செய்திகள்

கும்பாபிஷேகம் காணும் திருவட்டாறு

இரா. இரகுநாதன்

418 ஆண்டுகளுக்குப் பிறகு நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்விய தேசங்களில் ஒன்றானதும் மலை நாட்டு திவ்ய தேசமான கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு ஆறுகளுக்கு இடையில் அமையப்பட்ட திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயிலில் ஜூலை 6ம் தேதி கும்பாபிஷேக வைபவம் நடைபெறுகிறது.

இதையொட்டி ஜூன் 29ம் தேதி முதல் யாகசாலை முதலிய பூர்வாங்க பூஜைகள் துவங்கி நடந்து வருகின்றன தினமும் கலை நிகழ்ச்சிகள் ஆன்மிக நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுகின்றன.

கருவறையில்  22 அடி நீளப் பாம்பணையில் பள்ளி கொள்ளும் பரந்தாமனுக்கு திருவடியில் மேல் மதுகைடபர் என்னும் இரு அசுரர்கள் பயந்து நடுங்கும் வண்ணம் உள்ளனர். சற்று தள்ளி சந்திரன் உள்ளார். திருமாலின் பஞ்சாயுத புருஷர்கள் என அழைக்கப்படும் சக்கரம், வாள், வில், சுதை, சங்கம் என்ற ஐந்தும் தொடர்ந்து சூரியன் மற்றும் கருடாழ்வார் ஆகியோர் உருவங்களில் காட்சி தருகின்றனர். திருமாலின் திருவடிக்கீழ் சிவலிங்கமும், இடக்கரம் தொங்கும் இடத்தில் ஹாதலேய மகரிஷியும், ஸ்ரீ தேவி, பூதேவியும் அமர்ந்த கோலத்தில் அருளுகின்றனர். மற்ற இடங்களில் இருப்பது போல் நாபியில் பிரம்மா இல்லை. பத்மமும் கிடையாது.

திருவிதாங்கூர் மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய இத்திருக்கோயில் மூலவர் மேற்கு பார்த்த கிடந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இவர் கல்லால் வடிக்காதத் திருமேனி 16008 சாளக்கிராமத்தால் கடு சர்க்கரை யோகம் என்னும் கலவையால் வடிவமைக்கப்பட்டு அமைந்துள்ளனர்.

தொல் வரலாறு

பிரம்மன் செய்த யாகத்தில் தோன்றியவர்கள் கேசன், கேசி என்னும் அரக்கர்கள். முனிவர்கள் நடத்திய  யாகத்தினையும் தேவர்களையும் மக்களையும் அச்சுறுத்தினர். மக்கள் திருமாலிடம்  முறையிட்டனர் வெகுண்டெழுந்து திருமால் கேசனை அழித்து கேசியைக் கீழே தள்ளி மேலே சயனம் கொண்டார்.

கேசி கங்கையையும் தாமிர பரணியையும் துணைக்கு அழைத்தார். அவ்விருவரும் வேகமாக ஓடிவந்தனர். பூதேவியோ திருமால் சயனித்திருந்த இடத்தை உயர்த்தினாள். அதனால் நதி  தேவதைகள் திருமால் என்பதை உணர்ந்து அவ்விடத்தைச் சுற்றி மாலைகள் போல் ஓட ஆரம்பித்தன. ஆறுகள் வட்ட வடிவில் திருமாலை வணங்கிச் சென்றதால் அவர் சயனம் செய்த இடம்  வட்டாறு- திருவட்டாறு எனப்பெயர் பெற்றது.

கேசியை அழித்ததால் கேசவன் எனவும் தீமைகளை அழிக்க முதலில் துவங்கியதால் ஆதிகேசவன் எனவும் பெருமாளுக்கு பெயர் உண்டாயிற்று. 

சிறப்புகள் 

பாத்ம புராணம் வசிஷ்ட மகரிஷி இங்கு வந்து தங்கி இறைவனை வழிபட்டு 5 மடங்களை உருவாக்கினார் எனக் குறிப்பிடுகிறது. சந்திரனும் பரசுராமனும் தங்களது குறைகள் நீங்க இத்தலத்து பெருமானை வணங்கி பாவ தோஷ நிவர்த்தி பெற்றனர் எனக் குறிப்பிடுகிறது.

சைதன்ய மார்க்கத்தைத் தோற்றுவித்த இடம்

இங்கு வந்த சைதன்யர்களுக்கு "பிரம்ம சம்ஹிதை"  இங்கு தான் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவிலிருந்து வந்த அனந்த சைதன்யன் என்னும் சன்னியாசி இங்கே தங்கி பாவசம்ஹிதையில் ஆழ்ந்தார் எனக் கூறப்படுகிறது.

சங்க காலத்து எழினி ஆதன் என்பவன் இவ்வூரில் இருந்தவன் என மாங்குடி மருதனார் என்னும் புலவர் கூறுகிறார்.

ஹாதலேயன்

சோமயாஜி என்னும் ரிஷி இத்தலத்தில் புத்திர யாகம் வேண்டி தவம் செய்தார். யாக குண்டத்தில் ஒரு புத்திரன் உருவானான். சப்த ரிஷிகளும் அவனை வளர்த்தனர். ஒரு நாள் ஒரு தேவ குமரன் "ஹாதலேயன்" என்னும்  பெயர் கொண்ட அந்தப் பையனைப் பார்த்து உன் தாய் தந்தையர் யார்? எனக் கேட்டனர் அதற்கு அவன் அருகில் உள்ள வாழை மரத்தைக் காட்டினான். தேவகுமாரனோ சிரித்தான். ஆனால் பெருமாளும் பிராட்டியும் வாழைமரத்தில் இருந்து வெளிவந்து ஹாதலேயனை அருகில் அழைத்து அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசித்து மகனாக உறுதி செய்தனர்.இந்த  புராண வரலாறுகள் தவிர சமீப கால வரலாறுகளும் இதன் சரித்திரத்தில் பல சம்பவங்களை உள்ளடக்கியுள்ளன.

வீரமார்த்தாண்ட வர்மா முதல், வீரகேரள வர்மன், செம்பலாத்த வர்மன் குலசேகரப் பெருமாள் மற்றும் உன்னி கேரள வர்மா ஆகியோர்கள் கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்கள் உள்ளன. கொடிக்கம்பம் முதல் சன்னதியில் உள்ள பெரிய கல்லிலும் கல்வெட்டுகள் தமிழ் வட்டெழுத்திலும், தமிழிலும் உள்ளன.

அல்லா மண்டபம்

கி.பி. 1740ல் ஆற்காடு நவாப் இங்குள்ள திருக்கோயில்களில் விலை மதிப்புள்ளவற்றைக் கொள்ளையடித்துச் சென்றதாகவும், இங்கு இருக்கும் அர்ச்சனை செய்யும் விக்கிரகத்தைத் தங்கத்தால் ஆனது எனத் தவறாக எண்ணி எடுத்துச் சென்று சங்கிலியால் பிணைத்து, சரக் கரையில் வைத்தான். அது நாள் முதல் நவாப் அரண்மனையில் துர் செயல்கள் பல ஏற்பட்டன.

உண்மையை உணர்ந்த நவாப் அதே போல் விக்கிரகத்தை எடுத்த இடத்திலேயே நிறுவ ஏற்பாடு செய்தான். அது முதல் அவனது துன்பங்கள் விலகத் தொடங்கின. தவற்றின் பிராயச்சித்தமாகத் திருக்கோயிலின் உட்புறத்து இறைவன் எழுந்தருள மண்டபம் ஒன்றும் கிரீடம் ஒன்றும் தங்கத் தகடுகளும் காணிக்கையாக சமர்ப்பித்தான்.

அதே மண்டபம் இன்றளவும் "அல்லா மண்டபம்" என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தொடர்ந்து வரலாற்றின் தொடக்கக் காலம் சமீப காலம் வரை தொடர் நிகழ்வுகளைக் கொண்ட வரலாற்றுச்சான்றுகள் பல பெற்ற திருக்கோயில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருள்மிகு ஆதிகேவசப்பெருமாள் திருக்கோயில் ஆகும்.

 இலக்கியம் காட்டுவது வாட்டாற்றான் அடி வணங்கி 
மாஞாலப் பிறப்பறுப்பான  கேட்டாயே மட நெஞ்சே! 

கேசவன் எம்பெருமானை பட்டாய பல பாடி பழவினைகள் பற்றறுத்து   
நாட்டாரோடு இயல்வொழிந்து நாரணனை நன்னீனரே

என நம்மாழ்வாரால் பாடப்பட்ட பாடலில் ஊர்ப்பெயர் இறைவன் பெயர், அவரை வணங்குவதால் கிடைக்கும் பலன் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றார்.

பிரம்மாண்ட புராணம், கருட புராணம், பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் ”விபவனலங்காரம்”, திருக்குருகைப்பிரான் (கி.பி.16ம் நூற்றாண்டு)  எழுதிய "மாறன் அலங்காரம்”, இசைக் சக்கரவர்த்தி ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின், அத்ய்யன ராமாயணம் ஆகிய இலக்கியங்கள் இத்தலத்தின் சிறப்புகளைச் சொல்லுகின்றன.

ஒற்றைக்கால் மண்டபம்

கருவறை முன்புற மண்டபம் 18 அடி சதுரமும் 3 அடி உயரமும் உள்ள ஒற்றைக் கல்லின் மீது எழுப்பப்பட்டு உள்ளது. கி.பி. 1664ம் ஆண்டில் வீரரவிவர்மன் என்ற குலசேகரன் அளித்த நிதி கொண்டு இந்த ஒற்றைக் கல்மண்டபம் அமைக்கப்பட்டு கருவறை 3 துவாரங்கள் எனப்படும் வாயில்களால் அமைக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு வாயிலிலும் திருமுகம், திருக்கரம், திருப்பாதம் என்றும் 3 நிலைகளை தரிசனம் செய்யலாம்.

நம்மாழ்வாழ்வாரால் திருவாய்  மொழியை  10 பாடல்கள் பாடப்பெற்றதுமான இத்திருக்கோயிலின் தாயார் மரகத வள்ளி நாச்சியார் என அழைக்கப்படுகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவட்டாருக்கு நாகர் கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் காலையில்  தொடுவெட்டி என்னும் இடத்தில் இறங்கிச் செல்லலாம். அங்கிருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது.  பேருந்து வசதி உள்ளது.

திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் கோயில், திருவனந்தபுரம் திருக்கோயில் கட்டப்படுவதற்கு வெகு காலம் முன்பாகவே இத்தலம் அமையப்பட்டதால் இது ஆதி ஆனந்த புரம் எனவும், மலை நாட்டுத் திருப்பதிகளில் அரங்கன் அனுக்கிரகம் வழங்குவதால் சேர நாட்டுத் திருவரங்கம் எனவும் அழைக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT