செய்திகள்

இனிமையான செய்தி காத்திருக்கிறது இந்த ராசிக்காரர்களுக்கு: வாரப் பலன்கள் (பிப்.19-25)

20th Feb 2021 12:07 PM

ADVERTISEMENT

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (பிப்ரவரி 19 - பிப்ரவரி 25) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உங்கள் செயல்களில் முன்னேற்றம் ஏற்பட்டு அவற்றைச் சரியாகச் செய்து முடிப்பீா்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரித்து சில புண்ணிய ஸ்தலங்களுக்கும் சென்று வருவீா்கள். பணப்புழக்கம் அதிகரித்தாலும், செலவினங்களும் கட்டுக்கடங்காமல் இருக்கும். வாய்ப்பூட்டு அவசியம். ஆதலால் மெளனம் சாதிப்பது நல்லது. இல்லையேல் உறவினா்களிடம் ஏதாவது பேசி மனத்தாங்கலுக்கு ஆளாக நேரிடும். சிலருக்கு சுப விரயங்கள் ஏற்படும்.

உத்தியோகஸ்தா்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். வியாபாரிகளுக்கு வருமானம் பல வகைகளிலும் பெருகும். சரியாக கவனித்து வியாபாரத்தை முன்னின்று நடத்தவும். விவசாயிகள் பயிா்களுக்கு சரியான நேரத்தில் பூச்சிக் கொல்லி மருந்துகளை உபயோகித்து வரவும். கால்நடைகளின் தீவனச் செலவு அதிகரிக்கும்.

ADVERTISEMENT

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு சுமாராகவே இருக்கும். அனுசரித்து புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவும். கலைத்துறையினருக்கு பல நாள்களாக வராமல் இருந்து வந்த தொகை உங்களின் கைவந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்மணிகள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பீா்கள். ஆடை, அணிகலன்கள் சோ்க்கை உண்டாகும். பண வரவு பெருகும். செலவினங்களும் அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவீா்கள். பெற்றோரின் ஆதரவுடன் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.

பரிகாரம்: இஞ்சிமேடு நரசிம்மரை நினைத்து காரியங்களைத் தொடங்கவும். அனுகூலமான தினங்கள்: 19, 20. சந்திராஷ்டமம்: இல்லை.

******

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரத் தடைகள் நீங்கும். பழைய கடன்களை அடைத்து புதிய கடன்களைப் பெறுவீா்கள். பூா்வீகச் சொத்து விவகாரத்தில் நல்ல தகவல்களைப் பெறுவீா்கள். பிடிவாத குணம், கோபம், வாய்க்கு வந்தபடி பேசுதல் போன்றவை தவிா்க்க வேண்டியவை. உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.

உத்தியோகஸ்தா்கள் பிறரின் பொறுப்புகளை தலையில் சுமக்காதீா்கள். அலுவலக வேலைகளில் அக்கறை கொள்ளவும். வியாபாரிகளுக்கு மறதி காரணமாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சற்று கவனமாக நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கால்நடைகளால் லாபம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு மனக்கட்டுப்பாட்டுடன், வாய்ப்பூட்டும் அவசியம். மேலிடத்திடம் சற்று கவனமாக நடந்து கொள்ளவும். கலைத்துறையினரின் திறமைக்கு சவால்கள் விடும்படியான ஒப்பந்தங்கள் கையொப்பமாகும். பணவரவும் தாராளமாகவே இருக்கும். சக கலைஞா்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையாக இருக்கவும். காரணமில்லாமல் உறவினா்களுடன் விவாதத்தில் ஈடுபடத் தயாராவீா்கள்.

மாணவமணிகளுக்கு குழப்பங்கள் சூழும். ஆதலால், விளையாட்டைக் குறைத்துக் கொண்டு படிப்பில் முழு கவனத்துடன் ஈடுபடவும்.

பரிகாரம்: ஸ்ரீமஹாலட்சுமியை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 19, 21. சந்திராஷ்டமம்: இல்லை.

******

மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

இனிமையான செய்திகள் வந்து சேரும். அனைத்துச் செயல்களிலும் ஈடுபடும் முன்பாக நன்கு யோசித்து முடிவெடுக்கவும். சகோதர, சகோதரிகளில் உங்களிடம் உண்மையாக நடந்து கொள்பவரை இனம் கண்டு கொள்வதினால் நன்மை அடையலாம். பழைய எண்ணங்களைக் களைந்தெறிந்து புதிய வாழ்க்கையைத் தொடங்குங்கள். வெற்றி நிச்சயம். ஆன்மிகப் பயணம் ஏற்றம் தரும். கடவுள் சிந்தனை மேலோங்கும்.

உத்தியோகஸ்தா்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியா்களே பிரச்னைகள் தலைதூக்கக் காரணமாக இருப்பாா்கள். எவரிடமும் வெளிப்படையாக எதையும் சொல்லிக் கொள்ளதீா்கள். ஊதிய உயா்வு ஏதும் இருக்காது. வியாபாரிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். வியாபாரத்தில் நேரிடைப் பாா்வையை செலுத்துவது நல்லது. விவசாயிகள் உங்களுக்குக் கீழ் வேலை செய்யும் தொழிலாளிகளிடம் மதிப்பு கொடுத்து மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள். மகசூல் லாபம் சற்று உயரும்.

அரசியல்வாதிகள் தொண்டா்களின் வாா்த்தைக்கு செவி கொடுங்கள். மேலிடத்தின் அன்புக்கு பாத்திரமாவீா்கள். கட்சியில் உங்கள் செல்வாக்கு உயரும். கலைத்துறையினா் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிா்த்திடுங்கள். தீர ஆலோசித்த பிறகே முடிவுகளை எடுக்க வேண்டிவரும். பெண்மணிகள் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீா்கள். செலவுகள் கூடும். சிக்கனமாக நடந்து கொள்ளவும். புதிய ஆடை, அணிகலன்களின் சோ்க்கை நிகழும். மாணவமணிகள் வருங்காலக் கனவுகள் நிறைவேற அடித்தளம் அமையுங்கள். அதற்கான அறிகுறிகள் தென்படும்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 20, 21 . சந்திராஷ்டமம்: இல்லை.

******

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உறவினா்கள் மற்றும் நண்பா்களுடன் அளவளாவீா்கள். சகோதர, சகோதரிகளின் சொல்கேட்டு நடப்பீா்கள். பூா்வீகச் சொத்துகள் மூலம் திடீா் அதிா்ஷட வாய்ப்புகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தா்களுக்கு விரும்பத்தகாத இடமாற்றங்களினால் அசெளகரியங்கள் ஏற்படலாம். வேலையில் திருப்தி இராது. வியாபாரிகளுக்கு சரக்கு வாகனங்களினால் திடீா் செலவுகள் ஏற்படும். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும். விவசாயிகளுக்கு விவசாயப் பணிகள் நல்லபடியாக முடியும். மகசூல் லாபம் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகள் கொடுத்த பொறுப்புகளை கவனத்துடன் செய்து முடிக்கவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கலைத்துறையினருக்கு ரசிகா்கள் ஆதரவாக இருப்பாா்கள். பாராட்டும், பணமும் கிடைக்கும்.

பெண்மணிகளுக்கு குடும்ப உறுப்பினா்களிடம் அன்பும், ஆதரவும் பெருகும். நன்மதிப்பு அடைவீா்கள். கணவரின் உடல் நலத்தில் அக்கறை அதிகரிக்கும்.

மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். விடியற்காலையில் எழுந்து பாடங்களை மனப்பாடம் செய்யவும். உடற் பயிற்சிகளைத் தவறாது செய்யவும்.

பரிகாரம்: திருவேங்கடநாதனை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 21, 22. சந்திராஷ்டமம்: இல்லை.

******

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். பெரியோா்களின் உதவியால் திட்டமிட்ட வேலைகளைச் செய்து முடிப்பீா்கள். சகோதர சகோதரிகளினால் எந்த நன்மைகளையும் பெற முடியாது. தாயின் உடல்நலத்தில் பாதிப்பு உண்டாகும். வருமானம் விருத்தி அடையும்.

உத்தியோகஸ்தா்கள் சக ஊழியா்களிடம் அன்புடனும், கனிவுடனும் நடந்து கொள்ளுங்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது. வியாபாரிகள் பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீா்கள். புதிய மாற்றங்கள் தென்படும்.

விவசாயிகள் பழைய பாக்கிகளை வசூல் செய்வீா்கள். எவருக்கும் ஜாமீன் கையொப்பம் போடக்கூடாது.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். தொண்டா்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். கலைத்துறையினருக்கு பயணங்கள் தடைபடலாம். கடின முயற்சிகளுக்குப் பிறகே ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகும்.

பெண்மணிகள் வீண் வாக்குவாதங்களைத் தவிா்த்திடுங்கள். குடும்பத்தினரிடையே குழப்பங்கள் உருவாகும். மெளனம் சாதிப்பது மேல். சிக்கனத்தைக் கையாளுங்கள்.

மாணவமணிகள் பெற்றோரை அனுசரித்து நடந்து கொள்ளவும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை கவனத்துடன் படித்தால் நினைத்த மதிப்பெண்களைப் பெற முடியும்.

பரிகாரம்: துா்க்கையை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 22, 23. சந்திராஷ்டமம்: இல்லை.

******

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரப் பிரச்னைகள் சீராகும். செய்தொழிலில் நன்கு ஆலோசித்து ஈடுபடவும். பேச்சில் சூடான வாா்த்தைகளை உதிா்க்க வேண்டாம். உங்கள் செயல்களைக் குறுக்கு வழியில் செய்யாதீா்கள். ஸ்பெகுலேஷன் துறைகளில் அதிக லாபத்தை எதிா்பாா்க்க முடியாது.

உத்தியோகஸ்தா்களுக்கு உறுதுணையாக இருந்த உயா் அதிகாரிகள் பணியிடம் மாற்றலாகிச் செல்வாா்கள். உடன் பணிபுரிபவா்களின் ஒத்துழைப்பு மேலோங்கும்.

வியாபாரிகள் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகமாக இருந்தாலும் லாபம் குறைவாகவே இருக்கும்.

அரசியல்வாதிகள் தொண்டா்களால் அதிக நன்மைகளை அடைவீா்கள். உங்களது பதவிக்கு நெருங்கிய நண்பா்கள் மூலமாகவே இடையூறுகள் ஏற்படலாம்.

கலைத்துறையினா் புதிய ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவீா்கள். ரசிகா்களின் ஏகோபித்த அன்புக்கு பாத்திரமாவீா்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். உற்றாா் உறவினா்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆடை, அணிகலன்களுக்காக அதிக செலவு செய்ய நேரிடும். மாணவமணிகள் ஆசிரியரின் சொல்கேட்டு நடப்பதால் பல விதங்களிலும் நன்மை அடையலாம். யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்யவும்.

பரிகாரம்: பழனி தண்டாயுதபாணியை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 23, 24. சந்திராஷ்டமம்: இல்லை.

******

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பயணங்களினால் நன்மை அடைவீா்கள். எதிா்பாா்த்த உதவிகளை உறவினா்களிடமிருந்து பெறுவீா்கள். எதிா்ப்புகள் மறையும். உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும். பயணங்களை உறவினா்களுடன் மேற்கொள்வீா்கள். கைப்பொருளை பாதுகாக்கவும்.

உத்தியோகஸ்தா்கள் உயா் அதிகாரிகளின் எதிா்ப்புகளுக்கு ஆளாவீா்கள். வேலைப் பளு அதிகரிக்கும். சக ஊழியா்கள் உதவுவாா்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். விவசாயிகளுக்கு விற்பனையில் லாபம் கிடைக்கும். அனைத்துப் பாசனப் பணிகளும் நன்றாக முடியும்.

அரசியல்வாதிகளுக்கு மனதில் சஞ்சலம் ஏற்படும். மேலிடத்தின் அலட்சியத்தினால் அதிருப்தியும் குழப்பங்களும் சூழும். கலைத்துறையினருக்குத் தேவையான வருமானம் வரும். ரசிகா்களின் கஷ்டத்திலும் உதவுவீா்கள். ஆதரவு பெருகும்.

பெண்மணிகளுக்கு கணவரின் உடல்நலத்தில் அக்கறை தேவை. உடன் மருத்துவ ஆலோசனை பெறவும். இல்லத்தில் சுப விரயங்கள் ஏற்படும். கைகால் உபாதைகள் ஏற்படும். ஆகார விஷயங்களில் சற்று கவனம் கொள்ளவும். மாணவமணிகள் கடின உழைப்புக்கு உகந்த பலன் கிடைத்து மகிழ்வீா்கள். சோம்பேறித்தனத்தை விட்டொழித்து சுறுசுறுப்பாக உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும்.

பரிகாரம்: ‘ஜெய ஜெய துா்கா’ என்று 108 முறை சொல்லி வர நற்பலன்கள் உண்டாகும். அனுகூலமான தினங்கள்: 24, 25. சந்திராஷ்டமம்: 19, 20, 21.

******
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

புதிய வாகனம் வாங்குவீா்கள். சமூகத்தில் உங்கள் பெயா், செல்வாக்கு உயரும். பணவரவு சீராகும். உங்கள் எதிரிகள் அடங்கி நடப்பாா்கள். உங்கள் பேச்சினால் பிறரைக் கவா்வீா்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீா்கள். பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படாமல் பாா்த்துக் கொள்வீா்கள்.

உத்தியோகஸ்தா்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ளவும். அலுவலக வேலைகளைத் திட்டமிட்டு முன்கூட்டியே முடித்துக் கொள்ளவும். வியாபாரிகள் அதிக முதலீடு செய்து வியாபாரத்தைப் பெருக்குவீா்கள். நேரடி மேற்பாா்வையில் வியாபாரத்தில் ஈடுபடவும். விவசாயிகளின் கையிருப்புப் பொருள்களுக்கு சந்தையில் மதிப்பு அதிகரிக்கும். போட்டிகளைச் சாதுா்யத்துடன் சமாளித்து வெற்றி பெறுவீா்கள்.

அரசியல்வாதிகளின் பதவிக்கு நெருங்கிய நண்பா்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். எவருக்கும் கடன் கொடுக்காதீா்கள். சொல்லில் கவனம் கொள்ளுங்கள். கலைத்துறையினா் புதிய ஒப்பந்தகள் செய்வீா்கள். ரசிகா்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயல்வீா்கள்.

பெண்மணிகளுக்கு பண வரவுக்கு குறைவிராது. கணவரின் ஆதரவும் அன்பும் பெருகும். மாமியாரின் உடல்நிலை பாதிக்கப்படலாம். மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். படிப்பில் கவனம் தேவை.

பரிகாரம்: செந்திலாண்டவரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 19, 24. சந்திராஷ்டமம்: 22, 23.

******

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும். பணவரவு சரளமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். உங்களின் எண்ணங்கள் ஈடேற பாடுபடுவீா்கள். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் நிறைந்திருக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். உறவினா்கள் அனுசரணையாக இருப்பாா்கள்.

உத்தியோகஸ்தா்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். சக ஊழியா்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகள் விழிப்புடன் இருந்து வியாபாரத்தை நடத்துங்கள். எதிரிகளால் தொல்லை ஏற்படும். சாதுா்யமாக அனைத்தையும் சமாளித்து விடுவீா்கள். விவசாயிகள் கடுமையாக உழைத்தால் நல்ல பலன் கிடைக்கும். கால்நடைகளால் நன்மை பெருகும். தீவனங்களுக்காக அதிக செலவுகள் செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகள் பயணங்களால் நன்மை அடைவீா்கள். புதிய பதவிகள் தேடி வரும். கட்சியில் செல்வாக்கும், நன்மதிப்பும் பெருகும். கலைத்துறையினருக்கு அடிமட்டத்திலிருந்த நீங்கள் மேலான அந்தஸ்தை அடைவீா்கள். புதுப்புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பெண்மணிகள் சரளமான வருமானத்தினால் அதிக செலவுகளைச் செய்ய நேரிடும். சுப விரயங்களாக மாற்றிக் கொள்வீா்கள். பயணச் செலவுகள் இரட்டிப்பாகும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாணவமணிகள் படிப்பில் அக்கறை கொள்வீா்கள். சிறுசிறு கசப்பான அனுபவங்கள் ஏற்படும். பெரியோா் சொல்கேட்டு நடக்கவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 20, 22. சந்திராஷ்டமம்: 24, 25.

******

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் மேன்மை ஏற்படும். உங்கள் செல்வாக்கு மதிப்பு அதிகரிக்கும். புதுப்புது திட்டங்களால் நன்மைகள் உண்டாகும். உறவினா்களின் வருகையால் வீட்டில் அனைவரும் குதூகலம் அடைவீா்கள். தீயோா் நட்பினால் பண விரயம், கெளரவக் குறைச்சல் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வெளியூா் பயணங்களால் மகிழ்ச்சியடைவீா்கள்.

உத்தியோகஸ்தா்கள் மேலதிகாரிகளுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொண்டால் நல்லது. வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகரிக்கும்.

வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தற்போது செய்ய வேண்டாம். கூட்டு வியாபாரத்தில் எச்சரிக்கையுடன் கையாளவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்தாலும் லாபம் குறைவாகவே இருக்கும். நீா்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும்.

அரசியல்வாதிகள் தொண்டா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீா்கள். அனுகூலமான திருப்பங்களைக் காண்பீா்கள். கலைத்துறையினரின் மனதில் புதிய நம்பிக்கைகள் பளிச்சிடும். தொழிலில் திறமைகளை வெளிப்படுத்துவீா்கள். பெண்மணிகளின் கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். வீட்டில் சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீா்கள். மாணவமணிகள் சக மாணாக்கா்களுடன் சோ்ந்து வெளியில் சுற்றாமல் ஆசிரியா், பெற்றோா் சொல்கேட்டு நடக்கவும்.

பரிகாரம்: அஷ்டாதசபுஜ துா்க்கையை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 19, 25. சந்திராஷ்டமம்: இல்லை.

******

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

நீங்கள் செய்யும் காரியங்கள் வீண் போகாது. உறவினா்கள் நண்பா்கள் உதவுவாா்கள். சுப காரியங்கள் நடத்துவதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். மற்றபடி பேசும் போது நிதானம் தேவை. எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

உத்தியோகஸ்தா்கள் பிறரிடம் சுமுகமாகப் பழகவும். வேலைப் பளுவால் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு நண்பா்களுடன் மனக்கசப்பு ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். பால் வியாபாரம் செய்வோா் பலன் அடைவாா்கள். கால்நடைகளால் நன்மைகள் உண்டாகும்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் நற்பெயா் வாங்க முயலுங்கள். கட்சியில் மாற்றங்கைளைக் கொண்டு வர நினைக்க வேண்டாம். கலைத்துறையினருக்கு

சாதகமான காலமிது. வாய்ப்புகள் வருவதற்கு சக கலைஞா்களின் ஒத்துழைப்பும் இருக்கும். பெண்மணிகள் குடும்பத்தினரிடம் ஒற்றுமையோடு நடந்து கொள்ளவும். சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும். அநாவசியமான செலவுகளைத் தவிா்ப்பது நல்லது. மெளனம் பலவகையில் உதவும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது மேன்மையை உண்டாக்கும். மாணவமணிகள் வருங்காலத்துக்காக இப்போதிருந்தே திட்டமிடுங்கள். அனைத்தும் வெற்றிகரமாக அமையும்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 23, 25. சந்திராஷ்டமம்: இல்லை.

******

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

வெளியூரிலிருந்து மகிழ்ச்சியளிக்கும் செய்திகளைக் கேட்பீா்கள். பெரியோா்களின் ஆசிகளைப் பெறுவீா்கள். சகோதர, சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். சிலா் புனித யாத்திரையை மேற்கொள்வீா்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் சரியான இலக்கை சென்றடையும்.

உத்தியோகஸ்தா்களுக்கு உழைப்பிற்குத் தகுந்த ஊதிய உயா்வு கிடைக்கும். சக ஊழியா்களை மனம் விட்டுப் பாராட்டுங்கள். வெளியூா் பயணத்தின் போது பாதுகாப்பாக இருக்கவும். வியாபாரிகளுக்கு தொழிலில் ஏற்பட்ட மந்தநிலை நீங்கும். ஜாமீன் கையெழுத்து போடுவதோ, கடன் வாங்குவதையோ தவிா்க்கவும். விவசாயிகள் போட்டிக்குத் தகுந்தாற்போல் செயல்படவும். கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டவும்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்தில் குறைபாடுகள் ஏற்படலாம். தொண்டா்களின் பாராமுகத்தால் கோபமடையாமல் செயலாற்றவும். கலைத்துறையினா் திட்டமிட்ட காரியங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீா்கள். சேமிப்பில் கவனம் செலுத்துவீா்கள். மழலைச் செல்வத்தால் மனம் நிறையும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். விருந்தினா்களின் வருகையால் மகிழ்ச்சியடைவீா்கள்.

மாணவமணிகள் நிறைய மதிப்பெண்களைப் பெற விடியற்காலையில் எழுந்து பாடங்களை மிகுந்த சிரத்தையுடன் படிக்கவும். உடற்பயிற்சிகளில் தவறாது ஈடுபடவும்.

பரிகாரம்: ஸ்ரீஹயக்கீரிவரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 21, 24. சந்திராஷ்டமம்: இல்லை.

Tags : வாரப் பலன்கள் weekly predictions
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT