செய்திகள்

நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் திறப்பு: கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்

1st Sep 2020 03:49 PM

ADVERTISEMENT

 

பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் இன்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்துச் சென்றனர்.

கரோனா பொது முடக்கத்தால் மார்ச் 20-ஆம் தேதி மூடப்பட்ட கோயில்கள் கடந்த 160 நாட்களாக திறக்கப்படவில்லை. அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களை திறக்க வேண்டும் என இந்து முன்னணி மற்றும் பல்வேறு ஆன்மீக அமைப்பினர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இருந்தபோதிலும் நோய்த் தொற்றின் தாக்கம் அதிகமாக காணப்படவே கோயில்கள் திறப்பு என்பது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நாமக்கல் நரசிம்மர் கோயில் திறக்க மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியது. ஆனால் பொது முடக்கம் அமலில் இருந்ததால் கோயில் திறக்கப்படவில்லை.

செப்.1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அதனடிப்படையில் பக்தர்களை அனுமதிக்குமாறு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்டு சிறிய, பெரிய என்ற வகையில் சுமார் 80 கோயில்கள் உள்ளன. ஐந்து மாதங்களுக்குப் பின் இக்கோயில்கள் செவ்வாய்க்கிழமை  திறக்கப்பட்டது.  நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக கை கழுவும் திரவம் வழங்கும் தானியங்கி இயந்திரம் நுழைவாயிலில் பொருத்தப்பட்டிருந்தது. 

மேலும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கோயில் வளாகத்தில் வட்டம் இடப்பட்டிருந்தன. வெளிமாவட்ட பேருந்து போக்குவரத்து இல்லாததால் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. கோயில்களில் அர்ச்சனை செய்வதற்கும்,  பூ, பழங்கள், மாலைகள் வழங்குவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 160 நாள்களுக்கு பிறகு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், அரங்கநாதர் கோயில், நரசிம்மர் கோயில் திறக்கப்பட்டதால் பக்தர்களும், பொதுமக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT