மஹாளய பக்ஷம்: மறந்ததை மாஹளயத்தில் கொடுத்து மகிழ்ச்சியடைவோம்!

தக்ஷிணாயன புண்ய காலத்தில் புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய..
மஹாளய பக்ஷம்: மறந்ததை மாஹளயத்தில் கொடுத்து மகிழ்ச்சியடைவோம்!

தக்ஷிணாயன புண்ய காலத்தில் புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய பக்ஷம் எனம் புண்ணியகாலம்  நாளை (14/09/2019) சனிக்கிழமை முதல் தொடங்குகிறது. இந்த பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை. இந்த காலங்களில் இராமேஸ்வரம், திருவெண்காடு, கோடியக்கரை, வேதாரண்யம், திருப்பூவனம் காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர், சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோவரணம் போன்ற இடங்களிலும் பவானி கூடுதுறை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் ஆலயம், மற்றும் ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் மற்றும் சிரார்தங்கள் செய்வது சிறப்பு.

காருண்யா பித்ருக்கள்

"மறந்தவனுக்கு மாஹளயத்தில் கொடு" என்ற பேச்சுவழக்கினைக் கேட்டிருப்போம். இறந்துபோன நம் பெற்றோர்கள் மட்டுமல்லாது, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமன், மாமி, சகோதரன், சகோதரி, ஆசிரியர், சிஷ்யன், நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள்,  நாம் அறிந்தவர்களில் இறந்துபோன எல்லோரையும் திரும்ப நினைவிற்குக்கொண்டு வந்து அவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது அனைத்து ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளயபட்ச விரத நாட்களில் தான். இவர்கள் 'காருண்ய பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்''. 

சந்ததிகளை ஆசீர்வதிக்க வரும் முன்னோர்கள்

நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. பித்ருக்கள் பக்ஷமான ஆடி மாதத்தில் பித்ருக்கள் தங்களின் சந்ததிகளை ஆசீர்வதிக்கப் பூலோகத்திற்கு வருவதாகவும் பின் உத்தராயண புண்ய காலத்தில் தை அமாவாசையில் பித்ரு லோகம் செல்வதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். பித்ரு தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பித்ரு தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம் என்பதும், பித்ரு கடன் செய்வதனால் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறும் என்பதும், பித்ரு கடன் செய்யாது இருந்தால் பித்ரு தேவதைகள் சபித்து விடுவார்கள் என்பதும் காலம் காலமாக இந்துக்களின் நம்பிக்கை. 

அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நின்று கொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டால் பித்ருக்கள் வருத்தப்படும்போது அது பித்ரு தோஷமாக சந்ததியரின் ஜாதகத்தில் அமைகிறது. 

மஹாளய பக்ஷம்

மஹாளயம் என்றால் கூட்டமாக வருதல். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மஹாளய பக்ஷம். "பக்ஷம்' என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15 நாட்கள் (சில சமயங்களில் 14 அல்லது 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பக்ஷம். இது புரட்டாசி மாத பௌர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மஹாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது. மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிரார்த்தம் முதலியன செய்வோம். ஆனால், மஹாளயபக்ஷ காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து தர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காண வரும் காலமே இந்த மஹாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது. இந்த பதினைந்து நாட்களும் முன்னோர்களின் நினைவாக சுபநிகழ்வுகளைத் தவிர்த்து அவர்களுக்குரிய சிரார்த்தம், தர்ப்பணம் ஆகியவற்றைச் செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும் என்பது நம்பிக்கை. 

மஹாளய தர்ப்பணம் ஏன் செய்யவேண்டும்?

கர்ணன் மகாபாரத போரில் கொல்லப்பட்ட பிறகு, உரிய மரியாதைகளோடு யமன் அவரை அழைத்துக் கொண்டார். யமன் கர்ணனிடம் நீ நிறைய புண்ணியங்களை செய்ததால் சொர்கத்தை நான்றாக அனுபவித்துக்கொள் என்றார். கர்ணன் மகிழ்வுடன் சொர்கத்தை அனுபவிக்கிறார். சில காலம் கழித்து அவருக்கு பசிக்கிறது. தன்னுடன் உள்ளவர்களிடம் உணவு பரிமாறும் இடம் எங்கே என்று கேட்கிறார். சொர்க்க வாசிகள் திகைப்படைந்து, அவரிடம் இங்கிருப்பவர்களுக்கு பசிக்காது அதனால் உணவு உண்ணும் தேவையே இருக்காது என்கிறார்கள்.

தேவ குரு பிரகஸ்பதி நடப்பனவற்றை கவனித்து விட்டு, ஆழ்ந்த தியானத்தில் இதற்கான விடையைக் கண்டுபிடிக்கிறார். பிறகு கர்ணனிடம் வந்து கர்ணனின் ஆட்காட்டி விரலை சுவைக்க சொல்கிறார். கர்ணன் ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்துவிடுகிறது. கர்ணன் மிகவும் வியப்படைந்து இதற்கான காரணம் என்ன என வினவுகிறார்.

குரு, "கர்ணா! பிறப்பால் நீ ஒரு வள்ளல். நீ யார் எதை கேட்டாலும் உடனே கொடுத்து விட்டாய். ஆனால் நீ அன்னதானம் மட்டும் செய்யவில்லை, அதனால் தான் நீ இங்கே பசியை உணர்ந்தாய்". ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டதே ஏன்? எனக் கேட்கிறார் கர்ணன். குரு விளக்குகிறார்: "கர்ணா, ஒரு முறை ஒரு ஏழை பிராமணர் உன் வீட்டிற்கு வந்து உணவு கேட்டார். நீ பொதுவாக அன்னதானம் செய்யும் வழக்கம் இல்லாததால் அதை மறுத்துவிட்டாய், ஆனால் உன் ஆட்காட்டி விரலால் அன்னதானம் நடக்கும் இடத்தை அந்த ஏழை பிராமணருக்கு காட்டினாய். அவரும் அங்கே சென்று சாப்பிட்டு தன் பசியை ஆற்றிக்கொண்டார். அந்த புண்ணியம் உன் ஆட்காட்டி விரலில் இருந்ததால் நீ ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டது."

கர்ணன் கண்களில் நீர் திரண்டு விட்டது. உடனே யம தர்ம ராஜனிடம் சென்று முறையிடுகிறார். நான் ஒரு பட்ஷம் (பதினைந்து நாள்) மனித உடலுடன் பூலோகம் செல்ல அனுமதி வேண்டும், நான் போய் அன்னதானம் செய்து விட்டு வருகிறேன் என்கிறார். யமதர்ம ராஜனும் அனுமதிக்கிறார். கர்ணனும் பூலோகம் வந்து யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத இடத்தில் அன்னதானம் செய்கிறார். கர்ணன் மிகவும் நல்ல நோக்கத்துக்காக இதை மகிழ்வுடன் செய்கிறார். பதினைந்து நாட்கள் முடிந்தவுடன் யமன் மீண்டும் வந்து மனித உடலை துறந்து விட்டு சொர்கம் வரச் சொல்கிறார். கர்ணன் மகிழ்வுடன் செல்கிறார்.

யமன் கர்ணனிடம் "மனிதர்கள் பூலோகத்தில் உள்ள சுகங்களை அனுபவிக்கவே மீண்டும் மீண்டும் பூலோகம் வர வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் நீங்கள் எதற்காக மனித உடலுடன் பூலோகம் வந்தீர்களோ அதை முழுமையாக முடித்து விட்டு, உங்கள் வார்த்தைகளை காப்பாற்றி விட்டீர்கள். நீங்கள் இப்போது ஒரு வரம் கேட்கலாம்" என்கிறார். கர்ணன், யம தர்ம ராஜரே! மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, உணவு அளிக்க மறந்து விடுகிறார்கள். அதனால் இந்த பக்ஷத்தில் முன்னோர்களுக்காகச் செய்யும் திதி, மற்றும் அன்னதானம் கர்மங்கள் செய்ய சந்ததி இல்லாத முன்னோர்களைக் கூட சென்று அடைய வேண்டும். கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்கத்துக்கும் இடையில் தவிக்கும் முன்னோர்களையும் இந்த பலன் சென்றடைய வேண்டும் எனக் கேட்கிறார்." யமன் மகிழ்வுடன் ஒப்புக்கொள்கிறார்.

யார் இந்த பக்ஷத்தில் உணவு அளிக்கிறார்களோ அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள். உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால், அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மஹாளயபக்ஷ காலத்தில், நாம் எல்லோருமே முன்னோர்களை வரவேற்று 14 நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும். கடைசி நாளான மஹாளய அமாவாசையன்று முன்னோருக்கு சிரார்தங்கள் செய்து பிராமணர்களுக்கு போஜனமளித்து ஆசி பெறவேண்டும். மஹாளயபக்ஷ காலத்தில், நம் முன்னோருக்காக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்குக் கிடைக்கும். நமக்கு மட்டுமின்றி, உலகிலுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்பது ஐதீகம்

மஹாளய பக்ஷத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்

பிதுர்காரகனான சூரியனும், மாதுர்காரகனான சந்திரனும் விஷ்ணு லோகம் என்று கருதப்படும் கன்னி இராசியில் ஒன்றிணையும்போது வரும் அமாவாசையே மஹாளய அமாவாசை. பிற மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் முன்னோரை வணங்க மறந்தவர்களும், சந்தர்ப்பம் சரியாக அமையாதவர்களும் கூட இந்தப் புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்ய, பிதுர்தோஷம் முற்றிலுமாக நீங்கி புண்ணியம் அடைவர்.

எனவே, மஹாளய பக்ஷம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான். ஒட்டுமொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூற வேண்டும். தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும்.

நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாற்றைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர், தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்பு உள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை. அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிரார்த்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.

இலவச சேவை

இந்த மஹாளய பக்ஷ தினங்களில் தங்கள் முன்னோர்களின் திதி எந்த நாளில் வருகிறது என அறிய வேண்டுமா? தங்கள் முன்னோர்களின் இறந்த தேதி, இறந்த நேரம் ஆகிய விவரங்களை எமது வாட்ஸ் அப் எண்ணிற்கு (9841595510) அனுப்பிவைத்தால் உங்களுக்கு முன்னோர்களின் திதி விவரங்கள் அனுப்பிவைக்கப்படும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன் 

Mobile 9498098786
WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com