செய்திகள்

ரத சப்தமி: 7 வாகனங்களில் பவனி வந்த மலையப்பர்

2nd Feb 2020 03:43 AM |  திருப்பதி,

ADVERTISEMENT

ரத சப்தமி நாளையொட்டி, திருமலையில் 7 விதமான வாகனங்களில் மலையப்பர் மாட வீதியில் வலம் வந்தார்.
 ஆண்டுதோறும் சூரிய ஜயந்தி என்று அழைக்கப்படும் சூரியபகவான் பிறந்த நாளான ரத சப்தமி நாளில் திருமலையில் 7 விதமான வாகனங்களில் ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான மலையப்பர் மாட வீதியில் வலம் வருவது வழக்கம். அதன்படி, சனிக்கிழமை ரத சப்தமி உற்சவத்தையொட்டி, உற்சவருக்கும், ஏழுமலையானுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. காலை 5.30 மணிக்கு மலையப்பர் முதல் வாகனமான சூரியப் பிரபை வாகனத்தில் ஆதி நாராயணராக மாட வீதியில் வலம் வந்தார்.
 கிழக்கு மாடவீதியில் திருக்குளத்துக்கு அருகே சூரிய உதயத்துக்காக வாகன சேவை நிறுத்தப்பட்டது. அப்போது சூரியன் தன் செங்கதிர்களைப் பரப்பி மேல் எழும்பி மலையப்பரின் பாதம், நாபி, சிரசு ஆகியவற்றில் ஒளி வீசினார். அந்த நேரத்தில் மலையப்பருக்கு கற்பூரஆரத்தி, கும்ப ஆரத்தி உள்ளிட்டவை சமர்ப்பிக்கப்பட்டன. இதைக் காண அதிகாலை முதல் மாட வீதியில் பக்தர்கள் திரண்டனர். அப்போது சூரிய காயத்ரி, சூரிய நாராணய அஷ்டகம், ஆதித்ய ஹிருதயம் உள்ளிட்டவை பாராயணம் செய்யப்பட்டன.
 அதன்பின், சின்னசேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம் உள்ளிட்டவற்றில் மலையப்பர் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின்னர், மதியம் 2 மணிக்கு திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் குளத்தில் புனித நீராடினர். பின்னர், மாலை 4 மணிக்கு மீண்டும் கல்ப விருட்ச வாகனம், 6 மணிக்கு சர்வபூபால வாகனம் ஆகியவற்றில் தன் நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் எம்பெருமான் மாடவீதியில் வலம் வந்தார்.
 நிறைவாக, இரவு 8 மணிக்கு சந்திரப் பிரபை வாகனத்தில் வலம் வந்தார். ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்பர் மாடவீதியில் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பக்தர்கள், திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 இந்த ஏழு வாகனச் சேவைகளையும் காண பக்தர்கள் மாடவீதியில் உள்ள அரங்குகளில் நாள் முழுவதும் காத்திருந்தனர். அவர்களுக்கு 24 மணிநேரமும் தேவஸ்தானம் சாப்பாடு, குடிநீர், காபி, தேநீர், பால் உள்ளிட்டவற்றை வழங்கியது.
 மேலும், வெயில் மற்றும் குளிரிலிருந்து பக்தர்களைப் பாதுகாக்க அரங்குகள் முழுவதும் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டன. ரத சப்தமியையொட்டி, ஆர்ஜித சேவைகள், விஐபி பிரேக் தரிசனம், இலவச முதன்மை தரிசனங்கள் உள்ளிட்டவற்றை ரத்து செய்தது.
 மேலும், திருமலை முழுவதும் அழகிய மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாகன சேவையின்போது, 37 குழுக்களைச் சேர்ந்த 750 கலைஞர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
 இதேபோல், திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில், திருப்பதி கோவிந்தராஜர் கோயில், கார்வேட்டி நகரம் வேணுகோபாலர் கோயில், நாகலாபுரம் வேதநாராயணர் கோயில், நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் ஆகியவற்றிலும் ரத சப்தமியையொட்டி, 7 வாகனங்களில் உற்சவர்கள் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT