செய்திகள்

தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் கோயில்களில் அன்னாபிஷேகம்

21st Oct 2021 03:50 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூர்/அரியலூர்: ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, தஞ்சாவூர் பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில்களில் புதன்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஐப்பசி மாத பெüர்ணமி நாளன்று சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா நடைபெறும். இந்த விழா தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலிலும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இக்கோயிலில் புதன்கிழமை மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது.

இதற்காக பக்தர்கள் 750 கிலோ அரிசியும், 600 கிலோ காய்கனிகளும், மலர்களும் அளித்தனர். மாலையில் தயாரிக்கப்பட்ட சோற்றைக் கொண்டு 13 அடி உயரமுடைய பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

பின்னர் பெருவுடையாருக்கு சோறு, வெண்டைக்காய், புடலங்காய், கேரட், கத்திரிக்காய், தக்காளி, முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, அவரைக்காய், பரங்கிக்காய் உள்ளிட்ட காய்களாலும், வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, மாதுளை உள்ளிட்ட பழங்களாலும், மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதையடுத்து இரவில் அலங்காரம் கலைக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில்.... அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கிராமம், பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கம்,  60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்டது. ஒவ்வோர் ஆண்டும், ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று, சிவலிங்கத்துக்கு 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். லிங்கத்தின் மேல் சாத்தப்படும் சாதம் லிங்கத்தின் தன்மையைப் பெறுகிறது என்பது ஐதீகம்.

நிகழாண்டு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை 9 மணி முதல் 100 மூட்டை அரிசியை சமைத்து பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யத் தொடங்கி மாலை 5 மணி வரை சாதம் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பலவிதமான பலகாரங்களால் அலங்கரிக்கப்பட்டது. மாலை 6 மணியளவில் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தீபாராதனைக்குப் பின்னர் பக்தர்களுக்கு அபிஷேகம் செய்த அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில், மீதமுள்ள சாதம் அருகே உள்ள ஆறு, ஏரி, குளங்களில் மீன்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக அளிக்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் காஞ்சி சங்கரமட அன்னாபிஷேக விழா கமிட்டியினர் செய்திருந்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கோயிலைச் சுற்றி நடமாடும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தன.

தஞ்சாவூர் பெரியகோயிலில் புதன்கிழமை மாலை நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் சோறு, காய்கனிகளால் செய்யப்பட்ட அலங்காரத்தில் காட்சியளித்த பெருவுடையார். (வலது) அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் பிரகதீஸ்வரருக்கு காட்டப்படும்  தீபாராதனை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT