செய்திகள்

ஆகஸ்ட் மாத பலன்கள் (மேஷம் முதல் கன்னி)

தினமணி

ஆகஸ்ட் மாத பலன்களை தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

கிரகநிலை:
ராசியில் செவ்வாய், ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
07-08-2022 அன்று சுக்ர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை ஒரு நடுநிலைமையுடன் கையாளும் திறன் படைத்த மேஷ ராசி அன்பர்களே, நீங்கள் தீர்க்கமான எண்ணமுடையவர்கள் இந்த மாதம் பணவரவு திருப்தி தரும். ஆனால் வீண் செலவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செய்வது நல்லது. பயன் தராத முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுவது நன்மை தரும். தொழில் போட்டிகள் உண்டாகலாம். அனுசரித்து செல்வது முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோளற்ற வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உறவினர் நண்பர்களிடம் டென்ஷன் இல்லாமல் போவது நல்லது.

பெண்கள் பயன்தராத முயற்சிகளை கைவிட்டு எந்த ஒரு வேலையையும் ஆராய்ந்து செயல்படுவது வெற்றியை தரும்.
கலைத்துறையினர் புதிய இடங்களில் திறமையை வெளிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள். இரக்க சிந்தனை மேலோங்கும். எதிர்ப்புகள் விலகும். 
அரசியல்துறையினருக்கு செலவு குறையும். எதிலும் அவசர முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். மன தெளிவு உண்டாகும். 

மாணவர்களுக்கு எதிர்கால நலன் கருதி எந்த காரியத்தையும் செய்வது நன்மை தரும்.

அசுபதி:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு  பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.

பரணி:
இந்த மாதம் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.

கார்த்திகை:
இந்த மாதம்  எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும்.
பரிகாரம்: கனகராதா ஸ்தோத்திரம் படித்து லட்சுமியை வணங்க எல்லா நலன்களும் உண்டாகும். காரிய அனுகூலம் கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆக 6, 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 24, 25, 26

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் புதன், சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
07-08-2022 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்:
எந்த நிலையிலும் தன்னம்பிக்கை யுடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே, நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் முன்னேற்றம் காண முடியும். இந்த மாதம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும்.
தொழில் வியாபாரம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு தேவையான ஆதரவு கிடைக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுரியத்தால் அலுவலக வேலைகளை திறமையாக செய்து முடித்து மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். 
குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கி டையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்க அல்லது புதிதாக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதில் சாதகமான பலன் கிடைக்கும்.

பெண்களுக்கு மன குழப்பம் நீங்கி தெளிவான  சிந்தனை மேலோங்கும். பயணங்கள் வெற்றியை தரும்.
கலைத்துறையினர் எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்படும். மற்றவர்கள் மத்தியில் உங்களது பேச்சுக்கு முக்கியத்துவம் இருக்காது. எனவே அறிவுரைகள் கூறுவதை தவிர்ப்பது நல்லது.

அரசியல்துறையினர் சாமர்த்தியமாக செயல் பட்டு வெற்றி காண்பார்கள். ஆனால் மனதில் ஏதாவது குறை ஏற்படும். எனினும் திறமையாக செயல்படுவீர்கள். 
மாணவர்கள்  புத்தி சாதூரியத்தால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் பாராட்டும் கிடைக்கும்.

கார்த்திகை:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும்.  கணவன் மனைவிக்கிடையே  இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும்.

ரோகினி:
இந்த மாதம் எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை.

பரிகாரம்: வைத்தீஸ்வரன் கோயில் வைத்திய நாதஸ்வாமி, முத்துக்குமரனை வணங்கி வர உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆக 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 1, 27, 28

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

கிரகநிலை:
ராசியில் சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
07-08-2022 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
மற்றவர்களின் கட்டாயத்திற்காக எந்த காரியத்தையும் செய்யாத மிதுன ராசி அன்பர்களே, நீங்கள் எதையும் ஆராய்ந்து செய்வதில் கெட்டிக்காரர். இந்த மாதம் எந்த இடத்தில் பேசும்போதும் கவனமாக பேசுவது நல்லது. வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது வியாபார வளர்ச்சிக்கு உதவும். தொழில் தொடர்பான அலைச்சல் உண்டாகலாம். 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. 

குடும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது மன அமைதியை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பேசுவது நன்மை தரும்.

பெண்களுக்கு எந்த நிலையிலும்  மனம் தளராது காரியங்கள் செய்வது வெற்றியை தரும். வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
கலைத்துறையினர் ஒரு சில சிக்கலான கட்டங்களை சந்திக்க நேரிடும். ஆனால் முடிவில் எதிர்பார்த்த படி சாதகமான பலன் கிடைக்கும். கூடுதலான லாபம் கிடைக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். 

அரசியல்துறையினருக்கு தொண்டர்களின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். கட்சியில் நிம்மதி உண்டாகும். உடல் நிலையில் கவனம் தேவை. 
மாணவர்கள் யாருக்கும் உத்திரவாதம் அளிக்காமல் இருப்பது நல்லது. கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

மிருகசீருஷம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு  அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும்.

திருவாதிரை:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். பெண்கள் அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே  ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது.

புனர்பூசம்:
இந்த மாதம் பண விவகாரங்களில் கவனம் தேவை. மாணவர்கள் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன்  பாடங்களை படிப்பது நல்லது. பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

பரிகாரம்: விநாயக பெருமானை வணங்கி வர எல்லா காரியங்களும் தடை நீங்கி சாதகமான பலன் தரும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆக 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 2, 3, 29, 30, 31

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

கிரகநிலை:
ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சந்திரன் - சுக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ -  அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
07-08-2022 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
வாழ்க்கையில் முன்னேறும் கடக ராசி அன்பர்களே, நீங்கள் தைரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இந்த மாதம் சில காரியங்களில் அவசரமாக செயல்படத் தோன்றும். நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். மனதடுமாற்றம் ஏற்படலாம். வாகனங்களில்  செல்லும் போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள்  பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது.

குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே  திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும்.
பெண்கள் சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மைதரும்.  

கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது  நல்லது.  
அரசியல் துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். 

புனர்பூசம்:
இந்த மாதம் மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும்  செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.  ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும்.

பூசம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

ஆயில்யம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள்.  விசேஷ நிகழ்ச்சிகளில்  குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. 

பரிகாரம்: முருகனுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் பால் பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனகவலை நீங்கும். 
சந்திராஷ்டம தினங்கள்: ஆக 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 4, 5

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

கிரகநிலை:
ராசியில் புதன், சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ -  லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
07-08-2022 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இனிய சுபாவமும், மென்மையான பேச்சும் உடைய சிம்ம ராசி அன்பர்களே, நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்.  இந்த மாதம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம்.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பீர்கள். போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனகசப்பு மாறும்.  குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். 

பெண்கள் எதைபற்றியாவது நினைத்து கவலைபடுவீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை.  விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

கலைத்துறையினர் மற்றவர்களுக்கு உதவி செய்யபோய்  தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும்.  

அரசியல் துறையினருக்கு சிறிய வேலையையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். 

மகம்:
இந்த மாதம் பெண்கள் திறமையாக செயல்பட்டு காரிய வெற்றிகாண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும்.

பூரம்:
இந்த மாதம் எந்த சூழ்நிலையையும்  அனுசரித்து  செல்வீர்கள். வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவனதடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.

உத்திரம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம்  தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.

பரிகாரம்:  பவுர்ணமியில் பூஜை செய்து அம்மனை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் 
சந்திராஷ்டம தினங்கள்: ஆக 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 6, 7, 8

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சந்திரன் என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
07-08-2022 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
காலம் தாழ்த்தாமல் எதையும் உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும் என்ற வேகம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே, நீங்கள் எடுக்கும் முடிவு மிகவும் ஆராய்ந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். இந்த மாதம் திடீர் கோபம் ஏற்படலாம். நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். 

தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 

குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். பணவரத்து திருப்தி தரும். 
அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். 

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். 

மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. 

உத்திரம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.   

ஹஸ்தம்:
இந்த மாதம் பெண்கள் எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பதும் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.

சித்திரை:
இந்த மாதம் காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும்.

பரிகாரம்: பள்ளிகொண்ட பெருமாள் இருக்கும் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது சிறந்தது.
சந்திராஷ்டம தினங்கள்: ஆக 17, 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 9, 10

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

பிரசாரத்தில் குயின்.. கங்கனா ரணாவத்!

ஹே சினாமிகா.. அதிதி ராவ்!

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT