செய்திகள்

காலன் வரும் நேரம் - கடவுளின் பாதம் பற்றுவோம்!

28th Sep 2020 04:54 PM | - ஜோதிட சிரோன்மணி தேவி

ADVERTISEMENT

 

நாம் வாழும் இந்த இக்கட்டான நிலையில் காலன் வரும் நேரம் என்பது பயந்து தான் வாழ வேண்டியுள்ளது. நாம் மனிதன் என்பதால்தான் பயம் அதிகமாக உள்ளது. சிவனை நோக்கும் சிவனடியார்கள், வைணவ அடியார்கள் மரணத்தைக்கண்டு பயப்படாமல் இருப்பார்கள். ஜாதகத்தில் அற்ப ஆயுள், மத்திம ஆயுள், பூர்ண ஆயுள் என்று 30, 60, 80  என்று வயதை முறைப்படுத்தி இருப்போம். 

ஜாதகம் பார்க்க வந்த ஒருவர் தற்பொழுது தனக்கு மாரகதிபதி தசை நடக்கிறது எனக்கு பயமாக உள்ளது என்றார். அவரின் மாரகத்தை ஏற்படுத்தும் அதிபதிகள் அஸ்தங்கமாகவும் வக்கரமாகவும் வலுகுன்றி இருந்தது. அவருக்கு அவருடைய ஜாதகத்தில் உள்ள சாதகமான பலனையும் தைரியத்தையும் தவிர வெறென்ன சொல்ல முடியும்?

மாரக அதிபதிகள் உயிரை எடுக்கும் என்று நினைக்கக் கூடாது, மாரகத்திற்கு ஒப்பான செயல்களை, அதன் காரகத்துவத்திற்கு ஏற்ப செயல்படுவார்கள். நான் பார்த்த அனைத்து ஜாதகமும் மாரகரை விட அஷ்டமாதிபதிகள் மற்றும் பாதகாதிபதிகள் அதீத வலுக்கொண்டு செயல்படுகிறார்கள். ஜாதகத்தில் எட்டுக்குரியவன், எட்டில் அமரும் அவயோக கிரகங்கள் மற்றும் ஆயுள் காரகன் சனி, மற்றும் உயிர்/உடல் காரகர்கள், ஜாதகரின் தசா புத்தி, அந்தரம் சூட்சமங்களில் காலன் வரும் நேரம் என்று சொல்லலாம்.  அதற்கும் நிறைய விதி விலக்கு உண்டு. ஒருசிலர் எவ்வளவுதான் மரணத்தை நோக்கி தற்கொலை முயற்சி செய்தாலும் காலன் அவர்களை அழைத்துச் செல்லமாட்டான். நம்முடைய கர்மாவை முடிக்காமல் செல்லவிடாது.

ADVERTISEMENT

விதியை மதியால் வெல்லலாம் என்பது ஒரு கூற்று. அது ஒருசில செயலுக்கு உண்மை என்று சொல்லலாம், ஆனால் கர்மாவின் செயல்படி மரணம் என்னும் சம்பவத்தை நிகழ்த்துவது மதி என்னும் சூட்சமம் ஆகும். ஜோதிடத்தில் நாங்கள் ஆயுள் பலத்தை பற்றிச் சொல்லலாம், கண்டதை பற்றிச் சொல்லலாம், எவற்றின் வாயிலாக கண்டம் என்றும் சொல்லலாம் ஆனால் இறக்கும் நேரத்தைச் சொல்லுவது கடினம் அவற்றைக் குறிக்கவும் கூடாது. அது கடவுளின் கையில் உள்ளது. இந்த பிரபஞ்சத்தில் பிறப்பு என்றால் ஒரு இறப்பு என்பது உண்டு. இறப்பு  என்பதை எந்த மனிதராலும் ஏற்றுக்கொள்வது கடினம் தான்.  

ஒருசில ஜோதிட புத்தகத்தில் கூறப்படுவது 6, 8, 12 உரியவர்கள் சேர்க்கை பெற்று அசுப பாவத்தில், அஷ்டமாதிபதி அல்லது பாதகாதிபதி இணைப்பு (connection) இருந்து அந்த தசா புத்தி வரும் காலம் காலனின் வருகை காலம் ஆகும். எடுத்துக்காட்டாக.. 73 வயதான மூதாட்டி தீபத்தின் வாயிலாக இறந்தார். அன்றைய கோட்சரம் பௌர்ணமி திதி, ரோகிணி நட்சத்திரத்தில், மேஷ லக்கினத்திற்கு அஷ்டமாதிபதி உச்சம் பெற்று, எட்டில் சூரியன், சனி, புதன், சுக்கிரன் போட்டிப்போட்டு வலுத்து இருந்தனர். அவர்களின் வீட்டில் தெரிந்த அந்த மூதாட்டியின் ஜாதக  அமைப்பு -  மேஷம் லக்கினம், கார்த்திகை மாதம், ரேவதி நட்சத்திரம் என்றார்கள். 

மேஷம் என்பதால் சுறுசுறுப்பானவர் ஒருநாளும் படுத்த படுக்கையான நபர் அல்ல. ஆனால் அவர் மரணம் ஒரு துர்மரணம் ஆகும். அன்றைய கிரக கோட்சரம், அவரின் லக்கினபடி ஒளிகிரகமான சூரியன், ஆயுள்கரகன் மற்றும்  கர்மகாரகன் சனீஸ்வரன், அதுவும் மாரகரான சுக்கிரன் 3, 6க்கு உடைய புதன், சந்திரன் சராதிபதி புதன் அனைவரும்  அஷ்டமத்தில், சேர்க்கை பெற்று, லக்கினாதிபதி மற்றும் அஷ்டமாதிபதி செவ்வாய் உச்சநிலையில் அதுவும் பாதகாதிபதியுடன் சனியுடன் பரிவர்த்தனை நேரம் அவர் மரணம் நிகழ்ந்தது. மோட்சகாரகன் கேதுவும் 12ல், சயனத்தில் சஞ்சாரம். அஷ்டமாதிபதி உச்சம் பெறக் கூடாது நெருப்பின் தன்மையும், கார்த்திகை மாதம் தீபத்தின் தன்மையும், ஆயுள் காரகன் பாதகாதிபதியான சனியானவர் பரிவர்த்தனை என்பது இன்னும் அதீத வலுப்பெற்று மாரகர்களுடன் சேர்ந்து துர்மரணத்தை ஏற்படுத்தினார்கள்.

எப்பொழுதும் மாரகர்களை விட அஷ்டமாதிபதிகள் பாதகாதிகள் தங்கள் தசாகாலங்களில் செவ்வனே செயல்படுத்துவார்கள். ஜாதக அலங்காரத்தில் ஒரு விதியில் கூறப்பட்டது இவற்றிற்குப் பொருந்தும் மேஷ லக்கினத்தில் பிறந்தவருக்கு ரோகிணி நட்சத்திரத்தில், பௌர்ணமியில் மரணம் அடைவார்கள் என்று பொதுநலனில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த மரணம் ரோகிணி நட்சத்திரம், பௌர்ணமி திதியாகும்.

ஆயுள் பற்றிய மற்றொரு விளக்கம் :

இருக்கும் அற்ப வயதுள்ளோன்

இறப்பன் விபத்து இது தாரைதனில்  !

வருக்க முடன்பூ ரணவயதோன்   

மரண வதைநட் சத்திரத்தில் !

பெருக்க முடனமத் தியவயதோன்

பிரத்தி யக்குத்  தாரைதனில்!

தருக்கும் அற்ப வயதில்அற்பம்

சாற்றக் கேண்மின் தரைமீதே !   

பொருள்: ஜாதக அமைப்பின்படி அற்ப ஆயுள் அமைப்புடையவன் "விபத்து தாரை" என்னும்  நட்சத்திரத்திற்குரிய கிரகத்தின் திசை நடக்கும்போது மரணத்தைத் தழுவுவான். (ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 3, 12, 21 நட்சத்திரங்கள்) 

"வதை தாரை" என்னும் நட்சத்திரத்திற்குரிய கிரகத்தின் திசை நடக்கும்போது பூர்ண ஆயுள் அமைப்புடைய ஜாதகன் உயிர் துறப்பான். (ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 7,16,25 நட்சத்திரங்கள்) மத்திம ஆயுள் அமைப்பு உடையவன், 

"பிரத்யக்குத் தாரை" என்னும்  நட்சத்திரத்திற்குரிய கிரகத்தின் திசை நடக்கும்போது ஆவி நீப்பான். (ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 5,14,23  நட்சத்திரங்கள்) 

அடுத்த பாடலில் அற்ப வயதில் அற்பம் என்பதைப் பற்றிக் கூற கேட்பாயாக!
அற்ப, மத்திம, பூர்ண ஆயுள் உடையவன் எந்தெந்த தாரை மாரகத்தைத் தரும் என்று ஜாதக அலங்காரத்தில் கூறப்பட்டுள்ளது. இது ஒரு பொதுவான சூட்சம விதி இவற்றையும் ஒரு சிறு பகுதியை ஆராய்ச்சிப்படி பார்க்கவேண்டும்.

மரணத்தை வென்று நீண்ட தீர்க்காயுள் பெற:

தினமும் காயத்ரி மந்திரம் சத்தமாக உச்சரிக்க வேண்டும். காயத்ரி மந்திரம் தெரியாதவர்கள்  சிவ மந்திரத்தையும், நாராயண மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும்.  நாம் முடிந்தவரை இயற்கை தாவர வகை உணவை உட்கொள்ளவேண்டும், இயற்கை மருத்துவத்தைப் பயன்படுத்தவேண்டும். நம்மால் இயன்றதை மற்றவர்களுக்கு தானம் கொடுத்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பணம் மற்றும் அல்லாமல் உடலாலும் மற்றவர்களுக்கு உதவுவதும் தானச்செயல்தான். எமதர்மனை எதிர்க்கும் ஆற்றல், அடக்கும் ஆற்றல் நம் எம்பெருமானுக்கு மட்டுமே அந்த அதீத ஆற்றல் உண்டு. நம்மைச் சுற்றி சிவமயம் இருந்தால் எமபயம் இருக்காது. கடவுளின் பாதத்தைப் பற்றிக் கொண்டு உங்கள் கடமைகளை, கர்மாக்களை செய்தால் உங்களை விட்டு எமபயம் சென்று தீர்க்காயுள் கிட்டும்.  

குருவே சரணம்!

- ஜோதிட சிரோன்மணி தேவி, 

Whatsapp message: 8939115647
Email : vaideeshwra2013@gmail.com


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT