செய்திகள்

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அஷ்டமி சப்பரம் வீதியுலா

7th Jan 2021 03:39 AM

ADVERTISEMENT


மதுரை:  மதுரையில் கடந்த 10 மாதங்களுக்குப் பின்னர் மீனாட்சியம்மனும், சுந்தரேசுவரரும் அஷ்டமிச் சப்பரங்களில் வெளி வீதிகளில் புதன்கிழமை வீதியுலா வந்து அருள்பாலித்தனர். இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
உலகில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படி அளப்பதைக் குறிக்கும் விதமாக, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழித் தேய்பிறை நாளில் அஷ்டமிச் சப்பரத் திருவிழா நடைபெறும். சுவாமியும், அம்மனும் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி மதுரை நகர வீதிகளின் வழியாக உலா வந்து அருள்பாலிப்பர்.
கரோனா தொற்றால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியின்றி காலபூஜைகள் மட்டும் நடைபெற்றன. மேலும், சித்திரைத் திருவிழா உள்ளிட்ட முக்கியத் திருவிழாக்கள் பக்தர்கள் பங்கேற்பின்றி கோயிலுக்குள்ளேயே நடத்தப்பட்டன.
இந்நிலையில், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் புத்தாண்டின் முதல் திருவிழாவாக  நடைபெறும் அஷ்டமிச் சப்பரத் திருவிழாவை வழக்கமான முறையில் பக்தர்கள் பங்கேற்புடன் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, அஷ்டமிச் சப்பரத் திருவிழா வழக்கமான முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மார்கழித் தேய்பிறை நாளான புதன்கிழமை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு அதிகாலையில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. 
இதையடுத்து அதிகாலை 5 மணிக்கு சுவாமி பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மனுடனும் சிறப்பு அலங்காரத்தில் அஷ்டமிச் சப்பரங்களில் எழுந்தருளினர்.  அஷ்டமிச் சப்பரங்களுக்கு சிறப்புத் தீபாராதனை நடைபெற்றதையடுத்து, பக்தர்கள் சப்பரங்களை வடம்பிடித்து இழுத்தனர். இதில் மீனாட்சியம்மன் எழுந்தருளிய சப்பரத்தை முழுவதும் பெண்களே வடம்பிடித்து இழுத்து வந்தனர்.
சப்பரங்கள் கோயிலில் இருந்து புறப்பாடாகி  யானைக்கல், வடக்குவெளி வீதி, கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி, திருப்பரங்குன்றம் சாலை வழியாக மேலவெளி வீதி, குட்ஷெட் தெரு, நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாரட் வீதி, காமராஜர் சாலை, விளக்குத்தூண் வழியாக கீழமாசி வீதியில்  தேரடிக்கு வந்து சேர்ந்தது. அஷ்டமிச் சப்பர வீதியுலாவின்போது உலகில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளப்பதைக் குறிக்கும் விதமாக அரிசி தூவப்பட்டது. அப்போது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாலையில் சிதறிக்கிடந்த அரிசியை பக்தியுடன் சேகரித்து எடுத்துச் சென்றனர். கடந்த 10 மாதங்களுக்குப் பின்னர் சுவாமி, அம்மன் வீதியுலா வந்ததால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
அஷ்டமிச் சப்பரத் திருவிழாவையொட்டி வெளி வீதிகள், யானைக்கல், விளக்குத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT