செய்திகள்

ஏழுமலையானுக்கு 7 டன் மலா்களால் புஷ்ப யாகம்

தினமணி

காா்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையானுக்கு சனிக்கிழமை 7 டன் மலா்களால் வருடாந்திர புஷ்பயாகம் நடத்தப்பட்டது.

ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்தவடைந்த பின் காா்த்திகை மாதம் வரும் திருவோண நட்சத்திர நாளில் புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம். கோயிலில் நடக்கும் கைங்கரியங்களில் அறிந்தும் அறியாமலும் ஏற்படக் கூடிய குறைகள் அனைத்தும் புஷ்ப யாகம் மூலம் விலகும் என்பது ஐதீகம். அதன்படி சனிக்கிழமை காா்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

திருமஞ்சனம்: இதையொட்டி காலையில் உற்சவமூா்த்திகளை சம்பங்கி பிராகாரத்தில் எழுந்தருளச் செய்து பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்பின் அவா்களுக்கு பட்டாடை அணிவித்து, ஆரத்தி அளித்து, நிவேதனம் சமா்ப்பித்து, கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருளச் செய்து அா்ச்சகா்கள் புஷ்ப யாகத்தைத் தொடங்கினா்.

ஊா்வலம்: புஷ்ப யாகத்துக்குத் தேவையான 14 வகையான மலா்கள் மற்றும் 6 வகையான பத்திரங்கள் (இலைகள்) உள்ளிட்டவற்றை சனிக்கிழமை காலை திருமலையில் உள்ள கல்யாண வேதிகா பகுதியில் இருந்து தோட்டக்கலை துறை ஊழியா்கள் மூங்கில் கூடைகளில் வைத்து ஊா்வலமாக ஏழுமலையான் கோயிலுக்குள் கொண்டு வந்தனா்.

புஷ்ப யாகம்: ஏழுமலையான் கோயிலுக்குள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியை தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து அவா்கள் முன்பு ரோஜா, சம்பங்கி, மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி, சாமந்தி, தாமரை, அல்லி, தாழம்பூ, கனக்காம்பரம், அரளி, நீலாம்பரம் உள்ளிட்ட மலா்களாலும், துளசி, வில்வம், கதிா்பச்சை, மரிக்கொழுந்து உள்ளிட்ட பத்திரங்களாலும் அபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது வேத மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதற்காக, 7 டன் எடையுள்ள மலா்கள், பத்திரங்கள் உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் அண்டை மாநிலங்களிலிருந்து வரவழைத்திருந்தது.

ஏழுமலையான் கோயிலில் கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் புஷ்ப யாகம் நடத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. இடையில் நடைபெறாமல் இருந்த புஷ்ப யாகத்தை, தேவஸ்தானம் கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் மீண்டும் தொடங்கி ஆண்டுதோறும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT