செய்திகள்

நாளை சிவபெருமான், வரதராஜப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

7th Sep 2019 03:13 AM

ADVERTISEMENT


குடியாத்தம் செதுக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள், ஞானாம்பிகை சமேத ஜோதீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. 
செதுக்கரையில் 500 ஆண்டுகளுக்கு முந்தைய சிவபெருமான் கோயில் சிதிலமடைந்து காணப்பட்டது. இக்கோயிலில் இருந்த சிவலிங்கத்தை அப்பகுதி மக்கள் அருகில் பாழடைந்த நிலையில் இருந்த வரதராஜ பெருமாள் கோயிலில் வைத்து பூஜை நடத்தி வந்தார்களாம்.
15 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி மக்கள் இரு கோயில்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை வேலூர் மாவட்டம் ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் ஜில்லாவில் இருந்தது தெரிய வந்தது. 
இதையடுத்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று கோப்புகளை ஆராய்ந்தபோது அவை ஞானாம்பிகை சமேத ஜோதீஸ்வரர் கோயில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோயில்கள் என தெரிய வந்தது.
இதையடுத்து அப்பகுதி மக்கள், கோயில்களை புனரமைக்க முடிவு செய்து ஒரே இடத்தில் சுற்றுச்சுவர் அமைத்து சுமார் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் இரு கோயில்களையும் கட்டி முடித்துள்ளனர். 
ஜோதீஸ்வரர் கோயிலில், விநாயகர், முருகர், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை சிலைகளையும், மூலவர் சந்நிதானத்தில் பார்வதி, சிவபெருமான் சிலையையும் அமைத்துள்ளனர். 
வரதராஜப்பெருமாள் கோயிலில் வராகமூர்த்தி, லட்சுமி ஹயக்ரீவர்,  நரசிம்மர், கருடாழ்வார் சிலைகளையும் அமைத்துள்ளனர். 
ஞாயிற்றுக்கிழமை இரு கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையடுத்து, கோயில் அருகே தனித்தனியே 2 யாகசாலைகளை அமைத்துள்ளனர். 
யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை காலை கோ- பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலை மஹாரண்யம் முரளிதர சுவாமிகள் இரு கோயில்களின் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். 
இவ்விழாவில் தமிழக வணிகவரி, பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், ஏசிஎஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.சி. சண்முகம், எம்எல்ஏ எஸ். காத்தவராயன், கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், வட்ட வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் ஜே.கே.என். பழனி, அரசு வழக்குரைஞர் கே.எம். பூபதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வி. ராமு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT