உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் விஸ்வரூப யாத்திரை இன்று நிறைவுபெற்றது.
விஸ்வரூப யாத்திரை என்பது, மடாதிபதிகள், சன்னியாசிகள், கிராம அல்லது நகர எல்லைகளைத் தாண்டாமல், தாங்கள் ஒரே இடத்தில் இருந்துகொண்டு சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடிப்பதைக் குறிப்பிடுகிறது. இதுபற்றி பகவத் கீதையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 3 ஆம் தேதி ஆஷாட பூர்ணிமா அன்று விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் வியாச பூஜை நடத்தப்பட்டது. வியாச பூஜை அன்று கங்கை - யமுனை - சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமம் அருகே உள்ள அனுமன் கோயிலுக்கு வருகை தந்தார்.
ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜய யாத்திரையை ஜூலை மாதம் தொடங்கி, கர்நாடகம், தெலுங்கானா, மகாராஷ்டிரம் மற்றும் மத்தியப் பிரதேசம் வழியாகப் பயணித்து, உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜை அடைந்தார்.
ஜூலை 5 ஆம் தேதி தொடங்கி பிரயாக்ராஜில் தங்கி வியாச பூஜையை சுவாமிகள் நடத்தினார். இந்த பூஜைக்கான காலகட்டத்தில் வாரணாசியில் உள்ள சங்கர மண்டபத்தில் தங்கி சாதுர்மாஸ்ய பூஜையை மேற்கொண்டார்.
வாரணாசி சேத்சிங் கோட்டையில் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சஹஸ்ர சண்டி யாகத்தின் பூர்ணாஹுதியுடன் செப். 21-ல் தொடங்கி நடைபெற்ற விஸ்வ சாந்தி மகா யாகமும் நிறைவு பெற்றது. பின்னர், பூஜைகளில் பங்கேற்ற அனைத்து ரித்விக்குகளுக்கும், வேத பண்டிதர்களுக்கும் சங்கராச்சாரியார் சுவாமிகள் ஆசி வழங்கி, சம்பாவனம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ஹனுமன்காட்டில் யாத்திரையின் முக்கியத்துவம் பெற்ற சாதுர்மாஸ்ய விரத பூஜை, சுவாமிகளின் அருளாசியுடன் நிறைவுறுகிறது.
சாதுர்மாஸ்ய விரதம்
இந்துக்களின் முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருதப்படுவது சாதுர்மாஸ்ய விரதம். சன்னியாசிகள் மட்டுமின்றி ஒவ்வொருவரும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமாகும். மற்ற மாநிலங்களில் பரவலாக இந்த விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், தமிழகம், கேரளத்தில் விழிப்புணர்வு இல்லாததால் சன்னியாசிகளை தவிர பலர் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் இந்த சாதுர்மாஸ்ய விரதத்திற்கு மகத்துவம் அதிகம்.
சாதுர்மாஸ்ய விரத காலத்தில், அவர்கள் பூஜைகள், மந்திர ஜபங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவர். அவை, உலகம் முழுவதற்கும் பன்மடங்கு பலன் தரக் கூடியவை. குறிப்பிட்ட நான்கு மாதமும் சில உணவு கட்டுப்பாடுகளோடு, விரத முறையை அனுஷ்டிப்பர்.