செய்திகள்

காஞ்சிபுரம் சிவன் ஸ்தலங்கள்: 3. எழுச்சூரில் நல்லிணக்கேஸ்வரர்

7th Sep 2019 01:30 PM | - ஜோதிட சிரோன்மணி தேவி

ADVERTISEMENT

 

எழில்மிகு அழகிய எழுச்சூரில் எம்பெருமான் சுயம்பு லிங்கமாக நல்லிணக்கேஸ்வரர் மற்றும் அம்பாள் தெய்வநாயகி அழகாக வீற்றியிருக்கிறாள். இந்த கோவிலுக்கு அனைவராலும் போகமுடியாது அதற்கும் கொடுப்பனை வேண்டும். நான் இந்த கோவிலுக்குப் பல வருடங்கள் நினைத்தும் போகமுடியாமல் 2017 ஒரு பிரதோஷ நாளில் அங்கு இருக்கும் எம்பெருமானை தரிசித்தேன்.  இங்குள்ள அனைத்து சிலைகளும் நம்மோடு நன்றாகப் பேசக் கூடியது அவ்வளவு அழகான நுணுக்கமான சிற்ப வேலைப்பாட்டுடன்  காணப்படுகிறது. ஏறத்தாழ இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கோயில் அமைந்துள்ளது.

நாம் செல்லும் அனைத்து பழமையான புராதன சிவன் கோவில்கள் முக்கிய சிறப்பம்சம் கொண்டது. இந்த ஆலயத்தின் முக்கியத்துவம் என்னவென்றால் 1200 வருடங்களுக்கு மேலாக கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் பலகாலங்களுக்குப் பிறகு இந்த கோவில் புனரமைக்கப்பட்டது. 1948 வரை புதராக அடர்ந்த காடாக காட்சியளித்த இந்த  ஆலயத்தை மக்கள் சிலர் இந்த ஆலயத்தை சரிசெய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆலயம் புதுப்பிக்க சிவபெருமான் ஒருவர் கனவில் தோன்றி பின்பு அந்த ஆலயத்தைக் கண்டுபிடித்து 2012ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த கோவிலில் 31 மஹான்களின் சமாதிகள் புதையுண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அகத்தியர்  சூரியன் மற்றும் பல சித்தர்கள் இங்குவந்து வணங்கியதாக ஒரு ஐதீகம் உண்டு.  

காஞ்சிபுரம் சிவன் ஸ்தலங்கள்: 1. திரிசூலநாத சுவாமி திருக்கோயில்

ADVERTISEMENT

நல்லிணக்கீஸ்வரர் 5 அடி உயரம் கொண்ட உயர லிங்கமாக அருள் பாலிக்கிறார். அனைவரின் மனதில் இந்த எழுச்சியும் நல்லிணக்கமும் அவசியம் என்பதை உணர்த்தி  அருள்பாலிக்கிறார் நம் நல்லிணக்கீஸ்வரர். இந்த பெரிய ஆவுடையார்  லிங்கமுடன் பிரம்மாண்டமாக மூலவர் கம்பீரமாகக் கிழக்கு நோக்கிக் காட்சி அளிக்கிறார். சிவனின்   இடது புறம் தெற்கே பார்த்தபடி நின்ற கோலத்தில் தெய்வநாயகி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். இந்த விக்கிரகத்தின் கால் விரல்கள் மற்றும் நகங்கள் அனைத்தும்  உயிரூட்டும் சிற்ப வேலைகள் தத்ரூபமாக உள்ளது.

காஞ்சி மட தொடர்பு: காஞ்சிக்கும் எழுச்சூர் ஆலயத்துக்கும் ஏராளமான தொடர்புகள் இருந்துள்ளன எப்படி என்று கேட்கிறீர்களா? விஜய நகரப் பேரரசின் மன்னன்  வீரநரசிம்மா கி.பி. 1429-ம் வருடம் காஞ்சிப் பகுதியில் உள்ள எழுச்சூர் உட்பட சில கிராமங்களை காஞ்சி காமகோடி மடத்தைச் சேர்ந்த 54வது பீடாதிபதி ஸ்ரீ வ்யாஸாசால  மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு தானமாக வழங்கியது பற்றி ஒரு செப்பு பட்டயம் காஞ்சி மடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு அதிஷ்டானம் தனியாக  உள்ளது. இதன் பின்னர் மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சில காலத்துக்கு இந்த எழுச்சூரில் நல்லிணக்கீஸ்வரர் ஆலயத்திலேயே தங்கியிருந்து, முக்தி அடைந்தார்  என்றும் சொல்லப்படுகிறது. பெரியவாவின் மனதில் குடியிருக்கும் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் விக்ரஹமும் இங்கே பிரதிஷ்டையாகி இருக்கிறது. அதோடு இந்த ஆலயம்  மிகவும் பழுதடைந்து இருப்பதைக் கேள்விப்பட்ட மகா பெரியவா, தன் சிஷ்யர்கள் சிலரிடம் இந்த ஆலயம் சீரமைக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி எழுச்சூருக்கு  அனுப்பி ஆலயத்தைப் புதுப்பிக்க உதவ முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.  

ஆலயத்தின் முக்கிய சிறப்புகள்

ரஜோகுண நந்தி:

இதில் ஒன்று 3 அடி உயர சிவனின் நிறைய ஆடை ஆபரணம் அணிந்த நந்தி சிலையில், நாக்கு, அதன் மூக்கை தொட்டவாறும், மழுங்கின கொம்பு,  கூரான காதுகள், கழுத்தில் மணி, சலங்கை, ருத்ராக்ஷ மாலை, நெற்றிச் சுட்டி, இடுப்பில் ஒட்டியாணம், மூக்கணாங்கயிற்றுடன் நந்தி யோக நிலையில் தத்ரூபமாகச்  செதுக்கப்பட்ட, மஹா பெரியவருக்கு பிடித்த நந்தி இது. நந்தி பிராணாயாமம் செய்து கொண்டிருப்பதை அவரது நாக்கு வலது நாசியை மூடியபடி காலை வயிற்றுக்குக் கீழே  அழுத்தி நந்தியின் காலும் வாலும் நந்தியின் இடது பக்கம் வெளியே வாலின் நுனியோடு தெரியும்படி மடக்கி அமர்ந்துள்ளார். அங்கு காயத்ரி மந்திரம் சத்தம் உச்சரிப்பு  கேட்பதாகக் கூறப்படுகிறது.

இதில் ஒரு அதிசய விசேஷம் ஒவ்வொருநாளும் ஒரு பெரிய கால சர்ப்பம் உச்சி வேளையிலும் அர்த்தஜாமத்திலும் சிவனை தரிசிக்க வருகிறது. தினமும் இரண்டு தடவை  அந்த பெரிய நாகம் விஜயம் செய்வதாக திரு ராமமூர்த்தி அர்ச்சகர் சொல்லி விபூதி பிரசாதம் கொடுத்தார். அது சர்ப்ப தோஷ நிவாரணியாகச் செயல்படுகிறது.

ஒரே கல்லில் ஆறுமுகப் பெருமான் தேவ மயில் மீது அமர்ந்து ஒரு காலைத் தொங்க விட்டுக் கொண்டும், வர முத்திரையும், மற்றொரு காலை மடக்கி வைத்துக்  கொண்டும் ஆயுதங்களுடன் தேவ மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சாந்த ரூபத்தில் முருகர்  இருப்பதால் சூரசம்ஹாரம் கிடையாது திருக்கல்யாணம் புஷ்பாஞ்சலி பூஜை மட்டும் நடைபெறும் முருகர் வடக்குநோக்கி குளத்தை பார்த்தவண்ணம் இருப்பது முக்கிய விசேஷம். அவருக்கு எதிரில் அதீத சக்திகளை கொண்ட அதிசயம் குளம் தாமரை புஷ்கரணி, சிவன் குட்டை மற்றும் கமல தீர்த்தம் என்ற பெயரில் அழகாக உள்ளது. இங்கும் பூஜைகள் மற்றும் நாக தோஷ பரிகாரங்கள் செய்யப்படுகிறது.  

விசேஷ ஸ்தல விருட்சங்கள்

இந்த ஆலயத்தின் விருட்சங்கள் பஞ்சபூதமடங்கிய வில்வம், அழிஞ்சல் மரம், ஆறு தலைமுறை தாண்டிய ஒரு பெண் பனைமரம் மற்றும் தட்சிணாமூர்த்தி தவமிருக்கும் கல்லால மரம் (மருத்துவ சித்தர் ஜீவசமாதி) உள்ளது. இந்த சிரஞ்சீவி அழிஞ்சல் மரம் (ஏறழிஞ்சில்) பௌர்ணமி, அமாவாஸ்யா சமயத்தில் விதைகள் மரத்தில் கிளையில் திரும்பவும் ஒட்டிக்கொள்ளும் இது ஒரு அதிசயம். பிரதோஷ காலங்களில் குழந்தை இல்லாதவர்கள் இந்த பெண் பனைமரம் தொட்டில் காட்டுவார்கள் மற்றும் மாங்கல்ய பேறு கிட்ட இந்தமரத்தில் மாங்கல்ய கயிறு காட்டுவார்கள்.

காஞ்சிபுரம் சிவன் ஸ்தலங்கள்: 2. திருக்கச்சூர் விருத்திட்ட ஈஸ்வரர் மற்றும் ஒளஷதபுரீஸ்வரர்

ஆகமவிதிப்படி வழித்துணை விநாயகர், பிரகாரத்தில் துர்கா, மஹாலக்ஷ்மி, தக்ஷிணா மூர்த்தி, சுப்பிரமணியர், பிரம்மா, சண்டிகேஸ்வரர், வள்ளலார்,  மகாவிஷ்ணு மற்றும்  தாயார் விக்கிரகங்கள் கருடாழ்வார், ஆஞ்சநேயரோடு ஆகியோரும் இருக்கிறார்கள். பிரதோஷம், சிவராத்திரி வழிபாடுகள் மற்றும் நாக தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷ நிவாரணி கோவில். திருமணத் தடை, குழந்தை பாக்கியம் பெற, சங்கீதம் கற்க, கணவன் மனைவி ஒற்றுமையாக வாழவும், நல்ல குரல் வளம் வேண்டுவோர் (பாடகர்கள்), பேச்சாளர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்யலாம்.

திறக்கும் நேரம்: காலை 6 மணி - 12.30 வரை, மாலை 4 - இரவு 8 மணி வரை

இருப்பிடம்: தாம்பரம் - காஞ்சிபுரம் வழியில், நேரே படப்பை தாண்டி போனால் ஒரகடம் ஜங்ஷன் அருகில். அங்கே மஹாமேரு த்யான நிலையம் வரும். அங்கிருந்து 3  கி.மீ தூரத்தில் எழுச்சூரில் நல்லிணக்கேஸ்வரர் சிவன் கோவில்.

போன்: 94443 49009, 94425 55187, 93806 34880

குருவே சரணம் 

- ஜோதிட சிரோன்மணி தேவி

தொலைபேசி : 8939115647

Tags : Sri Nallinaikeshwarar temple Ezhichur நல்லிணக்கேஸ்வரர் எழுச்சூர் காஞ்சிபுரம் சிவன் ஸ்தலங்கள் Nallinakka Eswarar Temple
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT