செய்திகள்

தென் கைலாயமாக விளங்கும் வெள்ளியங்கிரி

தினமணி


2023ஆம் ஆண்டில், பிப்ரவரி 18ஆம் தேதி சனிக்கிழமை வருவது மஹாசிவராத்திரி. மஹா சிவராத்திரி மற்ற சிவராத்திரிகளில் விரதமிருந்து பெறும் எல்லாவகை நலனையும் ஒருசேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பர். அதுபோல சிவன் அமர்ந்த மலையெல்லாம் கைலாயம் என்பது பொது மொழி. அதன் அடிப்படையில் வெள்ளியங்கிரி மலையை தென் கைலாயம் என்றழைக்கிறோம். 

முன்பொரு காலத்தில் தென்னிந்தியாவில் ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு சிவ பெருமான் மீது தீராத பக்தி. ஆனால் அந்த பக்தி நாம் நினைப்பது போல் சிவபெருமான் பாதம் பணியும் பக்தி அல்ல. அவர் கரம் பற்றும் பக்தி. பக்தியின் தீவிரத்தில் அவள் யோக நிலையில் சிவபெருமானுக்காக காத்திருந்தாள். சிவபெருமானை அடைய விரும்பிய அப்பெண், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சிவபெருமான் வந்து தன்னை ஆட்கொள்ளா விட்டால் உயிர் துறப்பேன் என உறுதியேற்றாள்.

அப்பெண்ணின் பக்தியை அறிந்த சிவபெருமான், அவள் கரம் பற்ற வட திசையில் இருந்து தென் திசை நோக்கி வந்தார். “விடிவதற்குள் சிவபெருமான் வர வேண்டும். இல்லையென்றால் நான் உயிர் துறப்பேன்” என்று சூளுரைத்திருந்தாள். ஆனால் இருவரும் இணைவதை மற்ற கடவுளர்கள் ஏனோ விரும்பவில்லை. சிவபெருமான் அப்பெண்ணை மணப்பதை தடுக்க எண்ணிய அவர்கள் சதி செய்தனர்.

சிவபெருமான் வரும் வழியில் சூரியன் உதிப்பதை போன்று தவறான தோற்றத்தை ஏற்படுத்தினர். "சூரியன் உதித்து விட்டது என நம்பிய சிவபெருமான், இனி தம்மால் அப்பெண்ணை அடைய முடியாது" என்று விரக்தி அடைந்தார் சிவபெருமான்; அப்பெண்ணோ குறிப்பிட்ட நேரத்தில் சிவபெருமான் வராததால், யோக நிலையிலிருந்தபடியே அவர் உயிர் துறந்தாள். இப்போதும் அப்பெண்ணை நாம் கன்னியாகுமரியில் குமரிப் பெண் என்று வழிபட்டு வருகிறோம்.

இந்த ஏமாற்றத்தால், சிவபெருமான் தனக்குள் எழுந்த மனச்சோர்வுடன் வந்தமர்ந்த இடமே வெள்ளியங்கிரியாக விளங்கி வருகிறது. பனி போர்த்தப்பட்டு கைலாயத்தை பிரதியெடுத்தது போல் வெள்ளை நிறத்தில் மிளிரும் வெள்ளியங்கிரியில் ஈசன் அமர்ந்த அதிர்வுகளை இன்றும் மலை ஏறுவோர் உணர்கின்றனர் என்றே கூறப்படுகிறது.

மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களை குறிக்கும் வகையில் ஏழு அடுக்கு மலையாக அமைந்துள்ளது வெள்ளியங்கிரி. இம்மலையில் இருக்கும் நல்லதிர்வுகளை உள்வாங்கவும், தெய்வீகத்தில் திளைத்திருக்கவும் இன்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையேறி ஈசனை தரிசிக்கின்றனர். 

குறிப்பாக ஈஷாவின் சிவாங்கா யாத்திரிகள் 42 நாள்கள் விரதமிருந்து, கடைசி நாளில் வெள்ளியங்கிரி மலையேற்றத்துடன் நிறைவு செய்கின்றனர். மலையில் இருக்கும் ஈசனை உயிர் இனிக்க தரிசித்து திரும்புகின்றனர். 

'சிவ' என்ற சொல் 'மங்களம்' என்பதைக் குறிக்கும். சிவராத்திரி என்றாலே மோக்ஷம் தருவது என்றே பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவராத்திரிகளில், மாத சிவராத்திரி, யோகசிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, மஹாசிவராத்திரி என்று ஐவகை உண்டு. இதில் மகாசிவராத்திரி விரதமே மிகப்பெரும் வழிபாடாகக் கொண்டாடப்படுகிறது.

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா யோக மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் மஹாசிவராத்திரி விழா பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆதியோகியை அனைவரும் தரிசிக்கும் வண்ணம் ஆதியோகி சிலையின் மாதிரியுடன் ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. 

ஈஷா யோக மையத்திலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புறப்பட்ட 5 ரதங்களும் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 25000 கி.மீ தொலைவுக்கு வலம் வந்து மஹா சிவராத்திரிக்கு முந்தைய நாளில் ஈஷா யோக மையத்தை வந்தடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரத யாத்திரையில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், சிவாங்கா சாதகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர். 

யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். மற்ற விரதங்கள் அனைத்தும் கடைப்பிடித்தவருக்கு மட்டுமே நன்மை தரும். ஆனால் சிவராத்திரி விரதம், கடைப்பிடித்தவருக்கு மட்டுமின்றி அவரது தலைமுறைக்கே ஈடு இணையற்ற புண்ணியத்தைத் தரும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT