செய்திகள்

முடி காணிக்கை வருமானம் ரூ.7.69 கோடி

7th Sep 2019 03:06 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் முடி காணிக்கை வருமானம் ரூ.7.69 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை தேவஸ்தானம் ரகம் வாரியாகத் தரம் பிரித்து இணையதள ஏலம் மூலம் விற்று வருகிறது. இந்த ஏலம் மாதந்தோறும் முதல் வியாழக்கிழமை மாலை தேவஸ்தான செயல் இணை அதிகாரி பசந்த்குமார் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. 
அதன்படி வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஏலத்தில் 17,200 கிலோ தலைமுடி விற்பனையானதில் தேவஸ்தானத்திற்கு ரூ.7.69 கோடி வருமானம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உண்டியல் காணிக்கை ரூ.2.87 கோடி
திருப்பதி, செப். 6: திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.2.87 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி வியாழக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.2.87 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.38.82 லட்சம் நன்கொடை
திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பலவித வசதிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.23.82 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம்,  ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம், கல்வி தானம் அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம், வேதபரிரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.38.83 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

66,622 பேர் தரிசனம்
திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 66,622 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
26,270 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 7 அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர். அவர்கள் 6 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசித்தனர். நேர ஒதுக்கீடு டோக்கன், ரூ.300 விரைவு தரிசனம், திவ்ய தரிசன பக்தரகள் 3 மணிநேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினர்.  
வியாழக்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி கோயிலில் 7,532 பக்தர்களும்,  சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி கோயிலில் 4,850 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 15,773 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் 1,104 பக்தர்களும், கபில தீர்த்தத்தில் உள்ள கபிலேஸ்வர ஸ்வாமி கோயிலில் 2,408 பக்தர்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.
சோதனைச் சாவடி விவரம்: அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி புதன்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் வியாழக்கிழமை நள்ளிரவு 11.59 மணிவரை 69,026 பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்துள்ளனர். 9,167 வாகனங்கள் சோதனைச் சாவடியை கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ.2.03 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.17,923 வசூலாகியதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT