செய்திகள்

குருப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை?

13th Nov 2020 02:50 PM

ADVERTISEMENT

 

2020-ம் ஆண்டு நிகழவிருக்கும் குருப் பெயர்ச்சியில் குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார்? மாற்றம் அடைவதினால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை ஏற்படும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

நவக்கிரகங்களில் முழு சுபக் கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.

இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்கக் கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.

ADVERTISEMENT

குரு பார்வை அல்லது வியாழ அனுகூலம்

நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகள் உதாரணமாக திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ அனுகூலம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்துவிட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும். 

குருவின் பலம்

குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்திலிருந்து 5,7,9 ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்புப் பார்வைகளாகும்.

ஸ்ரீசார்வரி வருஷம், ஐப்பசி மாதம் 30ம் நாள் (15.11.2020) ஞாயிற்றுக்கிழமையும் - அனுஷ நக்ஷத்ரமும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் இரவு 09.48க்கு மிதுன லக்னத்தில் குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார். மகர ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மகர ராசிக்கு வரும் குரு பகவான் கும்ப ராசிக்கு பிலவ வருடம் ஐப்பசி மாதம் 27ம் தேதி 13.11.2021 சனிக்கிழமையன்று மாறுகிறார். 

தற்போது மாறக்கூடிய குருபகவான் மகர ராசியிலிருந்து தனது ஐந்தாம் பார்வையால் ரிஷப ராசியையும் - ஏழாம் பார்வையால் கடக ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் கன்னி ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விட பார்க்கும் பலமே அதிகம். எனவே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும். 

பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:

நன்மை பெறும் ராசிகள்: ரிஷபம் - கடகம் - கன்னி

நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: துலாம் - தனுசு - மகரம் - மீனம்

பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: மேஷம் - மிதுனம் - சிம்மம் - விருச்சிகம் - கும்பம்

குரு காயத்ரீ மந்திரம்

ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

குரு ஸ்லோகம்

தேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்

பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.

குருவால் ஏற்படும் பாக்கியங்கள்

பக்தி, சிரத்தை, வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்தல் போன்ற விஷயங்கள் குரு பலத்தால் பெறக் கூடியதாகும். ஒருவர் பெரிய மத குருவாக இருக்கிறார் என்றால் அவருக்கு குரு நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று பொருள்.

ஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும் அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது என 
பொருள். 

அரிய சாதனைகளை செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில்  புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான்.

குருவின் பலம்

எந்த ஒரு ஜாதகத்திலும் குருவின் இருப்பு மிக மிக முக்கியம். இதை வைத்துதான் குல தெய்வ அனுக்ரஹம் - முன்னோர்கள் ஆசீர்வாதம் ஆகியவற்றைக் கணிக்க முடியும்.

குரு திரிகோணத்தில் இருந்தால் பெரிய பலம் என்றும், கேந்திரத்தில் இருந்தால் மத்திம பலம் என்றும், மறைவு ஸ்தானத்தில் இருந்தால் அதம பலம் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சார பலம் மிக முக்கியம். 

இதையும் படிக்கலாம்: 12 ராசிகளுக்கான குருப் பெயர்ச்சி பலன்கள் 
 

Tags : gurupeyarchi குருப் பெயர்ச்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT