பைப் பெற்றவர்கள் நவராத்திரி பூஜை செய்வது களத்திர தோஷம் போக்கும்.

பெண் சாபத்தை குறிக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். பெண் சாபம் பெற்றவர்களுக்கு களத்திர ஸ்தானம் பழுதடைந்தோ அல்லது களத்திர ஸ்தானாதிபதி பலமிழந்த நிலை மற்றும் சுக்கிரன் கெட்டுப் போன நிலையில் ஜாதக அமைப்பு இருக்கும். இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும். கால புருஷனுக்கு ஏழாம் வீடான துலா ராசிக்கு அதிபதியான சுக்கிரன் களத்திரகாரகன் என்றழைக்கப்படுகிறார். அவர் 6/8/12 அதிபதிகளாக பெற்றவர்கள் சுக்கிரனுக்கு பரிகாரம் செய்வது, தாய், சகோதரி மற்றும் பெண்களுக்குச் சீர் செய்தல், நவராத்திரி பூஜை செய்வது போன்றவை சிறந்த பரிகாரங்களாகும்.

பெண்களுக்கு கன்னித்தன்மையை சிறப்பிக்கும் விதமாகப் பூப்படைவது இறைவன் கொடுத்த வரமாகும். பூப்படைவதற்கு சந்திர செவ்வாய் சேர்க்கை காரக கிரகமாகின்றன. எனவே ஒரு பெண்ணிற்கு கன்னித்தன்மை அடையாமல் அதாவது பூப்படையாமல் இருப்பவர்கள் கன்யா மாதம் எனப்படும் புரட்டாசியில் கடைப்பிடிக்கப்படும் நவராத்திரியில் பாலா எனப்படும் பாலா திரிபுர சுந்தரியை வணங்க விரைவில் பூப்படைந்து கன்னித்தன்மை ஏற்படும்.

ஒரு கன்னிப்பெண் தாய்மையடைய சுக்கிரனின் அருள் பெற்றிருக்க வேண்டும். திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தைப் பேறில்லாமல் இருப்பவர்கள் நவராத்திரி நோன்பிருந்து வழிபட குழந்தை பாக்கியம் ஏற்படும்.

கணவன் மனைவியருக்குள் ஒற்றுமையின்றி சதா சர்வ காலமும் சண்டை போட்டுக்கொண்டு படுக்கை முள் படுக்கையாகவும் இரவு கொடுமையானதாகவும் உணருபவர்கள் நவராத்திரியில் அன்னை காமாக்ஷியை வழிபட கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும்.

பல வித பிரச்சனைகளால் நிம்மதியிழந்து இரவில் தூக்கமின்றி தவிப்பவர்கள் நவராத்திரியில் விரதமிருந்து ஜேஷ்டா தேவியை வழிபடத் தூக்கம் நல்லமுறையில் அமையும்.

குழந்தைகளுக்கு ஜாதகத்தில் புதன் நீசமானவர்கள், நான்கு, ஐந்தாம் பாவம் கெட்டு கல்வியில் தடை ஏற்பட பெற்றவர்கள் சாரதா நவராத்திரியில் சரஸ்வதியை வழிபட கல்வித்தடை நீங்கிப் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

திறந்த வாகனத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!

நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு -இருவர் கைது

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

திருச்சி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை

SCROLL FOR NEXT