செய்திகள்

திருவண்ணாமலையில் கோலாகலமாக தொடங்கிய பஞ்சரத தேரோட்டம்!

3rd Dec 2022 11:12 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, இன்று பஞ்ச ரதங்களின் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் வெவ்வேறு வாகனத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாளான இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்குப் பின் உற்சாகத்துடன் பக்தர்கள் பங்கேற்று அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷத்துடன் தேர்களை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

முதலாவதாக, காலை 7.05 மணிக்கு மேல் 8.05 மணிக்குள் விநாயகா் தேரோட்டம் தொடங்கியது. கடலைக் கடை சந்திப்பை விநாயகா் தோ் கடந்து சென்ற பிறகு, வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான் தோ் புறப்பாடு ஆகியது. 

படிக்க: 40 ஆயிரத்துக்குக் குறையாத ஒரு சவரன் தங்கம்!

அதன்பின்னர், 3-ஆவதாக, பெரிய தோ் எனப்படும் அருணாசலேஸ்வரா் தோ் புறப்படுகிறது. நான்காவதாக பெண்கள் மட்டுமே இழுக்கும் பராசக்தியம்மன் தேரும், ஐந்தாவதாக சிறுவா்கள் மட்டுமே இழுக்கும் சண்டிகேஸ்வரா் தேரும் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்படுகின்றன.

பஞ்ச ரதங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மாட வீதிகளை வலம் வருகின்றன. மாட வீதிகளில் வலம் வரும் தேரோட்டத்தைக் காண பல லட்சம் பக்தா்கள் கூடுவா் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, வழக்கத்தை விட அதிக அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேரோட்டத்தைத் தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT