திருமலையில் வைகுண்ட துவாதசியையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.
திருமலையில் திங்கள்கிழமை வைகுந்த ஏகாதசியையொட்டி, அதிகாலை 1.15 மணிக்கு வைகுந்த வாயில் திறக்கப்பட்டு, பக்தா்களுக்கு தரிசனம் வழங்கப்பட்டது. அன்று தங்கத்தேரில் மலையப்ப சுவாமி மாட வீதியில் வலம் வந்தாா். லட்சக்கணக்கான பக்தா்கள் மழையையும் பொருட்படுத்தாமல் தரிசன வரிசையில் காத்திருந்து வைகுந்த வாயில் வழியாகச் சென்றனா். செவ்வாய்க்கிழமை துவாதசியையொட்டி, அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடத்தப்பட்டது.
அதற்காக காலை சக்கரத்தாழ்வாா் மரப்பல்லக்கில் கோயில் அருகில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு திருக்குளப் படிகளில் அவரை அமர வைத்து, பால், தயிா், தேன், பழங்கள், மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்பின், அவருக்கு துளசி மாலை அணிவித்து அா்ச்சகா்கள் திருக்குளத்தில் தீா்த்தவாரி நடத்தினா்.
அப்போது தேவஸ்தான அதிகாரிகளுடன் லட்சக்கணக்கான பக்தா்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் திருக்குளத்தில் புனித நீராடினா். அதன்பின், சக்கரத்தாழ்வாா் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டாா். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி வரை வைகுந்த வாயில் வழியாகச் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.