ஜோதிடம் அவ்வளவு முக்கியமா, அதை ஏன் பார்க்க வேண்டும்?

இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிவதற்கு முன்னரே, நமது ரிஷிகளும், முன்னோர்களும்..
ஜோதிடம் அவ்வளவு முக்கியமா, அதை ஏன் பார்க்க வேண்டும்?

இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிவதற்கு முன்னரே, நமது ரிஷிகளும், முன்னோர்களும் கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளனர் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம். அந்த கிரகங்களின் இயக்கத்தினை நன்கு அறிந்திருந்த நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த ஜோதிடம் எனும் தெய்வீக கலை. ஜோதிடத்தைக்கொண்டு ஒரு ஜாதகரின் விதியை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். அப்படி தெரிந்து கொள்ளும் அந்த விதியில் ஒரு சில விஷயங்கள் அந்த ஜாதகருக்கு சாதகமாக இல்லையே என தெரிய வரும் போது, அதனை ஏதேனும் ஒரு பரிகாரம் மூலம் மாற்றமுடியுமா என்கிற கேள்வி எழும்.

விதி என்கிற ஒரு ஜாதகர் தனது வாழ்நாளில் அனுபவிக்கக்கூடிய யோக மற்றும் அவயோகங்களை (யோகமற்ற நிலை) பற்றி, அதாவது அந்த ஜாதகர் அனுபவிக்கக் கூடிய நல்ல மற்றும் தீய பலன்களாகிய, ஜாதகரின் வாழ்க்கை முறைகளைப் பற்றித் தெரிவிப்பதுவே ஆகும். விதியை எவராலும் மாற்ற முடியாது. விதி என்பது இறைவனால் நமது கர்ம வினைகளுக்கு (நாம் செய்யும் நல்லது கெட்டதுக்கு) ஏற்ப வகுக்கப்படுவது. அதனை உலகில் எவராலும் மாற்றவே முடியாது. அந்த வித்தியானதை, ஒரு குழந்தை இந்த பிரபஞ்சத்தில் வந்து பிறக்கின்ற பொழுதே, வானமண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளைப் பொறுத்தே அந்த குழந்தையின் விதி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த விதிப்படி தான் அந்த குழந்தையின் வாழ்க்கை முறை அமையும். இதனை சுருங்க சொன்னால், ஒருவரின் விதி என்பது, முழுக்க முழுக்க அவரின் பூர்வ புண்ணிய / பாவ அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்படுகிறது. 

விதியை மதியால் வெல்லலாம், விதியை வெல்லவே முடியாதா! விதி வழியே மதி செல்லும் போன்றவை தோன்றவே செய்யும். அதன் அர்த்தம் என்ன என்கிற வினா, நம்முள் தோன்றுவது இயற்கை தான். ஒரு ஜாதகர் தாம் பிறந்த பொழுது வான் மண்டலத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் மேல் பயணிக்கிறதோ / சென்று கொண்டிருக்கிறதோ, அது தான் அந்த ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் ஆகும். அந்த ஜென்ம நட்சத்திர அதிபதியின் தசையே அந்த ஜாதகருக்கு ஆரம்ப தசையாக அமையும். இதனைத் தொடர்ந்து மற்ற கிரகங்கள், ஒரு குறிப்பிட்ட வரிசையில், தத்தமது தசையை நடத்தும். சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் இந்த தசையைத் தான் மதி (சந்திரனின் வேறு பெயர்) என்று சுருக்கமாக நமது முன்னோர்கள் அழைத்தனர். 

ஒரு ஜாதகத்தில், 7ஆம் பாவம் என்பது, ஒரு ஜாதகரின் வாழ்க்கை துணை (ஆண் ஜாதகர் எனில் மனைவி, பெண் ஜாதகர் எனில் கணவர்) மற்றும் திருமண வாழ்க்கையைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கும். அதே போல ஆண் ஜாதகத்தில், சுக்கிரன் களத்திர காரகராகவும், பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் களத்திர காரகராகவும் வருவார்கள். களத்திர காரகர் என்றால் வாழ்க்கைத் துணை மற்றும் திருமண வாழ்வு பற்றித் தெரிவிக்கும் கிரகம் ஆகும்.

விதிவழியே மதி செல்லும், என்பது எவ்வாறு?

பொதுவாக ஒரு ஆண் ஜாதகருக்கு, பாவத்தில் 7-ஆம் பாவமும், கிரகத்தில் சுக்கிரனும் 6, 8, 12 போன்ற கொடிய பாவங்களை தொடர்புகொண்டு கெட்டிருந்தால், திருமண வாழ்க்கை அமைவதே கேள்விக்குறிதான். என்பதனை விதி மூலம் எளிதாக அறிந்துகொள்ளலாம். இந்த 7-ஆம் பாவ உப நட்சத்திர அதிபதியாக வரும் கிரகத்தின் தசையோ அல்லது சுக்கிரனின் தசையோ நடப்பில் இருந்தால் (மதி வழியாக தொடர்பானால்) நிலைமை இன்னும் மோசமானதாக இருக்கும். இங்கே தசாநாதன் என்கிற மதியும் கெட்டுப்போன மாதிரி ஆகிவிடும். இதைத்தான் விதி வழியே மதி செல்கிறது என்பர். ஆனால், நமது மக்கள் விதி வழியே மதி, அதாவது புத்தி செல்கிறது என்பர்.

விதியை, மதியால் வெல்லலாம் எவ்வாறு?

ஆனால், மேலே சொன்னதற்கு மாறாக, 7-ஆம் பாவ உப நட்சத்திர அதிபதியாக உள்ள கிரகம் மற்றும் சுக்கிரனைத் தவிர மற்ற 7 கிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகம் திருமணத்திற்கு சாதகமான 1, 3, 5, 7, 9, 11 போன்ற பாவங்களைத் தொடர்பு கொண்டு தசை நடத்தும் பொழுது என்ன தான் திருமணத்திற்கான விதி (மேலே சொன்ன 7-ம் பாவம் மற்றும் சுக்கிரன் பாதகமான நிலையில் இருந்தாலும் கூட மதி என்கிற நடப்பு தசை நாதனாக வரும் கிரகம் திருமண வாழ்க்கைக்கு சாதகமாக இருக்கின்ற காரணத்தால், விதியில் உள்ள அந்த தீய பலன்களை தற்காலிகமாக நிறுத்தி அதாவது அந்த கிரகத்தின் தாச காலத்தில் மட்டும், மகிழ்ச்சிகரமான திருமண வாழ்க்கையைத் தரவல்லது. இதைத் தான் விதியை மதியால் வெல்லலாம் என்பதாகும்.

எல்லாம் வல்ல இறைவன், எவருக்கும் தீமையான பலன்களை அவ்வளவு எளிதில் கொடுப்பதில்லை. இது முழுக்க முழுக்க அவரவர் கர்மா வினைகளைப் பொறுத்தே அமைகிறது. அதனை ஒவ்வொருவரும் அனுபவித்தே ஆகவேண்டும்.

பரிகாரம் என்பது என்ன? அவைகளை செய்வதால் நம் பிறந்த  ஜாதக கட்டத்தில் உள்ள பாதிப்பு தரும் கிரக நிலைகள், பாதிப்பற்ற நிலைக்கு மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

ஒரு ஜாதகர் ஒரு ஜோதிடரை அணுகுகிறார். அவர் அந்த ஜோதிடரிடம் தாம் தற்போது வேலை செய்யும் கம்பெனியை விட்டு ஏதாவது சொந்த தொழில் செய்யலாம் என வினவுகிறார் எனக் கொள்வோம். 

ஜோதிடத்தில், 6ஆம் பாவம் என்பது ஜாதகர் செய்யும் உத்தியோகத்தைக் குறிக்கும், 7ஆம் பாவம் என்பது சொந்தத் தொழிலைக் குறிக்கும். இவ்விரு பாவங்களில் எந்த பாவம் புறம் சார்ந்த 2, 4, 6, 10 போன்ற இரட்டைப்படை (பொருளாதாரத்திற்குச் சாதகமான) பாவங்களை வலுவாக தொடர்புகொள்கின்றதோ அதனை ஒரு ஜாதகர் செய்வதே ஏற்புடையது ஆகும். அதாவது ஒருவருக்கு, 6 ஆம் பாவத்தை விட 7ஆம் பாவம் அதிக வலுவுடன் காணப்பட்டால், சொந்தத்தொழில் செய்யக் கொடுப்பினை உள்ளது எனலாம். ஆனால் அதற்கு மாறாக 6ஆம் பாவம் வலுத்திருந்தால், உத்தியோகம் செய்வது தான் சிறந்தது. இது தான் ஒரு ஜாதகர் செய்யும் சிறந்த பரிகாரம் ஆகும். பரிகாரம் என்பது, மாற்றுச் செயல் என்பது தான் சரியான பொருள் ஆகும். மேற்படிக்கூறிய கருத்துக்களை, ஒரு தலைசிறந்த ஜோதிடரின் வாயிலாக அறியும் போது, நிச்சயம் ஆவர் ஒரு நல்ல வழியைக் காட்டுவார். ஆனால், அதற்கும் ஒருவரின் ஜாதகத்தில் தெய்வத்தின் கொடுப்பினை இருக்கவேண்டும். அப்படி இருப்பவர்க்கே சரியான பலன்களைப் பெற்று வாழ்வில் நலமுடன் வாழ முடியும். 

சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம். 

- ஜோதிட ரத்னா தையூர்.சி.வே.லோகநாதன்

தொடர்புக்கு : 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com