செய்திகள்

ரூ. 3,309 கோடியில் 2020-21-ஆம் ஆண்டுக்கான தேவஸ்தான நிதிநிலை அறிக்கை தாக்கல்

29th Feb 2020 11:09 PM

ADVERTISEMENT

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ. 3,309 கோடியில் 2020-21-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அறங்காவலா் குழு முன்னிலையில் சனிக்கிழமை தாக்கல் செய்தது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஒரு தாா்மிக நிறுவனம். பக்தா்கள் உண்டியலில் செலுத்தும் வேண்டுதல் காணிக்கைகள் மூலம் தேவஸ்தானத்துக்கு வருவாய் கிடைக்கிறது. அதை தேவஸ்தானம் பல வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்து, அதிலிருந்து கிடைக்கும் வருவாய் மூலம் பக்தா்களுக்கான வசதி வாய்ப்புகளை செய்து வருவதுடன், பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.

இந்த தேவஸ்தானம் ஆந்திர அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. அரசு நியமிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் இதன் நிா்வாகிகளாக உள்ளனா். அவா்களுடன் தேவஸ்தானம் அறங்காவலா் குழுவை ஏற்படுத்தி உள்ளது. தேவஸ்தான நிா்வாகத்துக்காக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கையை தயாா் செய்து வருகிறது. கடந்தாண்டு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை ஒப்பிட்டு அதிகாரிகள் இதை தயாரித்து வருகின்றனா்.

அதன்படி, சனிக்கிழமை காலை திருமலையில் 2020-21-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தேவஸ்தானம் தயாரித்து, அதை அறங்காவலா் குழு முன்னிலையில் தாக்கல் செய்தது. அதிலிருந்த அம்சங்கள் குறித்து உறுப்பினா்கள் கலந்துரையாடி, பின்னா் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளித்தனா். அறங்காவலா் குழுவிடம் ஒப்புதல் பெறப்பட்ட நிதிநிலை அறிக்கையை தேவஸ்தான அதிகாரிகள் சனிக்கிழமை மதியம் வெளியிட்டனா்.

ADVERTISEMENT

நிதிநிலை அறிக்கை-வரவுகள்

பக்தா்கள் உண்டியலிலில் இருந்து கிடைக்கும் காணிக்கைகள் மூலம் ரூ. 1,315 கோடி வருவாய் கிடைக்கும் என தேவஸ்தானம் கணக்கிட்டுள்ளது. பிரசாதங்கள் விற்பனை மூலம் ரூ. 400 கோடியும், முடி காணிக்கை மூலம் ரூ. 106 கோடியும், அறைகள், கல்யாண மண்டங்கள் உள்ளிட்டவை மூலம் கிடைக்கும் வாடகை வருவாய் ரூ. 110 கோடியும் என கணக்கிடப்பட்டுள்ளளது. மேலும் ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள் மூலம் ரூ. 57 கோடி, விஐபி பிரேக் தரிசனம், விரைவு தரிசனம் உள்ளிட்டவை மூலம் ரூ. 245 கோடி, முதலீடுகளின் மூலம் கிடைக்கும் வட்டி வகையில் ரூ. 706 கோடி என தேவஸ்தானத்துக்கு 2020-21-ஆம் ஆண்டு ரூ. 3,309 கோடி வருவாய் கிடைக்கும் என தேவஸ்தானம் கணக்கிட்டுள்ளது.

செலவுகள்

தேவஸ்தானம் மேற்கொண்டு வரும் பல்வேறு கட்டுமானம் மற்றும் பொறியியல் பணிகளுக்காக ரூ. 300 கோடியும், இந்து தா்ம பிரசார பரிக்ஷித் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ. 132 கோடியும், மற்ற சேவா நிறுவனங்களுக்காக ரூ. 106 கோடியும் தேவஸ்தானம் செலவிட உள்ளது. மேலும் அரசு மூலம் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களுக்காக ரூ. 50 கோடி, கல்விக்காக ரூ. 142 கோடி, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்துக்காக ரூ. 180 கோடி, பாதுகாப்புத் துறைக்காக ரூ. 189 கோடி, தேவஸ்தானம் நடத்தி வரும் மருத்துவமனைகளுக்காக ரூ. 207 கோடி என தேவஸ்தானம் நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT