செய்திகள்

வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் மாசிமக தேரோட்டம்

6th Mar 2020 12:05 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கிய தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுக்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.

சப்த விடங்க தலங்களில் ஒன்றான வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்கள் வழிபட்டதாக கூறப்படுவதும், மூடப்பட்டிருந்த கோயில் கதவை சமயக் குரவர்களான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடி திறந்ததும் சிறப்புக்குரியது. அகஸ்திய முனிவருக்கு இறைவன் திருமணக் கோலத்தில் காட்சிக் கொடுத்த தலமாகவும், 64 சக்தி பீடங்களில் ஒன்றான சுந்தரி பீடம் அமையப் பெற்ற கோயிலாகவும் இந்த தலம் திகழ்கிறது.

தேரோட்டத்துக்கு சிறப்புப் பெற்ற தலங்களில் ஒன்றான இந்தக் கோயிலில் ஓடிய 5 மரத்தேர்களும் பழுதாகி சிதைந்து போனதால், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தேரோட்டம் தடைபட்டிருந்தது. இதையடுத்து, தமிழக அரசு அளித்த நிதியுடன், கோயில் உபயதாரர்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன் புதிய மரத்தேர் செய்யப்பட்டு, கடந்த 2017 ஆண்டு  மாசிமகப் பெருவிழாவின்போது மீண்டும் தேரோட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்நிலையில், நிகழாண்டு மாசிமகப் பெருவிழா கடந்த 17 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீ ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜசுவாமி எழுந்தருளினார்.  தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்று, வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். பாரம்பரிய முறைப்படி தப்பு, தாரை, கொம்பு முழங்க நாகஸ்வர இசையுடன், கீழ வீதியில் அமைந்துள்ள தேர் முட்டி பகுதியிலிருந்து காலை 9.45 மணிக்கு தேர் இழுத்துச் செல்லப்பட்டது. 

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தி பரவத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஒருபக்க வடத்தை ஆண்களும், மறுபக்க வடத்தை அதற்கு நிகராக பெண்களும் பிடித்து இழுத்தனர். திருப்பங்களில் தேரை பின்னால் இருந்து தள்ளுவதற்கு ஏதுவாக இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன

ADVERTISEMENT
ADVERTISEMENT