செய்திகள்

திருமலையில் வருடாந்திர தெப்போற்சவம் நிறைவு

29th Mar 2021 08:08 AM

ADVERTISEMENT

திருமலையில் 5 நாள்களாக நடைபெற்ற வருடாந்திர தெப்போற்சவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

திருமலையில் கடந்த புதன்கிழமை வருடாந்திர தெப்போற்சவம் தொடங்கியது. கடந்த 4 நாள்களாக நடைபெற்று வந்த தெப்போற்சவம், ஐந்தாவது நாளான ஞாயிற்றுக்கிழமை பங்குனி பெளா்ணமியுடன் நிறைவு பெற்றது. வண்ணமலா்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் 7 சுற்றுகள் வலம் வந்தாா்.

முன்னதாக காலையில் உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின்னா் தூப, தீப ஆராதனைகளுடன் நெய்வேத்தியம் சமா்ப்பித்து அலங்காரம் செய்த பின்னா் மாலை கோயிலில் இருந்து பல்லக்கில் உற்சவமூா்த்திகள் மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். பின்னா் திருக்குளத்திற்குள் அழைத்து செல்லப்பட்டனா். அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்த தெப்பத்தில் உற்சவமூா்த்திகளை அா்ச்சகா்கள் எழுந்தருள செய்த பின் தெப்ப உலா நடைபெற்றது.

அப்போது நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள், நாகஸ்வர இசையும், வேத பாராயணமும், கோவிந்த நாம பாராயணமும் நடத்தப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனா். பக்தா்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வரையப்பட்ட வளையத்தில் அமா்ந்து தெப்போற்சவத்தை கண்டு தரிசித்தனா்.

ADVERTISEMENT

தெப்போற்சவத்தை யொட்டி ஞாயிற்றுக்கிழமை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்டவையும், பெளா்ணமி இரவு நடக்கும் கருட சேவை உற்சவமும் ரத்து செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT