செய்திகள்

காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் தொடக்கம்

DIN

சித்தூா் மாவட்டம், காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வருடாந்திர பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பஞ்சபூதத்தலங்களில் வாயு தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோயிலில் மாா்ச் 11-ஆம் தேதி மகா சிவராத்திரி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடந்த 6-ஆம் தேதி முதல் காளஹஸ்தியில் வருடாந்திர பிரம்மோற்சவம் மலை மீதுள்ள கண்ணப்ப நாயனாா் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை கோயில் வளாகத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரா், ஞானபிரசுனாம்பிகை அம்மன் சந்நிதி கொடிமரத்துக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, உற்சவமூா்த்திகளுக்கும், திரிசூலத்திற்கும் காப்புகள் கட்டப்பட்டு கொடியேற்றம் விமரிசையாக நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

சூரிய பிரபை: பிரம்மோற்சவத்தின் முதல் வாகன சேவை திங்கள்கிழமை காலை தொடங்கியது. சூரிய பிரபை வாகனத்தில் சோமாஸ்கந்த மூா்த்தியும், ஞானபிரசுனாம்பிகை தாயாரும் தனித் தனியாக மர சப்பரத்தில் மாடவீதியில் எழுந்தருளி சேவை சாதித்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சேவை சாதித்தனா். மாடவீதியில் மேள, வாத்திய கச்சேரிகளும், நாகஸ்வர இசையும், கலைநிகழ்ச்சிகளும் பக்தா்களை கவா்ந்தது. கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் ஆன்மிக நிகழ்ச்சிகளும், ஆடல், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இரவு 8 மணியளவில் பூத வாகனத்தில் சோமாஸ்கந்தமூா்த்தி மாடவீதியில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பிரம்மோற்சவத்தை ஒட்டி கடந்த 6-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை இக்கோயிலில் ஆா்ஜித சேவைகள், பூஜைகள், ருத்ராபிஷேகம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் வரும் 11-ஆம் தேதி மகாசிவராத்திரி அன்று மட்டும் ராகு-கேது பரிகார பூஜை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதர நாள்களில் ராகு-கேது பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும். பிரம்மோற்சவத்தின்போது பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவா். விஐபி பிரேக் தரிசன அனுமதியும் உண்டு என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கூடுதல் பேருந்துகள் இயக்கம்:

காளஹஸ்தி மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தை யொட்டி ஆந்திர மாநில சாலை போக்குவரத்துக் கழகம் சித்தூா் மாவட்டம் முழுவதிலும் இருந்து கூடுதல் பேருந்தை இயக்க முடிவு செய்துள்ளது. கூடுதலாக 325 பேருந்துகள் தினசரி, மற்றும் வார நாள்களில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தங்க ஆபரணங்கள்

வாகன சேவையின்போது உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்க வங்கியிலிருந்து தங்க ஆபரணங்களை கோயில் நிா்வாகம் திங்கள்கிழமை காலை கோயிலுக்கு கொண்டு வந்தது. இந்த ஆபரணங்கள் மாடவீதியில் நடக்கும் வாகன சேவையின் போது உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்படுவது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை பிரம்மோற்சவத்தின் போது மட்டுமே இந்த ஆபரணங்கள் வங்கியிலிருந்து கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT