செய்திகள்

முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள்: மஹாளயபட்சம் ஆரம்பம்!

30th Sep 2023 12:28 PM

ADVERTISEMENT

 

2023-ம் ஆண்டுக்கான மஹாளயபட்சம் இன்று முதல் தொடங்கியுள்ளது. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மஹாளயபட்சம் என்கிறோம். பித்ருக்களின் ஆராதனைக்கு உகந்த காலம் என்றும் சொல்லலாம். 

ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள் மஹாளயபட்சம் ஆரம்பமாகிறது. பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய 15 நாள்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மஹாளய அமாவாசை எனப்படும்.

தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது. மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மஹாளயபக்ஷ காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

மறைந்த நம் முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து இந்தப் பதினைந்து நாள்களும் நம்மோடு தங்கும் காலமே மஹாளய பட்சமாகும். பித்ரு வழிபாடு, நம் இல்லற வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும். பித்ருக்களின் ஆசி முழுமையாகக் கிடைக்கப்பெறும்.

மஹாளயபட்ச காலத்தில் நம் முன்னோர்களைத் திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். மஹாளயபட்சத்தில் வரும் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுக்கலாம். அவ்வாறு, கொடுக்க இயலாதவர்கள், அமாவாசை திதியிலாவது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது நல்லது.

படிக்க: நியூயார்க்கில் சைக்கிள் ஓட்டிய த்ரிஷா: வைரல் விடியோ!

நமது மூதாதையர்களின் ஆசீர்வாதம் நம்மைக் காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தாலே போதும். அவன் வாழ்க்கையில் எப்பாடுபட்டேனும் முன்னுக்கு வந்துவிடுவான். ஆக, இந்தப் பதினைந்து நாள்களும் வீட்டை சுத்த பத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடையும்.

இந்த காலத்தில் திருமணம் போன்ற எந்த சுப காரியத்தையும் செய்வதில்லை. ஏனென்றால் இந்த காலப்பகுதி முழுக்க முழுக்க முன்னோர்களுக்கு உரியது. சிரார்த்தம், திதி கொடுப்பது, தான தர்மங்கள் செய்வது உள்ளிட்ட காரியங்களுக்கு சிறந்தது இந்த மகாளயபட்சம். 

15 நாள்களில் புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத் தலங்களுக்குச் சென்றுவருவது சிறப்பு. முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவிற்கு புல், பழம் கொடுக்கலாம். அதுவும் முடியாதவர்கள் முன்னோர்களின் பெயர்களை உச்சரித்து "காசி காசி" என்று சொல்லி, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டுக்கூடத் திதி பூஜையைச் செய்யலாம். 

இந்தாண்டுக்கான மஹாளய அமாவாசை அக்டோபர் 14-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT