செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசன நேரம் நீட்டிப்பு! 

23rd Nov 2022 03:25 PM

ADVERTISEMENT

 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிகழாண்டு மண்டலம்-மகரவிளக்கு பூஜையின்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் தரிசன நேரங்களை கோயில் நிர்வாகம் மாற்றியமைத்துள்ளது.

ஐயப்பன் கோயிலில் ஏற்கெனவே தரிசன நேரங்கள் அதிகாலை 3 மணி முதல் பகல் 1 மணி வரை என்றும் மாலை 4 மணியில் இருந்து நள்ளிரவு வரை என்றும் இருந்தன. ஆனால் தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதைக் கருதி மாலை 4 மணிக்குப் பதிலாக மாலை 3 மணி முதலே தரிசனம் தொடங்கும் என்று ஐயப்பன் கோயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ADVERTISEMENT

கடந்த 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது முதல் திங்கள்கிழமை மாலை வரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்கு வந்துள்ளனர். 

தரிசனத்துக்காக திங்கள்கிழமை 70,000 பக்தர்களும், செவ்வாய்க்கிழமை 60,000 பக்தர்களும் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்துள்ளனர். எனவே தரிசன நேரத்தை முன்கூட்டியே தொடங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்றார்.

படிக்க: அதென்ன சல்லிய தோஷம்? எந்தவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்!

கேரள தேவஸ்வம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,

கடந்த இரு ஆண்டுகளில் கரோனா பரவல் தடுப்பு விதிகள் காரணமாக தினசரி 30,000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு ஏதும் விதிக்கப்படவில்லை. எனவே இந்த ஆண்டு பக்தர்களின் வருகை 40 முதல் 50 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

கடந்த 17ஆம் தேதி தொடங்கிய 41 நாள் மண்டல பூஜை விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 27ஆம் தேதி நிறைவடையும். அதன் பின்பு மகரவிளக்கு பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டு, 2023 ஜனவரி 14ஆம் தேதி முடிவடையும். இதைத் தொடர்ந்து ஜனவரி 20ஆம் தேதி இக்கோயில் நடை அடைக்கப்படும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT