செய்திகள்

வேளாங்கண்ணியில் இன்று மாலை அலங்காரத் தேர் பவனி

7th Sep 2019 12:01 PM

ADVERTISEMENT

 

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி சனிக்கிழமையான(செப்.7) இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, பக்தர்களின் வருகையால் களைகட்டியுள்ளது வேளாங்கண்ணி. 

எண்ணற்ற மகிமைகளையும், ஆன்மிகப் பெருமைகளையும் கொண்ட வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  

ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சியாக தினமும் பகல் 12 மணிக்கு மாதா கொடியேற்றமும், பல மொழிகளில் திருப்பலி, ஜெபமாலை, திவ்யநற்கருணை ஆசீர் என பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.  ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான புனித ஆரோக்கிய அன்னையின் அலங்காரத் தேர் பவனி இன்று இரவு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இன்று மாலை 5.15 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. அதைத் தொடர்ந்து நடைபெறும் சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், அலங்காரத் தேர் பவனி நடைபெறுகிறது. 

பேராலய ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றத்திலும், அலங்காரத் தேர் பவனியிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம் என்ற வகையில், கடந்த 2 நாள்களாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், சுற்றுலா வாகனங்கள் மற்றும் பேருந்துகள், ரயில்கள் மூலமாகவும் வந்து கொண்டிருப்பதால், வேளாங்கண்ணி பகுதி பக்தர்களால் நிரம்பியுள்ளது.

பாத யாத்திரை பக்தர்களுக்காக நாகை, காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களின் பல பகுதிகளில் தன்னார்வ அமைப்புகள் சார்பில் குடிநீர், நீர் மோர் வழங்கப்பட்டன. 

பலத்த பாதுகாப்பு....

திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் வி. வரதராஜூ மேற்பார்வையில், தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத் தலைவர் ஜெ. லோகநாதன், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜசேகரன் ஆகியோர் தலைமையில், சுமார் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

Tags : வேளாங்கண்ணி velankanni temple velankanni temple festival
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT