செய்திகள்

மஹாளய அமாவாசை: பித்ரு வழிபாடு செய்ய மறக்காதீர்கள்!

24th Sep 2022 05:19 PM

ADVERTISEMENT

 

மஹாளய அமாவாசை. தக்ஷிணாயன புண்ய காலத்தில் மஹாளய பக்ஷம் எனும் புண்ணியகாலம் கடந்த ஆவணி மாதம் (11/9/2022) முதல் பித்ரு பக்ஷம் எனப்படும் மஹாளய பக்ஷம் ஆரம்பமாகி நாளை மஹாளய அமாவாசையோடு முடிவடையப் போகிறது. இந்த பதினைந்து நாள்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்பது  நம்பிக்கை. மஹாளய அமாவாசையன்று பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு.

மஹாளயம் என்றால் கூட்டமாக வருதல். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மஹாளய பக்ஷம். "பக்ஷம்' என்றால் 15 நாள்கள்.  இது புரட்டாசி மாத பௌர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில்  துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மஹாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட  உயர்ந்தது இது. மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மஹாளய பக்ஷ காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து தர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காண வரும்  காலமே இந்த மஹாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது. இந்த பதினைந்து நாள்களும் முன்னோர்களின் நினைவாக சுபநிகழ்வுகளைத் தவிர்த்து அவர்களுக்குரிய சிரார்த்தம், தர்ப்பணம் ஆகியவற்றைச் செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும் என்பது நம்பிக்கை.

ADVERTISEMENT

மஹாளய அமாவாசை

சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்க்காரகன். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த இரண்டு கிரகங்கள் சேரும் நாளையே அமாவாசை என  ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அது என்ன மற்ற அமாவாசைகளை விட மஹாளய அமாவாசைக்கு சிறப்பு? எல்லா அமாவாசை நாட்களுமே பித்ரு தர்ப்பணங்கள் கட்டாயம்  செய்ய வேண்டிய நாட்கள்தான் என்றாலும் புரட்டாசிக்கென்று ஒரு சிறப்பு உள்ளது. புரட்டாசி மாதம் என்பது ஜோதிடத்தில் கன்னி ராசியை குறிக்குமிடம். கன்னி ராசி என்பது  பித்ரு காரகணான சூரியனுக்கு போஜன ஸ்தானம். கால புருஷனுக்கு வயிற்றைக் குறிக்கும் இடம்.

பிதுர்காரகனான சூரியனும், மாதுர்காரகனான சந்திரனும் விஷ்ணு லோகம் என்று கருதப்படும் கன்னி இராசியில் ஒன்றிணையும்போது வரும் அமாவாசையே மஹாளய  அமாவாசை. பிற மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் முன்னோரை வணங்க மறந்தவர்களும், சந்தர்ப்பம் சரியாக அமையாதவர்களும் கூட இந்தப் புரட்டாசியில்  வரும் மஹாளய அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்ய, பிதுர்தோஷம் முற்றிலுமாக நீங்கி புண்ணியம் அடைவர்.

மேலும் ஜோதிடத்தில் விம்ஸோத்தரி தசா வரிசையில் ஒரு ஜீவனின் முக்தியை குறிப்பது புதன் தசையாகும். புதன் ஆட்சி, உச்சம் மற்றும் மூலதிரிகோணம் ஆகிய சிறப்பை  பெறுவதும் கன்னியில் தான். சூரியனின் நக்ஷத்திரமான உத்திரமும் சந்திரனின் நக்ஷத்திரமான ஹஸ்தமும் இணையும் இடமும் கன்னி ராசிதான். எனவே கன்யா  மாசமான புரட்டாசியில் வரும் மஹாளயமும் சிறப்புதானே! இன்று அமாவாசை ஆரம்பிக்கும்போது கோசாரத்தில் சூரிய பகவான் கன்னி ராசியில் சந்திரனின் ஹஸ்த  நக்ஷத்திரத்திலும் சந்திரன் சூரியனின் உத்திர நக்ஷத்திரத்திலும் நின்று நக்ஷத்திர பரிவர்த்தனை பெற்ற நிலையில் ஏற்படும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

வீடு தேடி வரும் முன்னோர்கள்

நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும்  மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள்  வந்து நின்று கொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரைத் தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு  செய்யாவிட்டால் பித்ருக்கள் வருத்தப்படும்போது அது பித்ரு தோஷமாக சந்ததியரின் ஜாதகத்தில் அமைகிறது.

காருண்ய பித்ருக்கள்

"மறந்தவனுக்கு மாளயத்தில் கொடு" என்ற பேச்சுவழக்கினைக் கேட்டிருப்போம். இறந்துபோன நம் பெற்றோர்கள் மட்டுமல்லாது, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி,  மாமன், மாமி, சகோதரன், சகோதரி, ஆசிரியர், சிஷ்யன், நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், நாம் அறிந்தவர்களில்  இறந்துபோன எல்லோரையும் திரும்ப நினைவிற்குக் கொண்டுவந்து அவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது  அனைத்து ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே, அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளயபட்ச விரத நாட்களில் தான். இவர்கள்  'காருண்ய பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்''. 

முன்னோர்களின் ஆசி

ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும்  முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர். நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும்  இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.

ஜாதகத்தில் பித்ரு தோஷத்தை எப்படி அறிவது?

1. பிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள் இந்த கலிகாலத்தில் பிதுர்தோஷத்துடன் பிறக்க வைக்கின்றன. இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின்  விளைவுகளை அனுபவிப்பதற்காகவே குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.

2. பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.

3. சூரியன் மற்றும் சந்தினுக்கு கிரஹண தோஷத்தை தரும் ராகு மற்றும் கேது சூரியனோடும் சந்திரனோடும் இணைந்து நிற்பது மற்றும் சூரியனும் சந்திரனும் ராகு/கேது  சாரத்தில் நிற்பது போன்றவை பித்ரு தோஷத்தை உறுதி செய்கின்றது.

4. ஒரு ஜாதகத்தில் சனைஸ்வரரின் நிலையும் பித்ரு தோஷத்தை தெரிவிக்கும். சனைஸ்வர பகவான் பித்ரு ஸ்தானத்தில் நிற்பது, வக்ரம் பெற்று நிற்பது, குடும்பத்தில்  அனைவரின் ஜாதகங்களிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வக்ரம் நீசம் ஆகிய நிலைகளில் நிற்பது பித்ரு தோஷத்தை தெரிவிக்கும்.

5. ஒருவர் ஜெனன ஜாதகத்தில் மற்றும் பிரசன்ன ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானம் எனும் ஐந்தாமிடம் மற்றும் பித்ரு ஸ்தானம் எனப்படும் ஒன்பதாமிடம் மற்றும் அதன்  அதிபதிகளுடன் மாந்தி சேர்க்கை பெற்றிருந்தால் அவர்களின் குடும்பத்தில் துர்மரணம் அடைந்தவர்கள் பற்றியும் அவர்களால் ஏற்படும் பித்ரு தோஷம் பற்றியும் தெரிவிக்கும்.

பித்ரு தோஷ பரிகாரங்கள்

1. ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லாணி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது மற்றும் பிண்ட  சிரார்தம் செய்வது பித்ரு தோஷத்தை போக்கும் என்கிறது சாஸ்திரம்.

2. வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள புஷ்பவனேஸ்வரர் - சவுந்தரநாயகியம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலமாகும். பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14  தலங்களில் திருப்புவனமும் ஒன்று. அக்காலத்தில் புகழ்பெற்ற சுச்சோதி மன்னன் முன்னோர்களுக்குத் திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில்  வேண்டுதல் செய்துள்ளார். திருப்பூவணத்தில் அஸ்தியைக் கரைத்தால் பாவ விமோசனம் கிடைக்கும் என்கிறார்கள். காசியை காட்டிலும் வீசம் பங்கு அதிகம். (பதினாறு  பங்கு). இராமேஸ்வரத்தைக் காட்டிலும் ஆறு பங்கு அதிகம். மதுரையைக் காட்டிலும் முக்கால் பங்கு அதிகம்.

3. திலதர்ப்பணபுரி - திலம் என்றால் எள். புரி என்றால் ஸ்தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த ஸ்தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை,  காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி. பித்ரு ஸ்தலங்களில் ஒன்றாக இந்த திலதர்ப்பணபுரி  விளங்குகிறது. இராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன. இந்த திலதர்ப்பணபுரி  திருக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்திலிருந்து  எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 km தொலைவில் உள்ளது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT