செய்திகள்

திலதர்ப்பனபுரி மனிதமுக விநாயகர்: சதுர் லக்‍ஷஜப ஹோமம்

1st Mar 2021 06:38 PM | ஆர். தெட்சிணாமூர்த்தி

ADVERTISEMENT

 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட பூந்தோட்டம் அருகில் கூத்தனூரில் சரஸ்வதிக்கென்ற தனிக்கோயில் வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் உள்ளது. இந்த கூத்தனுருக்கு அருகிலுள்ள திலதர்ப்பனபுரி என்கிற செதலபதியில், விநாயகர் மனித முகத்துடன் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விநாயகரை நாம் முழுமுதற்கடவுளாக வழிபட்டு வருகிறோம். எந்தச் செயலை செய்யும் முன்பும் விநாயகரை வழிபட்டுத் தொடங்கினால், அந்த காரியம் நல்ல விதமாக முடியும் என்பது நம்பிக்கை. அனைத்துக் கோயில்களிலும் முதல் கடவுளாக, யானை முகத்துடன் விநாயகர் காட்சி தருகிறார். 

மனிதமுக விநாயகர்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகிலுள்ள திலதர்ப்பனபுரி என்கிற செதலபதியில் உள்ள ஸ்ரீசுவர்ணவல்லி அம்பிகா சமேத ஸ்ரீமுக்தீஸ்வரர் சுவாமி கோயிலின் வடகிழக்கு பாகத்தில், எங்கும் இல்லாத வகையில் ஸ்ரீவிநாயகப் பெருமான், மனிதமுகத்துடன், நரமுககணபதியாக, ஆதி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார்.  

ADVERTISEMENT

விநாயகர் அவதரித்த வரலாறு

விநாயகருக்கு யானைமுகம் தோன்றுவதற்கு முன்னர், மனித முகத்துடன் அருள் புரிந்தார் என்பதற்கு இக்கோயில் சான்றாக விளங்குகிறது.

யானைமுக விநாயகர் தோன்றிய விதம்

ஒருமுறை கைலாயத்தில் பார்வதிதேவி நீராடச் செல்லும்போது, தனக்குக் காவல் வேண்டும் என விரும்பி, ஒரு குழந்தையை உருவாக்கி விக்னேஸ்வரன் எனப் பெயரிட்டு, பார்வதிதேவி, விக்னேஸ்வரனை வீட்டுக்குக் காவல் வைத்துவிட்டு, தான் குளித்துக் கொண்டிருக்கையில், உள்ளே யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று கூறிவிட்டு நீராடச் செல்கிறார். 

அப்போது வீட்டுக்குச் சிவபெருமான் வருகிறார். சிவபெருமான், தான் பார்வதியின் கணவர் என்று சொன்னபோதும், உள்ளே அனுமதிக்காமல், வாசலிலேயே தடுத்துவிட்டார் விக்னேஸ்வரன்.  சிவனுடன் வந்த நந்தீஸ்வரர் கோபமுற்று விக்னேஸ்வரனுடன் சண்டையிட்டார். விக்னேஸ்வரன், நந்தீஸ்வரரையும், அவருடன் வந்த மற்ற பூதகணங்களையும் சண்டையிட்டு அழித்தார். இதனைக் கண்டு கோபம் கொண்ட சிவன் விக்னேஸ்வரனின் கழுத்தை வெட்டி விட்டார். இதையறிந்த பார்வதிதேவி, மிகவும் வருத்தமுற்று, தனது மகனை உயிர்ப்பிக்க வேண்டும் என்று சிவனிடம் கதறினாள். 

பார்வதிதேவியை சமாதானப்படுத்தும் விதமாக, சிவன் தனது பூத கணங்களுக்கு, வடக்கு நோக்கித் தலைவைத்துப் படுத்திருக்கின்ற ஒருவரது தலையை எடுத்து வாருங்கள் என உத்தரவிட்டார். பூதகணங்கள், வடக்கு நோக்கித் தலை வைத்துப் படுத்திருந்த ஒரு யானையின் தலையை வெட்டி எடுத்து வந்து கொடுத்தனர். சிவபெருமான், யானைத் தலையை விக்னேஸ்வரனுக்குப் பொருத்தினார். மேலும் விக்னேஸ்வரனைப் பூதகணங்களுக்குத் தலைவராக்கி, விநாயகர் என்று பெயர் வைத்தார். யார் எந்த செயல் செய்தாலும், விநாயகரை வழிபட்டபின் துவங்கினால், வெற்றி கிடைக்கும் என்ற சிறப்பு அந்தஸ்தை அளித்தார். இதனால், விக்னேஸ்வரன், விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். வி என்றால் வெற்றி, நாயகர் என்றால் தலைவர். இவ்வாறு விக்னேஸ்வரன், வெற்றி நாயகன் ஆனார்.

இதேபோல மற்றொரு வரலாறும் உண்டு.கஜமுகாசுரன் என்பவன், யானை முகத்துடன் அட்டகாசம் செய்ததாகவும், அவனை வென்ற விக்னேஸ்வரன், அவனது முகத்தை தனக்குப் பொருத்திக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறப்படுகிறது. இவ்வாறு மனித முக விநாயகருக்கு, யானைமுகம் தோன்றியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

செதலபதி மனிதமுக விநாயகர்

விநாயகருக்கு, யானைமுகம் கிடைப்பதற்கும் முன்பே ஆதி காலத்திலேயே, மனிதமுக விநாயகர், பூந்தோட்டம் அருகில் உள்ள  திலதர்ப்பனபுரி என்ற செதலபதியில், ஆதிவிநாயகர் என்ற திருநாமத்தில், மிகவும் அபூர்வமான தோற்றத்துடன் தனி சன்னதிக் கொண்டு அருள்பாலித்து வருகிறார். ஆதிவிநாயகர் வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை மடித்து வைத்து, இடது கையை, இடது காலின் மீது வைத்தும், வலது கையைச் சற்றே சாய்த்து அபய முத்திரைக் காட்டியபடி காட்சியளிக்கிறார். இங்கு ஸ்ரீஅகஸ்தியர், மாதந்தோறும் சங்கடஹரசதுர்த்தி தினத்தில், தூல, சூக்கும வடிவங்களில்,மனிதமுக ஆதிவிநாயகரை வழிபடுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

மாசி மாத மகா சங்கடஹரசதுர்த்தி சதுர லக்ஷஜப ஹோமம்

சிறப்புப் பெற்ற இந்த மனிதமுகம் கொண்ட நரமுககணபதியான ஸ்ரீஆதிவிநாயகருக்கு, மாசி மாத மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சதுர லக்‍ஷஷஜப ஹோம பெருவிழா நடைபெற உள்ளது.

இந்த ஹோமப் பெருவிழாவில் 50 சிவாச்சாரியார்கள், ஆறுகாலங்கள் (நான்கு தினங்கள்) ஜபம் செய்து, 10000 மோதகங்கள், 10000 சமித்துகள், 10,000 ஆவர்த்தி ஆஜ்யாஹுதிகள், 10,000 ஹோம திரவிய வாமான்களுடன், ஆறு காலங்களில் 40,000 ஆவர்த்தி ஹோமங்கள் செய்து, நிறைவில், வெண்பட்டுஹோமம், வஸோர்த்தாரா ஹோமம்,  ஷோடச பிரமச்சாரி பூஜைகள், கோ பூஜை, அஸ்வபூஜை, கஜ பூஜையடன் மகா பூர்ணாஹுதி செய்து, ஸ்ரீஆதிவிநாயகப் பெருமானுக்கு கலசாபிஷேகம் நடைபெறும். இந்த ஹோமத்தில் நடைபெறும் யாகத்துக்குரிய மகா மந்திரங்களையும்,ஆறுகால பூஜை, ஹோமங்களையும் தரிசிப்பதால் அனைத்து நலன்களையும் பெறலாம் என்பது ஐதீகம். 

நிகழ்ச்சி நிரல்

பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கி, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை ஜபங்கள், ஹோமங்கள், பூஜைகள் நடைபெற்றது. மாசி மாத மஹா சங்கடஹர சதுர்த்தியான, நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு  ஜபங்கள் ஆரம்பிக்கப்பட்டு, 10 மணிக்குக் கோ பூஜை, கஜ பூஜை, ஷோடச பிரம்மச்சாரி பூஜை, அஸ்வ பூஜை, 11 மணிக்கு வெண்பட்டு ஹோமம், போன்றவை நடைபெற்று பகல் 12 மணிக்கு மகா அபிஷேகமும், 12-30 மணியளவில் மணியளவில் சதுர்லக்‍ஷ ஜபஹோம கலசாபிஷேகமும், இரவு 7 மணி அளவில் ஸ்ரீ ஆதிவிநாயகருக்கு சிறப்பு அலங்காரத்தில், சகஸ்ரநாம அர்ச்சனையும், மகா தீபாரதனையும் நடைபெற உள்ளது. 

இந்த சிறப்பு வாய்ந்த மாசி மாத மகா சங்கடஹர சதுர்த்தி சதுர்லக்ஷ ஜப ஹோம திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, பரம்பரை தர்ம பரிபாலகர் லெட்சுமணன் செட்டியாரும், கோயில் தலைமைச் சிவாச்சாரியார், டாக்டர் சுவாமிநாத சிவாச்சாரியாரும் ஏற்பாடு செய்து வருகின்றனர். 

செதலபதி மனிதமுக விநாயகர்

செதலபதியில் மனிதமுக விநாயகர் அருள்பாலிக்கும் ஸ்ரீசுவர்ணவல்லி அம்பிகா சமேத ஸ்ரீமுக்தீஸ்வரர் கோயில்.

Tags : திலதர்ப்பனபுரி மனிதமுக விநாயகர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT