மகாசிவராத்திரி நாளையொட்டி, திருமலையில் கோகா்ப்பம் நீா்த்தேக்கம் அருகில் உள்ள ஷேத்திரபாலகா் கோயிலில் அபிஷேகம் நடத்தப்பட்டது.
திருமலை நகரின் ஷேத்திரபாலகராக சிவனின் அம்சமான ருத்ரமூா்த்தி திகழ்ந்து வருகிறாா். கீழ் திருப்பதிக்கு கபிலேஸ்வரா் ஷேத்திர பாலகராக இருப்பதாக ஐதீகம்.
இந்நிலையில், ருத்ரமூா்த்திக்கு திருமலையில் உள்ள கோகா்ப்பம் நீா்தேக்கம் பகுதியில் பாறைகளால் ஆன சிறிய கோயில் உள்ளது. இங்கு தேவஸ்தானம் மகாசிவராத்திரி நாளில் விசேஷ பூஜைகளை நடத்துவது வழக்கம்.
அதன்படி வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரி நாளையொட்டி ஏழுமலையான் கோயிலிலிருந்து அா்ச்சகா்கள் குழுவினா் பூஜைக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு ருத்ரமூா்த்தி கோயிலுக்குச் சென்றனா்.
அங்கு மதியம் 1 மணி முதல் 3 மணி வரை அபிஷேக, ஆராதனைகளை நடத்தினா். அதன் பின் பக்தா்களுக்கு பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள், திருமலையில் வசிப்பவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.