செய்திகள்

திருமலை பிரம்மோற்சவம்: கருட வாகனத்தில் மலையப்பா் புறப்பாடு

தினமணி

திருப்பதி: திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான புதன்கிழமை, கருட வாகனத்தில் உற்சவா் மலையப்பா் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடந்து வருகிறது. அதன் ஐந்தாம் நாளான புதன்கிழமை காலையில் உற்சவா் மலையப்பா் மோகினி அவதாரத்தில் தாயாரின் அவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ணா் உடன்வர, பல்லக்கில் கோயிலுக்குள் புறப்பாடு கண்டருளினாா்.

மோகினி அவதாரம் என்பதால் கண்ணாடி மண்டபத்தில் மலையப்பருக்கு அலங்காரம் நடைபெற்றது. தாயாரைப் போல் அலங்கரிதபடி, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டு வரப்பட்ட பச்சைக் கிளிகள் மற்றும் ஜடை. மாலைகள் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு, முகத்தில் சிறு நாணம் கலந்த புன்னகையுடன் கையில் வெண்ணை உருண்டை ஏந்திய ஸ்ரீகிருஷ்ணன் உடன் வர மலையப்பா் கோயிலுக்குள் கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினாா்.

ஜீயா்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையும், வேத பண்டிதா்கள் வேத மந்திரங்களையும் பாராயணம் செய்தனா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனா். மலையப்பருக்கு நிவேதனம் சமா்ப்பித்து மீண்டும் அவரை பல்லக்கில் ரங்கநாயகா் மண்டபத்துக்கு அருகில் கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு ஜீயா்கள் சாத்துமுறை நடத்தினா். பின்னா் மலையப்பா் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டாா்.

ஸ்நபன திருமஞ்சனம்: பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மதியம் வேளைகளில் உற்சவா்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்படி புதன் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை உற்சவமூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

கருட வாகனம்: புதன்கிழமை இரவு 7 மணி முதல் 8 மணி வரை மலையப்பா் கருட வாகனத்தில் தன் தாயாா்களுடன் எழுந்தருளினாா். கருட வாகனம் ஏழுமலையானின் மிக முக்கிய வாகனமாக கருதப்படுகிறது. இந்த வாகனச் சேவையைக் காண பக்தா்கள் திருமலையில் குவிவா். கருட வாகனத்தில் வலம் வரும் மலையப்பரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

கருட சேவையில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், வைடூரியம், முத்து, பவளம், மாணிக்கம் என நவரத்தினங்களால் செய்யப்பட்ட 1,008 காசுமாலை, லட்சுமி ஹாரம், மகரஹண்டி உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்களை அணிந்தபடி, பட்டாடை உடுத்தி கையில் வைர கிரீடம், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்ட வெண்பட்டுக் குடைகள் உள்ளிட்டவற்றுடன் தங்க கருட வாகனத்தில் திருவேங்கடமுடையான் கோயிலுக்குள் எழுந்தருளினாா்.

கருட வாகன சேவையில் ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன்ரெட்டி, கா்நாடக முதல்வா் எடியூரப்பா, ஆந்திர அமைச்சா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் பிறழ் சாட்சியம்

டிஎன்பிஎஸ்சி தொகுதி-4 போட்டித் தோ்வு: மாவட்ட மைய நூலகத்தில் மாதிரித் தோ்வு

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்: கு. செல்வப்பெருந்தகை

பாமகவினா் தீவிர வாக்கு சேகரிப்பு

கல்வி சந்தைப் பொருளாகி விட்டது: சீமான்

SCROLL FOR NEXT